வெள்ளி, 13 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 41

துறவு மேற்கொள்பவரின் மன நிலை எவ்வாறு இருக்க வேண்டும்? மனது தூய்மையோடு இருக்க வேண்டும் அல்லவா? தூய்மை ஒன்றையே நினைத்து அதன் ஒருமையுடன் இருக்கவேண்டும். அவ்வாறு துறவு மேற்கொண்ட ஒருவர் தவறி நடந்தால் என்னவாகும்? அவர் மனம் தடுமாறினால் அவரைப் பற்றி இவ்வுலகம் என்ன நினைக்கும்?  இன்று நாம் படிக்கவிருக்கும் நாலடியார்ப் பாடல் இதனை விளக்குகிறது.



மிகவும் அழகான நபர். அவரைக் கண்டவரை மயக்கும் வண்ணம் அவர் நிறமும் அமைப்பும் இருந்தது. அத்தகைய அழகான ஒருவருக்கு ஈயின் சிறகு அளவுக்கு ஒரு புண் ஏற்பட்டது. புண் மிகச் சிறிதாக இருந்தாலும், அவர் அழகாக இருந்தாலும், அந்தப் புண்ணைக் கொத்த காக்கை வரும். அதனை விரட்ட ஒரு பெரிய கோல் வேண்டும். ஒருவரின் அழகோ நிறமோ ஒருவரின் உடம்பை காக்கை கொத்தாமல் செய்வதில்லை. அவ்வாறான இழிநிலை கொண்ட உடம்பினைப் பார்த்து, பெரியவர்கள், "மாந்தளிரின் நிறம் போன்ற நிறமும் இளமையும் பொருந்திய பெண்ணே"  என்று துதித்துக் கத்துகிற பெரியவர்கள், மிகவும் அற்பமாக, உடம்பைப் பார்ப்பதை இழிவான செயல் என்று நினைக்கமாட்டர்களா? 

உட்கருத்து: துறவு பூண்ட ஒருவர் இழிவான உடம்பை மேன்மையாக நினைத்தல் அசுத்தமேயல்லாது சுத்தமன்று.

பெரியவர் என்று பயன்படுத்தியது வஞ்சப்புகழ்ச்சியணி. 

பாடல்: 

மாக்கேழ் மடநல்லாய் என்றரற்று சான்றவர்
நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை - யாக்கைக்கோர்
ஈச்சிற கன்னதோர் தோல் அறினும் வேண்டுமே
காக்கை கடிவதோர் கோல்.

பதம் பிரித்த பாடல்: 

'மாக் கேழ் மட நல்லாய்!' என்று அரற்றும் சான்றவர்
நோக்கார்கொல், நொய்யது ஓர் புக்கிலை? யாக்கைக்கு ஓர்
ஈச் சிறகு அன்னது ஓர் தோல் அறினும், வேண்டுமே,
காக்கை கடிவது ஓர் கோல்!

அருஞ்சொற்பொருள்: 

கேழ் - நிறங்கொண்ட 
அரற்றும் - கத்தும் - இங்கு துதித்திக் கொண்டாடும் என்ற வகையில் கையாளப்பட்டுள்ளது. 
நொய்யது - இழிவானது 

புதன், 11 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 40

நம் உடம்புக்கும் உயிருக்குமான தொடர்பு வியக்கத் தக்க உறவாகும். உடம்பின் இயக்கத்திற்கு உயிர் வேண்டும். உயிரின் இயக்கத்திற்கு உடம்பு வேண்டும். இது ஒன்றுக்குள் ஒன்று பின்னிப் பிணைந்திருப்பது. இதில் எது நிலைத்திருப்பது? எதனைப் பின் பற்றினால் உடம்பு நிலையாக இருக்கும்? எதனைப் பின் பற்றினால் உயிர் நிலையாக இருக்கும்? நிலையாய் நீடித்திருப்பதற்கு வழி உண்டா?

பல வினாக்கள். பலர் பல காலம் விடை தேடும் வினாக்கள். ஓரளவு விடையளிக்கும் விதமாக ஒரு நாலடியார்ப் பாடல்.



எவ்வகை செயல் செய்து (நல்ல செயல் மட்டுமல்ல, இழிவான செயல் செய்து) உணவு ஈட்டி, அதனால் உடம்பு உறுதி பெற்று, அவ்வுறுதியினால் உடம்பு நீடித்து நிலையாக இருக்கும் என்றால், இந்த நாலடியார்ப் புலவர் யாரும் செய்யத் தயங்கும் செயலையும் செய்வேன் என்கிறார். அது என்ன செயல்? ஒருவருக்கு அணிகலனாக அமைவது ஒருவரின் மானம் ஆகும். மானம் இழந்தால் உயிர் விடும் மாந்தர் பிறந்த இம்மண்ணில், அந்த அணிகலனையே துறந்து, மானமிழந்து, பிச்சையெடுத்து வாழ்வேன் என்கின்றார்.

உட்கருத்து: எவ்வகை உணவு எவ்வழி ஈட்டினும் உடம்பு நிலைத்திருப்பதில்லை. உயிரும் நிலைத்திருப்பதில்லை. அதனால் நிலையாய் இருக்கும் அறச் செயல்களை செய்வோமாக.

பாடல்: 

மான அருங்கலம் நீக்கி இரவென்னும்
ஈன இளிவினால் வாழ்வேன்மன் - ஈனத்தால்
ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந் திவ்வுடம்பு
நீட்டித்து நிற்கும் எனின்.

பதம் பிரித்த பாடல்:

மான அருங் கலம் நீக்கி, இரவு என்னும்
ஈன இளிவினால் வாழ்வேன்மன்-ஈனத்தால்
ஊட்டியக் கண்ணும் உறுதி சேர்ந்து, இவ் உடம்பு
நீட்டித்து நிற்கும் எனின்!

அருஞ்சொற்பொருள்:

அருங்கலம் - அணிகலன்
இரவு - இரத்தல் - பிச்சை எடுத்தல்
ஈன - ஏளனமான
இளிவினால் - இழி தொழிலினால்
ஊட்டியக் கண்ணும் - உண்பித்த இடத்திலும்

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 39

#நாளுமொருநாலடியார் #நாலடியார்

அவன் தன் குழந்தையுடன் விளையாட்டு மைதானத்திற்கு வந்திருந்தான். மாலையின் இளம் வெப்பத்தில், காற்று மெதுவாக வீச, அந்தப்  பொழுது இனிதாக இருந்தது. குழந்தையை ஊஞ்சலில் வைத்து ஆட்டி விட்டான். ஊஞ்சல் மேலே போவதும் கீழே வருவதுமாக இருந்தது. மேலே செல்வது எல்லாம் கீழே வருமா? அனைத்து நிகழ்வுக்கும் எதிர் நிகழ்வு உண்டா? முன்னே செல்லம் பொருள் பின்னே வந்தாக வேண்டுமா? சிந்தனைக்கு வித்திட்டன அந்த வினாக்கள். சிந்தித்துப் பார்த்ததன் முடிவில் அவன் ஒரு முடிவுக்கு வந்தான். அனைத்து நிகழ்வுக்கும் எதிர் நிகழ்வு இருக்கவேண்டும் என்பது இல்லை. அதற்கு எடுத்துக் காட்டாக அவனுக்கு ஒரு நாலடியார்ப் பாடல் நினைவில் வந்தது. அந்தப் பாடல் நேரம் மற்றும் வாழ்நாள் எவ்வாறு ஒரு திசை மட்டும் நோக்கிச் செல்கிறது என்பதைப் பற்றி உணர்த்தியிருக்கும்.



"நாள் தோறும் காலம் (நாட்பொழுது) வந்து தோன்றி மறைவதைப் பார்த்தும், அதனை உணராமல், அறச் செயல்களை செய்யாமல் நம் நேரம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று நினைத்து இன்பச் செயல்கள் மட்டுமே செய்யும் மாந்தரும் இருக்கின்றனர். அம்மாந்தர்கள் நாள்தோறும் தம்முடைய வாழ்நாள் அதிகரித்து ஆயுள் பெருகிக் கொண்டு இருக்கும் என்று நினைத்து வாழ்நாளின் நிலையாமையை உணராதவர்கள் ஆவர்." பாடலின் கருத்தை அசைபோட்ட அவன் அதன் உட்கருத்தை மீண்டும் உள் வாங்கிக்கொண்டான்: இங்கு நமக்குள்ள காலம் மிகச் சிறிது. அந்தக் காலத்தில் அறச் செயல்களும் செய்து இன்புறுவோமாக.

பாடல்:

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.

பதம் பிரித்த பாடல்:

வைகலும் வைகல் வரக்கண்டும், அஃது உணரார்,
வைகலும், வைகலை வைகும் என்று இன்புறுவர்-
வைகலும் வைகல் தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்து உணராதார்.

அருஞ்சொற்பொருள்: 

வைகலும் - நாள்தோறும்
வைகல் - காலம்
வைகும் - நிலைத்திருக்கும்

திங்கள், 9 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் - 38

அன்று வெப்பம் அதிகமாக இருந்தது. பேருந்துக்கு செல்வதற்கு சிறிது தூரம் தானே என்று அவன் நடந்து கொண்டிருந்தபொழுது சற்று அயர்ந்து அந்த ஆல மரத்தின் நிழலில் அமர்ந்தான். சுகமாக இருந்தது. வெயிலின் நடுவில் நிழலின் அருமை நன்றாக இருந்தது. அதன் அருமையில் அயர்ச்சி நீங்க, அந்த ஆலமரத்தை நோக்கும் பொழுது, அவன் மனதுள் நன்றியெண்ணம் எழுந்தது. அம்மரத்திற்கும், அம்மரத்தினை வளர்ந்தததில் பங்கு வகித்த இயற்கைக்கும், அந்த ஆல மரத்தின் விதையினை நட்ட மாந்தருக்கும் நன்றிகள் தன மனதின் வழி, எண்ணங்களின் வழி வழங்கினான். நட்ட நபர் இன்று இல்லை. ஆனால், அவர் நட்ட ஒரு சிறு விதை இவ்வளவு பெரிய மரமாக வளர்ந்து பல தலைமுறையினருக்கு பயன் அளித்து வருகின்றதே என்ற இன்ப வியப்புடன் அவன் அங்கிருந்து புறப்பட்டான்.

ஒரு ஆல விதை சிறிது தான். ஆனால் அந்த விதை நல்லவர் ஒருவரின் கையில் கிடைத்தால், அது செடியாக தழைத்து மரமாக வளர்ந்து அனைவருக்கும் பலகாலம் நிழல் கொடுப்பது போல், அறச் செயல்கள் சிறிய செயல்கள் ஆனாலும், தகுந்த நல்லவர்க்கு சென்று சேரும் பொழுது, அதனால் அடையும் பயன்களின் அளவு, இவ்வுலகின் வானத்தை சிறியதாக்கி விடும்.

பாடல்:   

உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி
இறப்ப நிழற்பயந் தாஅங் - கறப்பயனும்
தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்.

பதம் பிரித்த பாடல்:

உறக்கும் துணையது ஓர் ஆலம் வித்து ஈண்டி,
இறப்ப நிழல் பயந்தாஅங்கு, அறப்பயனும்,
தான் சிறிதுஆயினும், தக்கார் கைப் பட்டக்கால்,
வான் சிறிதாப் போர்த்துவிடும்.

அருஞ்சொற்பொருள்:

உறக்குதல் - சுருங்குதல் ; சிறிதாதல் .
துணையது-அளவினது
ஈண்டி - அடர்ந்து ; இங்குத் தழைத்து என்னும் பொருளில் பயன்படுத்தப் பட்டது.
இறப்ப - மிகவும்
பயந்தாங்கு - கொடுத்தாற்போல
தக்கார்  - தகுதியுடைய பெரியோர்
போர்த்து விடும் - சூழ வைத்துவிடும் 

சனி, 7 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 37

அவள் மெல்லோட்டம் ஓடிய சமயத்தில் வீசிக்கொண்டிருந்த காற்றின் வேகம் சற்று கூடியது. வீசிய காற்று சிறு புழுதியினை சற்றே எழுப்ப கண்களுக்குத் தெரியா நுண்துகள்கள் அவள் மூச்சுக்காற்றுடன் உட்செல்ல இரு தும்மல் தும்மினாள். பல நாட்கள் பலமுறை நடக்கும் நிகழ்வு என்றாலும் அன்று அவளின் தும்மல்கள் அவளைச் சிந்தனை உலகத்திற்கு அழைத்துச் சென்றன. உடம்பின் உறுப்புகள் தான் என்னவொரு அழகாக உடம்பைப் பாதுகாக்கின்றன ? தேவையற்ற நுண்துகள் உட்சென்றால் வெளியேற்ற தும்மல், கிருமி உட்சென்றால் போர்தொடுக்கும் வெள்ளையணுக்கள், சிறு காயம் ஏற்பட்டால் குருதி வெளிச்செல்லாமல் காக்க குருதி உறைதல் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இத்தனை கருவிகளைக் கொண்ட உடம்பு தன்னைத்தானே காத்துக்கொள்ளும். இதனால் தானோ நாலடியார்ப் புலவர் உயிருக்குத் தேவையான செயல்களை உணர்ந்து செய்வது பற்றிப் பாடினார்?



அவளின் மனதினில் அந்த நாலடியார்ப் பாடல் மீண்டும் உதித்தது. "இவ்வுலகில் வாழும் மக்களால் செய்யத்தக்க நற்செயல்கள் என்னவென்று ஆராய்ந்து பார்த்தால், அவ்வாறான செயல்கள் எண்ணில் அடங்காது. அவ்வாறு அத்தனை செயல்கள் இருக்கும் பொழுது, பல கருவிகள் கொண்டு தன்னைக் காத்துக்கொள்ளும் உடம்பக்குத் தேவையான செயல்களைச் செய்யாமல், உயிர் பிறந்து வாழ்ந்ததற்குப் பயனாக நல்ல செயல்களைச் செய்வோமாக. அவ்வாறு நற்செயல்கள் செய்தால் உயிர் இவ்வுடலை விட்டு பிரிந்த பின்னர் மேலுலகத்தில் இன்புறும்" என்பதுதான் அப்பாடலின் கருத்து. 

பாடல்:


மக்களா லாய பெரும்பயனும் ஆயுங்கால்
எத்துணையும் ஆற்றப் பலவானால் - தொக்க
உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகா தும்பர்க்
கிடந்துண்ணப் பண்ணப் படும்.

பதம் பிரித்த பாடல்:

மக்களால் ஆய பெரும் பயனும், ஆயுங்கால்,
எத்துணையும் ஆற்றப் பலஆனால், தொக்க
உடம்பிற்கே ஒப்புரவு செய்து ஒழுகாது, உம்பர்க்
கிடந்து உண்ணப் பண்ணப்படும்.

அருஞ்சொற்பொருள்:

ஆயுங்கால்: எண்ணிப் பார்க்கும் பொழுது
எத்துணையும்: எவ்வளவும்
தொக்க உடம்பிற்கே : கருவிகள் கொண்ட உடம்பிற்கே
ஒப்புரவு: உதவி
உம்பர்க் கிடந்து : மேலுலகத்தில் 

வியாழன், 5 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 36

நமது வாழ்வில் பலவற்றை பற்றி நாம் சிந்திப்போம். பல்வேறு நிகழ்வுகளை மையமாக வைத்து நம் சிந்தனைகள் ஓடிக் கொண்டிருக்கும். நாம் முதன் முதலில் மிதிவண்டி வாங்கியது, முதன் முதலில் தனியாகப் பேருந்தில் சென்றது, கல்லூரியின் முதல் நாள், வேலை அல்லது தொழில் துவங்கிய நாள் .. இவ்வாறு பல நிகழ்வுகள். நாம் இந்த உலகை விட்டு செல்லப்போகும் நாளைப் பற்றி என்றாவது யோசித்திருகின்றோமா? ஒரு சில சமயம் யோசித்திருக்கலாம். ஆனால் அவ்வாறு யோசித்தாலும் வெறும் சில நொடிகள் யோசித்துவிட்டு மற்ற சிந்தனைகளுக்கு தாவி விடுவோம். இதனை உணர்ந்த நாலடியார்ப் புலவர் இப்பாடலின் வழி நமக்கு ஒரு செய்தி சொல்கிறார். என்னவென்று பார்ப்போமா?


நாம் இவ்வுலகை விட்டு விலகுவது இன்றோ, அன்றோ, என்றோ என்று நினைக்காமல் நம் உயிரை எடுத்துச் செல்ல கூற்றுவன் நமக்கப் பின்னால் என்றும் இருக்கின்றான் என்று எண்ணி, தீய செயல்களை உடனே விட்டு விட்டு, மாண்பு மிக்க நல்லவர்கள் போற்றும் நல்ல செயல்களை நம்மால் கூடிய வரையில் செய்வோமாக.  

பாடல்:
இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்
மருவுமின் மாண்டார் அறம்.

பதம் பிரித்த பாடல்:

'இன்றுகொல்? அன்றுகொல்? என்றுகொல்?' என்னாது,
'பின்றையே நின்றது கூற்றம்' என்று எண்ணி,
ஒருவுமின், தீயவை; ஒல்லும் வகையால்
மருவுமின், மாண்டார் அறம்.

அருஞ்சொற்பொருள்:
பின்றையே - பின்னால் 
ஒருவுமின் - விட்டு விடுங்கள் 
ஒல்லும் வகையால் - முடிந்த வரை 
மருவுமின் - சேருங்கள் 
மாண்டார் - மாண்பு மிக்கவர் 

புதன், 4 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 35

சாய்வு நாற்காலியில் சாய்ந்து ஆடிக்கொண்டிருந்தார் அவர். இருக்கப்போவது இன்னும் சில நாட்களா, மாதங்களா இல்லை வருடங்களா என்பது தெரியாது. ஆனால் அவர் அதனைப் பற்றி யோசிக்கவில்லை. தாம் கடந்து வந்த பாதை, பள்ளிப் பருவம், இளமைப் பருவம், இல்லற வாழ்வு என்று நடந்த அனைத்தையும் அசை போட்டுக் கொண்டிருந்தார். தனக்கு உதவிய நண்பர்கள், உறவினர்கள், தன்னுடைய வாழ்வின் தாழ்வுகள், ஏற்றங்கள், என்று அனைத்து நிகழ்வுகளும் கண் முன்னே காட்சியாய் ஓடுவது போல் அவரின் எண்ணங்களில் வலம் வந்தன. வாழ்ந்த வாழ்வு நிறைவாக உள்ளது, வரப்போகும் நிகழ்வான வாழ்வின் இறுதி நாளைப் பற்றி எந்த வித கவலையும் இன்றி இருப்பதை நினைத்து அதற்கான காரணத்தை அலசிக் கொண்டிருந்தார். தன்னுடன் பயணித்த சகமனிதர்களுக்கு தன்னால் இயன்ற நற்செயல்கள் செய்து அவர்களின் வாழ்வில் சிறு அளவில் பங்கேற்றது தான் இவ்வாறான மனப்பாங்கிற்குக் காரணம் என்று முடிவுக்கு வந்தார். அவ்வாறு நற்செயல்கள் செய்ய வில்லை என்றால் இன்று இவ்வாழ்வைப் பற்றிய நிறைவான எண்ணம் வந்திருக்காது என்று முடிவுக்கு வந்தபோது அவருக்கு அந்த நாலடியாப் பாடல் நினைவில் வந்தது.


அது ஒரு சர்க்கரை ஆலை. அதிகாலை வேளையில் கரும்புகள் ஆட்டப்பட்டு அதிலிருந்து சாறு எடுக்கப்பட்டது. அந்தச் சாறு வெல்லக் கட்டியாக மாற்றப்பட்டது. அதன் பிறகு மீதம் இருந்த கரும்பின் சக்கை நெருப்பில் இடப்பட்டன. இதனைக் கண்டவர்கள் அச்சக்கைகள் தீயிலிடப்பட்டதைக் குறித்து மனம் வருந்தவில்லை. ஏன் என்றால் சக்கையாவதற்கு முன் கரும்புகளாய் இருந்த இச்சக்கைகள் தமது சாற்றை வழங்கி வெல்லக்கட்டி மற்றும் சக்கரை உண்டாக்க பயன் பட்டன. இக்கரும்புகள் போல் பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்தவர் இறுதி நாள் வரும்பொழுது வருத்தப் பட மாட்டார்கள். அதே போன்று அவரது உறவினர்கள் இழப்பை நினைத்து வருத்தப்பட்டாலும் அவர் வாழ்ந்த வாழ்வின் பயன்களைப் பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்துகொண்டு அவரது வாழ்வினைக் கொண்டாடுவர்.

பாடல்:

கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார் ;
வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்
வருங்கால் பரிவ திலர்.

பதம் பிரித்த பாடல்:

கரும்பு ஆட்டி, கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பு எழுந்து வேங்கால் துயர் ஆண்டு உழவார்;-
வருந்தி உடம்பின் பயன் கொண்டார், கூற்றம்
வருங்கால் பரிவது இலர்.\

அருஞ்சொற்பொருள்:

வேம்கால் - வேகும் பொழுது
உழவார் - வருந்த மாட்டார்
பரிவது - இரங்குவது

செவ்வாய், 3 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 34

இரு சக்கர வண்டியில் வேகமாக சென்ற அவள் வயல் வெளியின் பசுமை பார்த்து சற்று நின்றாள். இதமான காற்று இனிமையாகத்  தழுவ அக்கரும்புத் தோட்டத்தின் அழகில் மயங்கி சிந்தனையில் ஆழ்ந்தாள். கரும்பின் வாழ்க்கைச் சக்கரம் அவள் சிந்தனையின் மையமாக அமைந்தது.   நன்றாக வளர்ந்தபின் கரும்பு ஆலைக்கு எடுத்துச் செல்லப்படும். தோகை கொய்த பின் அக்கரும்பின் சாறு பிழியப் படும். சாறு இழந்த கரும்பு சக்கையாக மாற அச்சக்கை அப்புறப் படுத்தப் படும். அந்த ஆலையின் வழி பிழியப்பட்ட சாறு வெல்லமாக, சக்கரையாக, சீனியாக என்று பலவிதமான பொருட்களாக மக்களுக்குப் பயன்படும்.


இதனைப் பார்த்துதானோ நம் நாலடியார்ப் புலவர் உவமையாக இதனைக் கையாண்டுள்ளார் என்று எண்ணிய அவள் மனதில் அந்தப் பாடலின் பொருள் உலாவியது. "பெறுவதற்கு அரிதான இந்த உடலைப் பெற்ற நாம், கரும்பு எவ்வாறு பல்லோருக்கும் பயன்பெறும் கரும்புச்சாற்றை தந்துதவியதோ, அது போல நம் உடலின் இயக்கம் இருக்கும் பொழுது பயனுள்ள நல்ல அறச் செயல்களை செய்ய வேண்டும். ஏன் என்றால், சாறு இழந்த கரும்பு எவ்வாறு சக்கையாக தூக்கி எறியப்பட்டதோ அதே போல் நம் உடலில் இருந்து உயிர் பிரிந்தவுடன் உடல் அப்புறப் படுத்தப் படும். அதனால் உயிர் இருந்து உடல் இயக்கம் இருக்கும் பொழுது அறச் செயல்கள் செய்வோமாக". நல்லதொரு நாலடியர்ப் பாடலை நினைவு படுத்திய கரும்புத் தோட்டத்திற்கு நன்றி சொல்லித் துவக்கினாள் தந்து இருசக்கர வண்டியின் இயக்கத்தை. 

பாடல்:

அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்
பெரும்பயனும் ஆற்றவே கொள்க ; - கரும்பூர்ந்த
சாறுபோல் சாலவும் பின்உதவி மற்றதன்
கோதுபோல் போகும் உடம்பு.

பதம் பிரித்த பாடல்:

அரும் பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்,
பெரும் பயனும் ஆற்றவே கொள்க!-கரும்பு ஊர்ந்த
சாறுபோல் சாலவும் பின் உதவி, மற்று அதன்
கோதுபோல் போகும், உடம்பு!

அருஞ்சொற்பொருள்: 

பெற்ற பயத்தால் - பெற்ற ஆக்கம் கொண்டு 
ஆற்றவே - முடிந்தவரை 
ஊர்ந்த - பிழிந்து எடுத்த 
சாலவும் - மிகவும் 
கோது - சக்கை 

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 33


வாழ்க்கையில் அனைத்தும் நல்ல வண்ணம் நடந்து கொண்டிருக்கிறது. இல்லத்தின் நடப்புகள், அலுவல், சுற்றம், நட்பு என்று நம்மைச் சுற்றியுள்ள நடப்புகள் சுமூகமான பாதையில் சென்றுகொண்டிருக்கின்றன. அப்படி இருக்கும் வேளையில் அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில் வெள்ளம் வந்தாற்போல் திடீரென எதிர்பாராவிதமாக துன்பம் நேருகிறது. அதனை எவ்வாறு நாம் சந்திப்போம்? நாம் அதனை ஏற்போமா? ஏற்றால் எவ்வாறு ஏற்போம்? இவ்வினாக்களுக்கு விடை தரும் வகையில் அமைந்துள்ளது இந்த நாலடியார்ப் பாடல்.


எதிர்பாராத விபத்தோ துன்பமோ நேர்கையில் அறிவில் குறைந்த பேதை மாந்தர் அத்துன்பத்தைக் கண்டு உழன்று, பெரு மூச்சு விட்டு, மிகவும் வருத்தப்பட்டு சோர்ந்து நிற்பார். இதனையே அறிவு மிக்க பெரியோர்கள் சந்திக்க நேர்ந்தால் அவர்கள் இத்துன்பம் என்பது நாம் மும்பு செய்த வினையின் பயன் என்று உணர்ந்து, அந்த துன்பத்தில் உழலாது அடுத்து என்ன செய்வது என்று எண்ணி தங்கள் வாழ்வைத் தொடர்வர்.

பாடல்:
வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா
மனத்தின் அழியுமாம் பேதை - நினைத்தனைத்
தொல்லைய தென்றுணர் வாரே தடுமாற்றத்
தெல்லை இகந்தொருவு வார்.

பொருளறிந்து படிக்க பதம் பிரித்த பாடல்:

வினைப் பயன் வந்தக்கால், வெய்ய உயிரா,
மனத்தின் அழியுமாம், பேதை; நினைத்து, அதனைத்
தொல்லையது என்று உணர்வாரே தடுமாற்றத்து
எல்லை இகந்து ஒருவுவார்.

அருஞ்சொற்பொருள்:

வெய்ய உயிரா - கடுமையாக மூச்சு விட்டு
இகந்து ஒருவுவார் - விட்டு விலகுவார்

ஞாயிறு, 1 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 32

இவ்வுலகில் நம் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பயன்படுவதற்காக செல்வம் ஈட்டவும் சேர்க்கவும் துவங்குகிறோம். இப்படித் துவங்கும் செலவம் ஈட்டும் செயல் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை ஆட்கொள்ள ஆரம்பிக்கறது. நாம் நன்றாக இருக்கின்றோம், இன்னும் நன்றாக இருப்போம் என்று எண்ணி செல்வத்தின் மீது அதிக பற்று வைத்து அதனை ஈட்டுவதே நம் வாழ்வின் முழு குறிக்கோளாக மாறிவிடுகிறது. இதனால் நாம் அறம் செய்வதையும் மறந்து, அறம் செய்வதற்கு என்ன அவசரம், இன்றா இறக்கப் போகிறோம் என்று நினைத்து வாழ்கின்றோம்.


மேற்சொன்ன சிந்தனைகள் கொண்டு, ஓயாமல், என்றுமே செல்வம் ஈட்டுவதற்கு உழைக்கும் ஒரு மாந்தர் , இப்பொழுது நல்லபடி வாழ்ந்தாலும், அவருடைய வாழ்நாட்கள் நிறைவு பெற்று, ஓர் நாள் இவ்வுலகை விட்டு செல்லும் நிலை வரும். அப்பொழுது வினாக்கள் சில எழும். நாம் இது வரை நல்ல செயல்கள் என்ன செய்தோம்? எவருக்கு உதவினோம்? அறச் செயல்கள் செய்தோமா? வினாக்கள் எழலாம். விடை கூறவோ அல்லது விடை கூறமுடிவில்லையே என்று நினைத்து நல் வினைகள் செய்யவோ நேரம் இருக்காது.

உட்கருத்து: உலகியல் வாழ்கைக்கு செல்வம் தேவை. ஆனால் செல்வம் ஈட்டுவது மட்டுமே வாழ்க்கை என்று எண்ணாமல் அறச் செயல்களும் செய்வோமாக. 

பாடல்:
 
ஆவாம் நாம் ஆக்கம் நசைஇ அறமறந்து
போவாம்நாம் என்னாப் புலைநெஞ்சே - ஓவாது
தின்றுஞற்றி வாழ்தி எனினும்நின் வாழ்நாள்கள்
சென்றன செய் துரை.

பொருளறிந்து படிக்க பதம் பிரித்த பாடல்:

'ஆவாம் நாம், ஆக்கம் நசைஇ; அறம் மறந்து,
போவாம் நாம்' என்னா,-புலை நெஞ்சே!-ஓவாது
நின்று உஞற்றி வாழ்தி எனினும், நின் வாழ்நாள்கள்
சென்றன; செய்வது உரை.

அருஞ்சொற்பொருள்: 

ஆவாம் - என்றும் இருப்போம் 
நசை - விருப்பம், ஆசை 
போவாம் - போக மாட்டோம் 
என்னா - என்று எண்ணி 
புலை - இழிவு 
ஓவாது - இடைவிடாது 
உஞற்றி - செயலாற்றி ; முயற்சி செய்து