செவ்வாய், 1 செப்டம்பர், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 76

நாம் ஒருவரிடம் நன்றாகப் பழகி விட்டோம். எப்பொழுதும் அவர் நன்றாக நம்மிடம் நடந்து கொள்கிறார். திடீரென்று ஒருநாள் அவர் நமக்கு இன்னல் விளைவிக்கும் செயலை செய்து விடுகிறார். அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்? அந்தஇனிமையற்ற செயலும் இனிய செயலாக மாறுவதற்கு வழி இருக்கிறதா? இருக்கின்றது என்று உணர்த்துகின்றது இந்தநாலடியார் பாடல்.



ஒருவர் இனிமையற்ற செயலைச் செய்தாலும், அது இனியதாக முடியும். எப்பொழுது இனியதாக முடியும்? நாம் அவர்செய்த இன்னலைப் பொறுத்துக் கொண்டு இருக்கும் பொழுது, அது இனியதாக முடியும். காடுகள் சூழ்ந்திருக்கும் நாட்டினில்வாழ்பவனே, நன்றாகப் பழகிவிட்டு ஒரு இனிமையற்ற செயலின் காரணமாக, நன்றாகப் பழகியவரிடம் இருந்து விலகுதல்என்பது விலங்குகளுக்கும் அரிய பண்பாகும். அப்படி இருக்கும் போது, மனிதர் அப்பண்பினைக் கடைப்பிடிக்கலாமா? கூடாது.

இங்கு நாம் அனைவரும் படித்த

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்

என்ற திருக்குறள் இதனுடன் ஒத்த கருத்துள்ளது. ஆனால், இந்த நாலடியாரைப் படித்தவுடன், இன்னலுக்குப் பின், அதனைப்பொறுத்துக் கொள்ளுதலும் நன்னயங்களில் ஒன்று என்று தோன்றுகிறது.


பாடல்:
இன்னா செயினும் இனிய ஒழிகென்று
தன்னையே தான்நோவின் அல்லது - துன்னிக்
கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட
விலங்கிற்கும் விள்ளல் அரிது.

பதம் பிரித்த பாடல்:
'இன்னா செயினும், இனிய ஒழிக! என்று,
தன்னையே தான் நோவின் அல்லது, துன்னிக்
கலந்தாரைக் கைவிடுதல்-கானக நாட!

விலங்கிற்கும் விள்ளல் அரிது!

அருஞ்சொற்பொருள்:
துன்னிக் கலந்தாரை - நெருங்கிப் பழகியவரை
விள்ளல் - பிரிதல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக