திங்கள், 31 ஆகஸ்ட், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 75

அன்று நடந்த நிகழ்வினை அவனால் நம்ப முடியவில்லை. ஏன் தன் தோழன் அவ்வாறு நடந்து கொண்டான்? அவனுடன்இவ்வளவு நாள் நன்றாக நெருக்கமுடன் பழகியும் அந்த நிகழ்வுக்குக் காரணம் என்ன? இதனைப் பொறுத்துக் கொள்வதா?இல்லை அவனிடம் இதைப் பற்றிப் பேசுவதா? இதனைப் பற்றி பேசினால் பொறுமை இழந்து கோபத்தில் பேசக் கூடாதவார்த்தைகளைப் பேசிவிடுவோமோ? பல வினாக்கள் தன் மனதில் வலம் வர, விடை பகர வந்தது இந்த நாலடியார் பாடல்.



வேறுபாடு இல்லாமல் இருவர் நன்றாகக் கலந்து நட்புடன் பழகிய பின், சரியான செய்கை என்று சான்றோர்களால்போற்றப்படாத இழிவான செயலை ஒருவர் செய்ய நேர்ந்தால், மற்றவர் பொறுத்துக் கொள்ள முடிந்த வரையிலும்பொறுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றால், அந்தக் குற்றத்தைப் பலரும்தெரிந்துகொள்ளுமாறு பழித்துப் பேசாமல், அவரிடம் இருந்து விலகிச் செல்லுதலே நலம் பயக்கும் செயலாகும்.

பாடல்:
வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால்
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்
ஆற்றுந் துணையும் பொறுக்க பொறானாயின்
தூற்றாதே தூர விடல்.


பதம் பிரித்த பாடல்:
வேற்றுமை இன்றிக் கலந்து, இருவர் நட்டக்கால்,
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்,
ஆற்றும் துணையும் பொறுக்க! பொறான் ஆயின்
தூற்றாதே, தூர விடல்!

அருஞ்சொற்பொருள்:
நட்டக்கால் - நேசித்தால்
தேற்றா - தகுதியற்ற
ஆற்றுந் துணையும் - முடித்த அளவும்
தூற்றாதே - பழிக்காதே
தூர விடல் - விலகிச் செல்லுதல்


ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 74

அன்று ஞாயிறு மதியம். மதிய உணவு உண்ட களைப்பில் அவன் சிறு தூக்கம் போட்டு எழுந்தான். மாலை வெயில் இதமாக வீசப் பூங்கா சென்று வரலாம் என்று புறப்பட்டான். பூங்காவில் அவன் நண்பனைச் சந்தித்து நலம் விசாரித்து உரையாடல்கள் தொடர்ந்தன. அப்பொழுது அவன் நண்பன் எதிர்பாராவிதமாக ஒரு கேள்வியைக் கேட்டான் “ வாழ்வில் துன்பம் அடையாமல் வாழ என்ன வழி?” “திடீரென்று இப்படிக் கேட்டால் என்ன சொல்ல, யோசித்துத் தான் சொல்ல வேண்டும்” என்று மெதுவாகக் கூறி கொஞ்சம் யோசிக்க நேரம் உண்டாக்கிக் கொண்டான். “இந்தக் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வது? பல வித கோணங்களில் இதற்குப் பதில் சொல்லலாமே!” என்று யோசிக்கும் பொழுது சட்டென்று அவனுக்கு நினைவில் வந்தது இந்த நாலடியார் பாடல். உடனே அதன் பொருளைக் கூறி பின்பு பாடலையும் கூறினான்.



இவ்வுலகில் அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து கொண்டு, அவ்வாறு அறிந்து கொண்டாலும் அந்த அறிவினால் தலைக் கனம் கொள்ளாமல், அடக்கமாக இருந்து, இவ்வுலகில் பார்த்து அஞ்சுவதற்கு அஞ்சி, இந்த உலகம் இன்புறுமாறு செய்யத் தகுந்தவற்றைச் செய்து, தாம் பெறுகின்ற ஊதியத்தில் இன்புற்று வாழ்ந்தால், எந்த நாளும் துன்பம் இல்லாமல் வாழலாம்.


பாடல்:
அறிவ தறிந்தடங்கி அஞ்சுவ தஞ்சி
உறுவ துலகுவப்பச் செய்து - பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது.

பதம் பிரித்த பாடல்:
அறிவது அறிந்து, அடங்கி, அஞ்சுவது அஞ்சி,
உறுவது உலகு உவப்பச் செய்து, பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்புடையார், எஞ் ஞான்றும்,
துன்புற்று வாழ்தல் அரிது.

அருஞ்சொற்பொருள்:
உறுவது - பொருத்தமான அல்லது தகுந்த செயல்
பெறுவதனால் - தமக்கு கிடைத்த ஊதியம் கொண்டு

சனி, 29 ஆகஸ்ட், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 73

கடுஞ்சொல் எது? சொல்லப்படும் விடயம் நமக்கு அல்லது நம் மனதிற்கு ஏற்புடையதாக இல்லையென்றால் அது கடுஞ்சொல் ஆகுமா? நாம் கேட்க வேண்டும் என்று நாம் நினைப்பவற்றைக் கேட்பது இனிமையான சொல்லாகி விடுமா? கேட்பதற்குக் கடினமாக இருந்தாலும் ஒரு சொல் நல்ல சொல்லாக முடியுமா? கேட்பதற்கு இனிமையாக இருந்தும் ஒரு சொல் கடுஞ் சொல்லாகுமா? இவ்வினாக்களுக்கு விடை தருகின்றது இந்த நாலடியார் பாடல்.



பேரரும்புகள் தேனைக் கொண்டுள்ளதால், அவற்றைச் சுற்றி வண்டுகள் ஆர்ப்பரிக்க, வளம் பொருந்திய கடல் சூழ்ந்த, குளிர் காற்றுடன் நிலவும் கடற்கரையினைக் கொண்ட நாட்டின் தலைவனே! நல்ல அறிவுரை வழங்கும் சான்றோர் இருந்தால், அவ்வகைச் சான்றோர் தங்களின் உள்ளத்தில் உள்ள அன்பினால் நன்மை கருதி சொல்லும் சொல் கேட்பதற்குக் கொடிய சொல்லாக இருந்தாலும் தீயது ஆகாது. அன்பற்ற அயலவர் சொல்லும் சொல் கேட்பதற்கு இனிமையான சொல்லாக இருந்தாலும் அது தீயதாகும். கொடிய சொல், இனிய சொல் என்பது அந்தச் சொல் எதற்காகச் சொல்லப்பட்டது என்றுணர்ந்து, நன்மை பயக்கவேண்டும் என்பதற்காக அறிவுடையோர் சொல்லும் கடுஞ்சொல்லைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

பாடல்:
காதலாற் சொல்லுங் கடுஞ்சொல் உவந்துரைக்கும்
ஏதிலார் இன்சொலின் தீதாமோ - போதெலாம்
மாதர்வண்டு ஆர்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப !
ஆவ தறிவார்ப் பெறின்.

பதம் பிரித்த பாடல்:
காதலார் சொல்லும் கடுஞ் சொல், உவந்து உரைக்கும்
ஏதிலார் இன் சொலின் தீது ஆமோ-போது எலாம்
மாதர் வண்டு ஆர்க்கும் மலி கடல் தண் சேர்ப்ப!-
ஆவது அறிவார்ப் பெறின்?

அருஞ்சொற்பொருள்:
ஏதிலார் - அயலவர், அன்பும் பகைமையும் இல்லாதவர்
மலி - மிகுந்து
தண் - குளிர்ச்சி

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 72

இவ்வுலகில் மனிதர் ஒருவரோடு ஒருவர் நல்லிணக்கம் கொண்டு வாழ நாம் என்ன செய்ய வேண்டும்? அதற்கான நல் வழி எது? தவிர்க்கப் பட வேண்டிய வழி எது? அவ்வாறு வழிதனை வரையறுக்கும்போது இழிவான செயல் என்று எதனைக் குறிப்பிடுகின்றனர்? இதோ இந்த நாலடியார் பாடல் இதனை அழகாக விளக்குகிறது.



அறிவு நிலையில் ஒருவருக்கு நிகரில்லாதவர், நற்குணம் அற்ற சொற்களைக் கூறும்போது, அறிவில் சிறந்த சாண்றோர் என்ன செய்ய வேண்டும்? தகுதி அறிவற்றவர் கூறிய சொற்களைப் பொறுத்துக் கொள்ளுதல் தான் அந்தச் சான்றோருக்கு உரிய தகுதி ஆகும். அவ்வாறு பொறுத்துக் கொள்ளவில்லை என்றால், ஒருவர் சாண்றோராக இருந்தாலும், நீர் சூழ்ந்த நிலப்பரப்பைக் கொண்ட இவ்வுலகம், அவ்வாறான குணத்தைப் புகழுக்கு ஏற்றது இல்லை என்று கூறும். அத்துடன் அந்தக் குணம் பழிப்பதற்கு ஏற்ற இழிகுணம் என்றும் கருதி விடும்.

பாடல்:

நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது
தாரித் திருத்தல் தகுதிமற் -றோரும்
புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம்
சமழ்மையாக் கொண்டு விடும்

பதம் பிரித்த பாடல்:

நேர் அல்லார் நீர் அல்ல சொல்லியக்கால், மற்று அது
தாரித்திருத்தல் தகுதி; மற்று ஓரும்
புகழ்மையாக் கொள்ளாது, பொங்கு நீர் ஞாலம்
சமழ்மையாக் கொண்டுவிடும்.

அருஞ்சொற்பொருள்:

தாரித்து இருத்தல் - பொறுத்துக் கொள்ளுதல்
சமழ்மை - இழிகுணம்

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 71

எப்பொழுதும் அவன் யாருடன் பேசுகிறோம் என்று சிந்தித்துத் தான் பேசுவான். அன்றைக்குப் பூங்காவில் நடந்து முடித்த பிறகு, நெருங்கிப் பழகாத ஒருவரிடம் பேசத் துவங்கினான். சிறிது நேரம் சென்ற பின் தான் அவன் செய்த தவறு அவனுக்குப் புரிந்தது. அவன் பேசத் துவங்கிய உடன் அந்த நபர் இழிவான சொற்களையும், இழிவான செயல்களைப் பற்றியும் பேசத் தொடங்கினார். அடடா, நாம் சிறு வயதில் படித்த நாலடியார் பாடலின் வழி நடந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்காதே என்று எண்ணினான். 




இதோ அந்தப் பாடலின் பொருள்: மலையினை மாலை போன்று அருவி தழுவியதால் குளிர் அடைந்த மலையினைக் கொண்ட நாட்டைச் சார்ந்தவரே, அறிவில்லாத நபரிடம் பேசுவதைத் தவிர்க்கவும். அறிவில்லாதவரிடம் பேசினால் அவர் முறை தவறி எதிர்த்துப் பேசுவார். அதனால் முடிந்த வரை, அறிவில்லாதவரிடம் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.


பாடல்:
கோதை யருவிக் குளிர்வரை நன்னாட
பேதையோ டியாதும் உரையற்க - பேதை
உரைப்பிற் சிதைந்துரைக்கும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று.

பதம் பிரித்த பாடல்:

கோதை அருவிக் குளிர் வரை நல் நாட!
பேதையோடு யாதும் உரையற்க! பேதை,
உரைக்கின், சிதைந்து உரைக்கும்; ஒல்லும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று

அருஞ்சொற்பொருள்:

கோதை - பூமாலை
சிதைந்து - முறை தவறி
ஒல்லும் வகையான் - முடிந்த வழிகளில்

கழிதல் - தவிர்த்தல்

வெள்ளி, 19 ஜூன், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 70

நாலடியார்ப் பாடல்களில் நகைச்சுவை உண்டா? நாம் பள்ளிகளில் படித்த பாடல்களில் பொருள் பொதிந்து பல பாடல்கள் படித்துள்ளோம். ஆனால் நம்மை சிரிக்க வைத்து பின்பு சிந்திக்க வைத்த நாலடியார்ப் பாடல்கள் படித்தது இல்லை. இன்று நாம் பார்க்கப் போகும் பாடல் ஒரு நகைச்சுவை மிகுந்த உவமையினை கொண்டுள்ளது. கதிரவனையும் நாயையும் இணைத்து வரும் சொலவடை கேட்டுள்ளோம். இப்பாடலின் உவமையில் நாயையும் மனிதரையும் இணைத்து கையாண்டுள்ளார் புலவர்.



கோபம் கொண்டு ஒரு நாய், தன் சினம் மிகுதியால், ஒருவரின் உடம்பைக் கடித்து தசையைப் பிடுங்கினாலும், நாய் நம்மை இவ்வாறு துன்புறுத்திவிட்டதே என்று அந்த நாயை திருப்பிக் கடிக்கும் மனிதர் இவ்வுலகில் இல்லை. அது போல, அறிவில் குறைந்த கீழானவர் தகுதி குறைந்த தாழ்வான சொற்களைக் கூறும்பொழுது அறிவிற் சிறந்த மேன் மக்கள் தமது வாயினால் அந்த தாழ்வான சொற்களைச் சொல்வார்களோ?

பாடல்:

கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டும் தம்வாயாற்
பேர்த்துநாய் கௌவினார் ஈங்கில்லை - நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு.

பதம் பிரித்த பாடல்:

கூர்த்து நாய் கௌவிக் கொளக் கண்டும், தம் வாயால்
பேர்த்து நாய் கௌவினார் ஈங்கு இல்லை; நீர்த்து அன்றிக்
கீழ்மக்கள் கீழ் ஆய சொல்லியக்கால், சொல்பவோ,
மேன்மக்கள் தம் வாயால் மீட்டு?

அருஞ்சொற்பொருள்:

கூர்த்து - சினம் மிகுந்து
பேர்த்து - திருப்பி
நீர்த்து - தகுதி

இது வரை வெளியிடப்பட்ட பாடல்கள் மற்றும் கருத்துகளின் தொகுப்பினைப் படிக்க: http://thamizhvaan.blogspot.com

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 69

ஒருவர் உயர்ந்தோர் என்று எப்பொழுது கருதப் படுவார்? கல்வியில் சிறந்து விளங்கும் போதா? அல்லது கல்வியில் சிறந்து அதனை மற்றவருக்குக் கற்பிக்கும் பொழுதா? செல்வச் செழிப்பில் கொழிக்கும் பொழுதா? இல்லை அச்செல்வம் கொழிக்கின்ற காரணத்தால் அதனை மற்றவருக்குக் கொடையாகக் கொடுக்கும் பொழுதா? வான் அளவு உயர்ந்த புகழ் கொண்டவர் என்று ஒருவர் புகழப் பட அவருக்கு இருக்க வேண்டிய இயல்பு என்ன?  விடை தருகின்றது இந்த நாலடியார்ப் பாடல்.



ஒருவர் தமக்கு நல்லது செய்ததை நினைக்காமல் அவ்வாறு நல்ல செயல் செய்தவருக்கே ஒருவர் தீங்கு மிகுதியாக செய்தாலும், அவ்வாறு தீங்கு செய்தவருக்கு நல்ல செயல் மட்டுமே செய்து தவறியும் அவருக்கு தீய செயல்களை செய்ய மாட்டார்கள் வான் புகழ் கொண்ட உயர்ந்தோர்.

“தவறியும் தீங்கு இழைக்க மாட்டார்கள்" என்று கூற்றினால், பெரியோரின்  இயற்கை குணம் எப்பொழுதும் நன்மை செய்வது என்கின்றார் இந்த நாலடியார்ப் புலவர்.


பாடல்: 

உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம்
தாம்செய்வ தல்லால் தவற்றினால் தீங்கூக்கல்
வான்தோய் குடிப்பிறந்தார்க் கில்.

பதம் பிரித்த பாடல்: 

உபகாரம் செய்ததனை ஓராதே, தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும், உபகாரம்
தாம் செய்வது அல்லால், தவற்றினால் தீங்கு ஊக்கல்
வான் தோய் குடிப் பிறந்தார்க்கு இல்.

அருஞ்சொற்பொருள்:
உபகாரம் - நன்மை
ஓராதே - நினைக்காமல்
தங்கண் - தம்மிடம்
அபகாரம் - தீய செயல்
ஆற்ற - மிகுதியாக


இது வரை வெளியிடப்பட்ட பாடல்கள் மற்றும் கருத்துகளின் தொகுப்பினைப் படிக்க: http://thamizhvaan.blogspot.com

புதன், 17 ஜூன், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 68

அலுவலகத்தில் அன்றைய தினம் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு பரபரப்பாக அலுவல்கள் நடந்து கொண்டிருந்தன. ஓர் அறையில் ஒரு கூட்டத்தை முடித்து வெளிவரும்பொழுது தான், அவன் அந்தக் காட்சியைப் பார்த்தான். நிறுவனத்தின் உபதலைவர் ஒரு தொழிலாளியிடம் கார சாரமாக பேசிக் கொண்டிருந்தார். எப்பொழுதும் அமைதியாகத்தானே இருப்பார் என்று மனதில் நினைத்துக் கொண்டு அவன் தன் அறையினுள் நுழைந்தான். சில நிமிடங்கள் கழித்து தேநீர் அருந்தச் செல்லும் பொழுது, கோபத்துடன் பேசிய உபதலைவர் அந்த தொழிலாளியிடம் மிகவும் கனிவாக பேசிக் கொண்டிருந்தார். அதனைப் பார்த்த அவனுக்கு நினைவில் வந்தது இந்த நாலடியார்ப் பாடல்.



நீர் பொதுவாக எப்பொழுதும் தண்மை கொண்டது. அதனால் தான் தண்ணீர் என்கின்றோம். அந்த நீர் சுட வைக்கும் பொழுது தண்மை நீங்கி, சூடேறி, வெந்நீர் ஆக மாறும். அவ்வாறு மாறிய வெந்நீர் சிறிது நேரம் கழித்து, சூடு இறங்கி தண்ணீராக மாறிவிடும். அது போல அறிவிற் சிறந்த சான்றோர், ஏதோவொரு காரணத்திற்காக கோபம் கொண்டாலும், அந்த கோபம் சிறிது நேரத்தில் தணிந்து விடும். ஆனால், அறிவில் கீழானவர், கோபம் அடைந்தார்கள் என்றால், அவர்கள் எவ்வளவு நாட்கள் ஆனாலும், அவர்கள் கோபம் தீராது.

கோபம் வருவது மனிதற்கு இயல்பான பண்பு, அதனை எவ்வாறு கையாளுகிறோம் என்பதை வைத்து அவர் அறிவிற் சிறந்த சான்றோரா இல்லையா என்று தெரிய வரும்.

பாடல்:

நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி
கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - அடுங்காலை
நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே
சீர்கொண்ட சான்றோர் சினம்.

பதம் பிரித்த பாடல்:

நெடுங் காலம் ஓடினும், நீசர் வெகுளி
கெடும் காலம் இன்றிப் பரக்கும்; அடும் காலை
நீர் கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே
சீர் கொண்ட சான்றோர் சினம்.

அருஞ்சொற்பொருள்:

நீசர் - அறிவில் குறைந்த கீழானவர்
பரக்கும் - பெருகும்
அடும் - சுடும்


நாளும் ஒரு நாலடியார் : பாடல் 67

ஒருவர் ஒரு செயலை செய்யத் தக்கவர் என்று எப்பொழுது மதிக்கப் படுவார்? அவர் ஒரு செயலை செய்ய முடியாதவர் என்று எப்பொழுது மதிக்கப் படுவார்? செய்யப் படும் செயலின் தன்மைக்கும் இவ்வாறு மதிப்பிடப் படுவதற்கும் தொடர்பு உண்டா? நன்மையை உண்டாக்கும் செயலுக்கும் தீமையை உண்டாக்கும் செயலுக்கும் வேறுபாடு உண்டா? இருக்கின்றது என்கின்றது இந்த நாலடியார்ப் பாடல்.



ஒருவர் நம் முன் பகைமையை வெளிப்படுத்தி நடந்துகொள்ளும் பொழுது, ஒருவர் அவரிடம் பகைமை பாராட்டவில்லை என்றால் அதனை இயலாமை என்று அறிவில் சிறந்த பெரியோர் கூற மாட்டார்கள். எனவே, ஒருவர் தம் பகையைக் கட்டுப் படுத்தாமல், துன்பம் விளைவிக்கக் கூடிய செயல்களைச் செய்தால், நாம் அவருக்கு திருப்பி துன்பங்கள் செய்யாமல் இருப்பது நல்லது.

இதனைத் தான் திருவள்ளுவர்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்துவிடல்

என்று கூறுகின்றார்.



பாடல்: 

மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க் கேலாமை
ஆற்றாமை என்னார் அறிவுடையார் - ஆற்றாமை
நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாம் அவரைப்
பேர்த்தின்னா செய்யாமை நன்று.

பதம் பிரித்த பாடல்: 

மாற்றாராய் நின்று, தம் மாறு ஏற்பார்க்கு ஏலாமை,
'ஆற்றாமை' என்னார், அறிவுடையார்; ஆற்றாமை
நேர்த்து, இன்னா மற்று அவர் செய்தக்கால், தாம் அவரைப்
பேர்த்து இன்னா செய்யாமை நன்று.

அருஞ்சொற்பொருள்:

மாற்றாராய் - பகைவராய்
மாறு - பகைமை
ஏலாமை - செய்யாமை
ஆற்றாமை - இயலாமை
பேர்த்து - திருப்பி

ஞாயிறு, 14 ஜூன், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 66

வார இறுதியினை இயற்கையோடு செலவிடலாம் என்று அவள் நினைத்து, காணகத்தில் தங்குவதற்குத் தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அவள் தன் மகிழுந்துவில் பயணிக்கத் துவங்கினாள். ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பின் தங்க வேண்டிய இடம் வந்தடைந்தாள். தங்கும் கொட்டகையை நிலத்தில் பதித்த பின், கோடை கால இள வெயிலில் தென்றல் காற்று இதமாக வருட ஒரு சுற்று நடக்கத் துவங்கினாள். காட்டிற்குள் சென்ற அவள், அதன் உட்புதரில் நாகம் ஒன்றைக் கண்டாள். அந்த நாகம் அமைதியாக இருந்தது. அதே நாகம் சீற்றம் கொண்டால் எவ்வாறு இருக்கும் என்று நினைத்துப் பார்த்தாள். அப்பொழுது சீற்றம் இல்லாத அமைதியான நாகம் உவமையாக பயன்படுத்தப் பட்ட நாலடியார்ப் பாடல் அவள் மனதினில் வலம் வந்தது.



சீறி வரும் நாகம் மந்திரிக்கப் பட்ட திருநீற்றால் அமைதியடையும் என்ற நம்பிக்கை இருந்தது. அவ்வாறு இருக்கும் நாகம் எப்படி அமைதியாக இருக்குமோ, அது போன்று குணத்தில் பெரியோர், தங்களது குலப் பெருமை கருதி, குணத்தில் தாழ்ந்து இருக்கும் கயவர் தீமையான சொற்களை, தங்கள் மீது கற்கள் எறிவது போல், எல்லோர் முன்னிலையில் பேசினாலும், அவர்கள் பொறுமையாக இருப்பர்.

பாடல்:
கல்லெறிந் தன்ன கயவர்வாய் இன்னாச்சொல்
எல்லாருங் காணப் பொறுத்துய்ப்பர் - ஒல்லை
இடுநீற்றால் பைஅவிந்த நாகம்போல் தத்தம்
குடிமையான் வாதிக்கப் பட்டு.

பதம் பிரித்த பாடல்:
கல் எறிந்தன்ன கயவர் வாய் இன்னாச் சொல்
எல்லாரும் காணப் பொறுத்து, உய்ப்பர்-ஒல்லை,
இடு நீற்றால் பை அவிந்த நாகம்போல், தம்தம்
குடிமையான் வாதிக்கப்பட்டு.

அருஞ்சொற்பொருள்:
ஒல்லை - விரைவாக
பை அவிந்த - படம் சுருங்கி சினம் அடங்கிய
வாதிக்கப் பட்டு - தடை செய்யப் பட்டு