புதன், 9 செப்டம்பர், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 79

எவை நன்றாக முடிகிறதோ அவை நன்றே (All is well that ends well) என்ற ஆங்கிலப் பொன் மொழியை நீங்கள்கேட்டிருக்கலாம். ஒரு செயலின் பயன் நன்மையில் முடியும் என்றால், அதன் வழி எவ்வழியானாலும் சரியா? நன்மையாஇல்லையா என்பது முடிவில் தான் தெரியும் என்றால், நன்மை கட்டாயம் வரும் என்பது உறுதியில்லை அல்லவா?அப்படியென்றால், செல்கின்ற வழியும் நல்லதாக இருக்க வேண்டாமா? ஒருவர் இன்பம் அடைவதற்கு பல வழிகள்இருக்கலாம். எந்த வழியைத் தேர்ந்தெடுப்பது? பாடலின் விளக்கத்தைப் பார்க்கலாம்.



ஓங்கி உயர்ந்த மலையில் இருந்து விழும் அருவிகளைக் கொண்ட நாட்டைச் சேர்ந்தவனே! இழிவு வந்தாலும் இன்பம்உண்டான காரணத்தால் அதன் பக்கம் இருக்கின்றவனே, இன்பம் தொடர்ந்து அமையும் என்றாலும், உலகம் பழிக்காதவழியில்லை என்றால் அது பயணிக்கத் தக்கது அல்ல. இன்பம் இல்லையென்றாலும், பழி இல்லாத பாதையே சிறந்த பாதை

பாடல்:
இன்பம் பயந்தாங் கிழிவு தலவைரினும்
இன்பத்தின் பக்கம் இருந்தைக்க - இன்பம்
ஒழியாமை கண்டாலும் ஓங்கருவி நாட !
பழியாகா ஆறே தலை.

பதம் பிரித்த பாடல்:
இன்பம் பயந்தாங்கு இழிவு தலைவரினும்,
இன்பத்தின் பக்கம் இருந்தைக்க! இன்பம்
ஒழியாமை கண்டாலும்-ஓங்கு அருவி நாட!-
பழி ஆகா ஆறே தலை.

அருஞ்சொற்பொருள்:
பயந்து - உண்டாகி
ஆறே - வழியே


திங்கள், 7 செப்டம்பர், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 78


ஒருவருக்குத் தாங்க முடியாத பசி. அந்தப் பசி எப்படி இருக்கிறது என்றால் ஆறாத வெந்நீர் எப்படிச் சுடுமோ அது போன்று தாங்க முடியாத பசி. அப்படிப் பசி இருக்கும் போது அவர் என்ன செய்ய வேண்டும்? யாரிடமாவது சொல்லலாமா? அப்படிச் சொல்வதென்றால் யாரிடம் சொல்வது? இவற்றுக்கு மிக அழகாக விடையளிக்கிறது இப்பாடல். 


ஆறாத வெந்நீர் சுடும்படி பசித்தாலும் ஒருவர் அதனைப் பொருத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், தங்களது இல்லாமையை தீர்க்க வல்ல நல்ல பண்பாளர்களிடம் உரைக்க வேண்டும். தங்களது குறையைக் களைய மனமற்ற பண்பு இல்லாதவரிடம், இல்லாமையைக் கூறாமல் இருப்பதே நல்லது.

பாடல்:
வற்றிமற் றாற்றப் பசிப்பினும் பண்பிலார்க்கு
அற்றம் அறிய உரையற்க - அற்றம்
மறைக்குந் துணையார்க் குரைப்பவே தம்மைத்
துறக்குந் துணிவிலா தார்.

பதம் பிரித்த பாடல்:
வற்றி, மற்று ஆற்றப் பசிப்பினும், பண்பு இலார்க்கு
அற்றம் அறிய உரையற்க! அற்றம்
மறைக்கும் துணையார்க்கு உரைப்பவே, தம்மைத்
துறக்கும் துணிவு இலாதார்.

அருஞ்சொற்பொருள்:
வற்றி - நீர் சுட வைக்கும் பொழுது வற்றுதல், பசியால் மெலிதல்
ஆற்ற - மிகுந்த
அற்றம் - இல்லாமை

புதன், 2 செப்டம்பர், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 77

அன்று இரவு தனது தோழியின் வீட்டில் கூட்டாஞ்சோறு. தான் சமைக்க நேரம் இல்லாத காரணத்தால் சாப்பிடத்தேவையான தட்டுகள் மற்றும் கரண்டிகளை வாங்கி வருவதாகச் சொல்லியிருந்தாள். அலுவலகத்தில் தன் குழுவில் இருக்கும் நிர்வாகிகளுடன் இருந்த சந்திப்பு முடிந்தவுடன், விரைவாகப் புறப்பட்டு, செல்லும் வழியில் ஒரு பலசரக்குகடையில் தட்டுகளையும் கரண்டிகளையும் வாங்கிச் சென்றாள். அவள் செல்வதற்கும், அனைவரும் சாப்பிடத்துவங்குவதற்கும் சரியாக இருந்தது. அந்த விருந்துக்கு மற்றவர்கள் வருவார்கள் என்று தெரியும். ஆனால் இவ்வளவு பேர்வருவார்கள் என்று அவள் நினைக்கவில்லை. அனைவரும் தனது தோழியிடம் மிகவும் நெருங்கி, அன்புடன் பழகும் நபர்கள்.அவர்களைப் பார்த்தவுடன் அவளுக்குள் ஒரு கேள்வி எழுந்தது.. இவ்வளவு நல்ல நண்பர்கள் தன் தோழிக்கு அமையக்காரணம் என்ன? ஒரு நிமிடம் கூட யோசிக்கவில்லை, அவளுக்கு விடை தெரிந்துவிட்டது. அவள் எண்ணத்தில் தோன்றிய விடை கீழ் வரும் நாலடியார்ப் பாடலில் அழகாக விளக்கப் படுகின்றது.



ஓல் என ஒலிக்கும் அருவியினைத் தழுவி நிற்கும் உயர்ந்த மலைகளை உடைய நாட்டில் வாழ்பவனே, நல்ல செயல்கள்செய்யும் ஒருவருக்கு நண்பர்கள் அமைவது அரிதாகுமோ? ஆகாது. ஏன் என்றால்,அவ்வாறு நல்லது செய்யும் பெரியோர்செய்யக் கூடாத செயல்களைச் செய்தாலும் நண்பர்கள் என்பதால் பொறுத்துக் கொள்வர். அதன் காரணமாக அவரின்நட்பினைப் பெற அவரை நாடி வரைவார்கள்.


பாடல்: 
பெரியார் பெருநட்புக் கோடல்தாம் செய்த
அரிய பொறுப்பஎன் றன்றோ - அரியரோ
ஒல்லென் அருவி உயர்வரை நன்னாட
நல்லசெய் வார்க்குத் தமர்.

பதம் பிரித்த பாடல்: 
பெரியார் பெரு நட்புக் கோடல், தாம் செய்த
அரிய பொறுப்ப என்று அன்றோ? அரியரோ-
ஒல்லென் அருவி உயர் வரை நல் நாட!-
நல்ல செய்வார்க்குத் தமர்?


அருஞ்சொற்பொருள்: 
கோடல் - கொள்ளுதல்
ஒல் - ஒல் என்ற சத்தத்தைக் குறிக்கும் சொல்
உயர் வரை - உயர்ந்த மலை
தமர் - நண்பர் 

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 76

நாம் ஒருவரிடம் நன்றாகப் பழகி விட்டோம். எப்பொழுதும் அவர் நன்றாக நம்மிடம் நடந்து கொள்கிறார். திடீரென்று ஒருநாள் அவர் நமக்கு இன்னல் விளைவிக்கும் செயலை செய்து விடுகிறார். அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்? அந்தஇனிமையற்ற செயலும் இனிய செயலாக மாறுவதற்கு வழி இருக்கிறதா? இருக்கின்றது என்று உணர்த்துகின்றது இந்தநாலடியார் பாடல்.



ஒருவர் இனிமையற்ற செயலைச் செய்தாலும், அது இனியதாக முடியும். எப்பொழுது இனியதாக முடியும்? நாம் அவர்செய்த இன்னலைப் பொறுத்துக் கொண்டு இருக்கும் பொழுது, அது இனியதாக முடியும். காடுகள் சூழ்ந்திருக்கும் நாட்டினில்வாழ்பவனே, நன்றாகப் பழகிவிட்டு ஒரு இனிமையற்ற செயலின் காரணமாக, நன்றாகப் பழகியவரிடம் இருந்து விலகுதல்என்பது விலங்குகளுக்கும் அரிய பண்பாகும். அப்படி இருக்கும் போது, மனிதர் அப்பண்பினைக் கடைப்பிடிக்கலாமா? கூடாது.

இங்கு நாம் அனைவரும் படித்த

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்

என்ற திருக்குறள் இதனுடன் ஒத்த கருத்துள்ளது. ஆனால், இந்த நாலடியாரைப் படித்தவுடன், இன்னலுக்குப் பின், அதனைப்பொறுத்துக் கொள்ளுதலும் நன்னயங்களில் ஒன்று என்று தோன்றுகிறது.


பாடல்:
இன்னா செயினும் இனிய ஒழிகென்று
தன்னையே தான்நோவின் அல்லது - துன்னிக்
கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட
விலங்கிற்கும் விள்ளல் அரிது.

பதம் பிரித்த பாடல்:
'இன்னா செயினும், இனிய ஒழிக! என்று,
தன்னையே தான் நோவின் அல்லது, துன்னிக்
கலந்தாரைக் கைவிடுதல்-கானக நாட!

விலங்கிற்கும் விள்ளல் அரிது!

அருஞ்சொற்பொருள்:
துன்னிக் கலந்தாரை - நெருங்கிப் பழகியவரை
விள்ளல் - பிரிதல்