வியாழன், 26 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு நாலடியார்: பாடல் 30

கார் காலம் முடிந்து வசந்த காலம் துவங்கியது. சில மரங்கள் பசுந்தளிருடன் காட்சியளித்தன. சில மரங்கள் பசுந்தளிர்கள் மட்டுமல்லாது மலர்களையும் தாங்கி மனதுக்கு இதமளித்தன. பசுந்தளிர்களுடனும் மலர்களுடனும் இணைந்தன பல பறவையினங்கள். அவ்வப்போது சில பறவைகள் வந்தன, சில பறவைகள் தாங்கள் தங்கியிருந்த கூடுகளை விட்டு விலகிச் சென்றன. அவை வந்து தங்கிய காரணம் தங்களது குஞ்சுகளை பொரித்து, வளர்க்க. அந்த காரியம் முடிந்தவுடன் அவை விலகிச் சென்றன.


கேளாமல் வந்து விட்டு சும்மா கூடுகளை விட்டுச் செல்லும் பறவைகள் போல், கேளாமல் வந்து சுற்றத்தாருக்கு சுற்றமாய் இல்லத்தில் வந்து தோன்றி, தங்களது சுற்றத்தார் வருத்தப்பட தங்களது உடம்பை பிறந்த இல்லத்தில் விட்டுவிட்டு, இவ்வுலகில் இருந்து பிரிவர் மனிதர். இப்பாடலில் உள்ளுரை உவமும் எடுத்தாளப்பட்டுள்ளது. எவ்வாறு பறவைகள் தாங்கள் மரத்தின் கூட்டில் தங்கள் குஞ்சுகள் பிறக்கத் தங்குகின்றனவோ, அது போல் நாம் இவ்வுகத்தில் உயிருடன் இருக்கும் பொழுது மற்றவருக்கு உதவி செய்ய வேண்டும். 

பாடல்:

கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி
வாளாதே போவரால் மாந்தர்கள் - வாளாதே
சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல
யாக்கை தமர்க்கொழிய நீத்து.

பொருளறிந்து படிக்க சொல் பிரித்த பாடல்:

கேளாதே வந்து, கிளைகளாய் இல் தோன்றி,
வாளாதே போவரால், மாந்தர்கள்-வாளாதே.
சேக்கை மரன் ஒழியச் சேண் நீங்கு புள் போல,
யாக்கை தமர்க்கு ஒழிய நீத்து.

அருஞ்சொற்பொருள்:

வாளாதே - வாளா - மௌனமாய்
சேக்கை - பறவைக் கூடு 
சேன் - சேய்மை - வெகு தூரத்தில் 
புள் - பறவை 
தமர்க்கு - பெற்றோர்க்கு, உறவினர்க்கு 

2 கருத்துகள்:

  1. மிகவும் நல்ல முயற்சி. தொடருங்கள். ஒரு நல்ல புத்தகமாக ஆக்கலாம். ஆங்கில மொழியாக்கத்தையும் உள்ளிட்டீர்களென்றால் இன்னும் சிறப்பாக இருக்கும். உங்கள் சொற்களால் ஒரு முன்னுரையும் அளிப்பீர்கள் என நினைக்கிறேன். நன்றி!
    உ.ம்.
    http://snsriramadesikan.com/naaladiyar.html#Naaladiyar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய திரு சுந்தரவடிவேல், உங்களின் கனிவான வார்த்தைகளுக்கும் ஊக்கத்திற்கும் மிகக் நன்றி. ஆங்கில மொழியாக்கத்தையும் இனி இணைக்கின்றேன்.

      நீக்கு