வியாழன், 30 ஏப்ரல், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 65

பொறுமையினை வரையருக்க வரும் இப்பாடல் புலன் அடக்கத்தில் துவங்குகிறது. ஒருவர்,  இளமைக் காலத்தில் தங்களின் ஐந்து புலன்களுக்கும்  மிக எளிதாக அடிமைப் பட்டு விடுவர். அவரே முதியவராகும் பொழுது புலனடக்கம் என்பது எளிதாகின்றது. ஆனால், உண்மையான புலனடக்கம் என்பது ஒருவர் இளையவராக இருக்கும் பொழுது அடக்குவதே என்று விவரிக்கிறது இப்பாடல்.

கொடை என்பது யாது? ஒருவரிடம் பொருள் குறைந்து இருக்கும் நிலையில், அவர் மற்றவருக்கு உதவி செய்வாரானால், அதுவே கொடை எனப்படும் என்று விளக்குகின்றது இந்தப் பாடல். இருக்கும் பொழுது கொடுப்பது எளிது. இல்லாமையில் வாடும் பொழுது ஈகை செய்யும் மனிதரே கொடை குணம் கொண்டவர்.



இதே போன்று, அனைவரையும் அடக்கி ஆள்கின்ற வலிமை உடைய ஒருவர், அவ்வாறு செய்யாமல், தனது வலிமையினை அடக்கி சினம் கொள்ளாமல், பொறுமையாக இருப்பார்களானால், அவரே பொறுமையினை கடைபிடிப்பவர். அந்த வலிமை உடல் வலிமையாக இருக்கலாம். அறிவின் வழி வரும் வலிமையாகவும் இருக்கலாம்.  

இப்பாடலைப் படிக்கும் பொழுது “பதவி வரும் போது, பணிவு வரவேண்டும் தோழா” என்ற கவிஞர் வாலி வரகுளின் வரிகள் நினைவுக்கு வருகிறது.

பாடல்:
இளையான் அடக்கம் அடக்கம் கிளைபொருள்
இல்லான் கொடையே கொடைப்பயன் - எல்லாம்
ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன்
பொறுக்கும் பொறையே பொறை.

பதம் பிரித்த பாடல்:
இளையான் அடக்கம் அடக்கம்; கிளை பொருள்
இல்லான் கொடையே கொடைப் பயன்; எல்லாம்
ஒறுக்கும் மதுகை உரனுடையாளன்
பொறுக்கும் பொறையே பொறை.

அருஞ்சொற்பொருள்:
ஒறுக்கும் - அடக்கியாள்கின்ற
மதுகை - வலிமை
உறனுடயாளன் - உடையவன்
பொறை - பொறுமை

திங்கள், 27 ஏப்ரல், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 64

சான்றோரை மேன் மக்கள் என்றும் சான்றோர் அல்லாதவரை கீழ் மக்கள் என்று சொல்வர் நம் முன்னோர். சான்றோராரை நாம் எவ்வாறு கண்டு பிடிப்பது? இதற்கு பல விடைகள், பல விளக்கங்கள் உண்டு நம் பழம்பெரும் தமிழிலக்கியத்தில். தன் அறிவுக்கு நிகரில்லா ஒருவர்  தாழ்வாக மற்றொருவரை இகழ்ந்து பேசும்போது, அந்த மற்றொருவர் எவ்வாறு நடந்து கொள்வார்? இதனை வைத்து ஒருவர் கற்றறிந்த சான்றோரா இல்லையா என்று முடிவு செய்ய முடியுமா? முடியும் என்று விளக்குகிறது இந்த நாலடியார்ப் பாடல்.



தன் அறிவுக்கு நிகரில்லா ஒருவர் தன்னைத் தாழ்வாக பேசியதைக் கேட்ட கீழ் மக்கள், மிகுந்த நேரம் செலவிட்டு அதனை ஆராய்ந்து, அதனை மீண்டும் மீண்டும் மனதில் நினைத்து வருந்தி, ஊரெல்லாம் அதனைக் கேட்கும் படி பலரிடம் சென்று அதனை முறையிட்டு, தன் வருத்தத்தை தன் உடம்பசைவுகளிலும் தெரிவித்து, அருகில் தூண் இருந்தால் அதில் முட்டிக்கொண்டும் தன் கோபத்தை வெளிப்படுத்துவர். ஆனால் கற்றறிந்த சான்றோர், அவ்வாறு அறிவில் நிகரில்லா ஒருவர் தாழ்வாகப் பேசினாலும், அதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல், அவர்கள் அமைதியாக, கோபம் இல்லாமல் நடந்துகொள்வார்கள்.

இந்தப் பாடல் படிக்கும் பொழுது சிறு வயதில் நான் கேட்ட ஒரு சொலவடை நினைவில் வருகிறது “சூரியன பார்த்து நாய் குரைத்தால்,நாய்க்குத்தான் வாய் வலிக்கும்"  


பாடல்:
நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால்
வேர்த்து வெகுளார் விழுமியோர் - ஓர்த்தனை
உள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்பத்
துள்ளித்தூண் முட்டுமாம் கீழ்.

பதம் பிரித்த பாடல்:
நேர்த்து, நிகர் அல்லார் நீர் அல்ல சொல்லியக்கால்,
வேர்த்து வெகுளார், விழுமியோர்; ஓர்த்து அதனை,
உள்ளத்தான் உள்ளி, உரைத்து, உராய், ஊர் கேட்ப,
துள்ளி, தூண் முட்டுமாம், கீழ்.

அருஞ்சொற்பொருள்:
விழுமியோர் - சான்றோர்
ஓர்த்து - ஆராய்ந்து
கீழ் - இங்கு கீழ்மக்களைக் குறிக்கிறது.

சனி, 25 ஏப்ரல், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 63

அவன் அந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று சில மாதங்கள் ஆகி விட்டன. நிறுவனத்தின் அனைத்துப் பிரிவுகளையும் நன்கு புரிந்து கொண்டுவிட்டான். ஒவ்வொரு பிரிவின் நோக்கம் என்ன, அதன் வருவாய் செலவு என்று அனைத்தும் புரிந்து கொண்ட பின், சிற்சில பிரிவுகளில் வருவாயைக் கூட்ட மாற்றங்கள் தேவை என்றறிந்து, அவற்றைச் செயலாற்றத் தொடங்கினான். மாற்றம் என்றவுடன் மனமுவந்து செய்யும் மாந்தர் சிலர் தான். அதனால் அவனுக்கு மாற்றங்களைச் செய்ய சற்று கடினமாக இருந்தது. பலமுறை சொல்லியும் தான் சொன்னதைக் கேட்காமல் இருந்த ஒரு பிரிவின் தலைவரைப் பார்த்துப் பேசும் பொழுது அவனையும் அறியாமல், அவன் தன் கோபத்தை வெளியிட நேர்ந்தது. அவ்வாறு நடந்து கொண்ட விதம் அவனைப்  பாதித்ததனால், அவன் அங்கிருந்து விலகி, சில நிமிடங்கள்  தனியாக இருக்க நினைத்து, மன்னிப்புக் கேட்டு தன் அறைக்குச் சென்றான். தன் இருக்கையின் அருகே இருந்த நாலடியார் நூலை எடுத்து சினமின்மை அதிகாரத்தைப் புரட்ட, அவன் கண்களில் பட்டது இந்தப் பாடல்.



தாம் என்ன பேசுகின்றோம் என்று அறியாமல், தன் நாவினைக் காக்காமல், ஒருவர் கட்டுப்பாடில்லாமல் தன் வாயைத் திறந்து, கோபம் மிகுதி கொண்டு பேசினால், அவ்வகைச் சொற்கள் கேட்பவரை பாதிப்பது மட்டுமல்லாமல், அவ்வாறு பேசியவரையும் என்றும் பாதிக்கும். இதனை நன்கு உணர்ந்த, கேள்வி அறிவு மற்றும் ஆய்வறிவு கொண்ட அறிவுடைய மேல்மக்கள், மனம் பாதிக்கக் கூடிய சுடும் சொற்களை ஒரு நாளும் பேச மாட்டார்கள்.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

என்ற திருக்குறளின் வழி ஒருவர் நாவினால் பேசிய சினம் மிகுந்த சொல் கேட்பவரின் மனதில் என்றும் ஆறாத வடுவாக இருக்கும் என்பது உணர்த்தப் படுகிறது. ஆனால் இந்தப் பாடலில், கேட்பவர் மட்டுமல்லாமல் சினத்துடன் பேசியவர் மனத்தையும் புண் படுத்தக் கூடியது சினம் மிகுந்த சொற்கள், என்று விளக்கப் படுகிறது. அதனால் அவற்றைத் தடுப்போமாக.

பாடல்:
காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்
ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து.

பதம் பிரித்த பாடல்:
காவாது, ஒருவன் தன் வாய் திறந்து சொல்லும் சொல்
ஓவாதே தம்மைச் சுடுதலால், ஓவாதே
ஆய்ந்து அமைந்த கேள்வி அறிவுடையார், எஞ் ஞான்றும்,
காய்ந்து அமைந்த சொல்லார், கறுத்து.

அருஞ்சொற்பொருள்:
காவாது - காக்காது
ஓவாதே - நீங்காமல், இடை விடாமல்
எஞ் ஞான்றும் - எந்த நாளும்


வெள்ளி, 24 ஏப்ரல், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 62

நமது மனநிலை என்பது நம் கட்டுப்பாட்டில் உள்ளதா? நாம் நம் மனதைக் கையாளுகின்றோமா அல்லது நிகழ்வுகளின் ஆளுமையில் நம் மனதினை விட்டு அதன் வழி செல்கின்றதா? இவ்வினாக்களுக்கு விடையளிக்க நாலடியார்ப் பாடலைப் பார்ப்பதற்கு முன், ஒரு சில நாட்களுக்கு முன் மின் அஞ்சல் வழி வந்த ஒரு சிறு கதையினைப் பார்ப்போம். இதனை கூகிள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை அவர்கள் தன் பேச்சில் கூறியிருக்கிறார்.



“ஒரு உணவகம். அங்கு ஒரு பெண் சாப்பிட வந்தாள். அப்பொழுது அங்கு ஒரு கரப்பான் பூச்சி வந்து அவள் மேல் விழுந்தது. துள்ளிக் குதித்தாள் அந்தப் பெண். அவள் துள்ள அந்த கரப்பான் பூச்சி இன்னொரு பெண் மேல் விழ அவளும் துள்ள இவ்வாறு அந்த இடம் அமளியில் மூழ்கியது. இதனைப் பார்த்து, அங்கு வந்த சிப்பந்தி, அந்த கரப்பான் பூச்சியை எந்த வித சலமும் இல்லாமல் எடுத்து வெளியே கொண்டு போய் விட்டார். கரப்பான் பூச்சி ஒன்று தான். அதனை ஒவ்வொருவரும் கையாண்ட விதம் வேறு.”

இது போன்று நமக்கு நடக்கும் நிகழ்வுகளுக்கு நாம் எவ்வாறு எதிர்வினயாற்றுகின்றோம் என்பதில் தான் நம் மன நிலை நிர்ணயிக்கப் படுகின்றது. இதனை இங்கு அழகாக விளக்குகின்றது இந்தப் பாடல்.

ஒருவர் ஒரு காரியத்தை முடிக்க, தனது மனத்தை ஒருமைப்படுத்தி, வேலை செய்து வருகின்றார். அவ்வாறு செய்யும்பொழுது, அவமதிப்புகள், ஆம் ஒன்றல்ல இரண்டல்ல, பல அவமதிப்புகள் சேர்ந்து வரும் பொழுது, தனது பாதங்களை தாம் செல்லும் வழியில் இருந்து தவற விடாமல், தன் வினைகளை முடிப்பர். அவ்வாறு திண்மையுள்ளம் கொண்டவர், சிறு விடயங்கள் நடக்கும் பொழுது, அதன் காரணமாக கோபம் அடைந்து , அதன் காரணமாக சிறப்புமிக்க தமது உயிரின் பகுதியினை இழக்கமாட்டார்கள்.

கோபம் அடைவதால் நம் உளநிலை பாதிக்கப் பட்டு அதனால் உடல் நிலை பாதிப்பப்பட்டு, அதன் விளைவாக உயிர்நிலை பாதிக்கப்படுவதை மிகவும் அருமையாக எடுத்தியம்புகிறது இப்பாடல்.



பாடல்:
தண்டாச் சிறப்பின்தம் இன்னுயிரைத் தங்காது
கண்டுழி யெல்லாம் துறப்பவோ - மண்டி
அடிபெயரா தாற்ற இளிவந்த போழ்தின்
முடிகிற்கும் உள்ளத் தவர்.

பதம் பிரித்த பாடல்:
தண்டாச் சிறப்பின் தம் இன் உயிரைத் தாங்காது,
கண்டுழி எல்லாம் துறப்பவோ-மண்டி,
அடி பெயராது, ஆற்ற இளி வந்த போழ்தின்
முடிகிற்கும் உள்ளத்தவர்?

அருஞ்சொற்பொருள்:
தண்டா - அழியாத, நீங்காத
உழி - சிறிய விடயங்கள்
மண்டி - அடர்ந்து
இளி - அவமதிப்பு
முடிகிற்கும் - முடிக்கும்


இது வரை வெளியிடப்பட்ட பாடல்கள் மற்றும் கருத்துகளின் தொகுப்பினைப் படிக்க: http://thamizhvaan.blogspot.com

புதன், 22 ஏப்ரல், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 61

அன்றைய நாள் மிக நன்றாக சென்று கொண்டிருந்தது. அவளுடைய அலுவல்கள் எல்லாம் தடையின்றி முடிந்ததால், அவள் மாலை 6 மணிக்கே அலுவலகம் விட்டு புறப்பட்டதால், பூப்பந்தாட்டம் விளையாட, இனிய தென்றல் காற்று வருட, நடந்து சென்றாள். அப்பொழுது திடீரென ஒரு ஈ எங்கிருந்தோ வந்து அவளைச் சுற்றி அவள் தலை மேல் உட்கார்ந்தது. அதனை ஒரு பொருட்டாக மதியாமல், அவள் நடந்து சென்றாள். இவ்வகை இயற்கை காட்சிகள் எவ்வளவு அழகாக நம் தமிழில் உவமைகளாக எடுத்தாளப்பட்டுள்ளன என்று வியந்த வண்ணம், தன் நடையைத் தொடர்ந்தாள். அவ்வாறான சிந்தனைக்குக் காரணம் இந்த நாலடியார்ப் பாடல்.



அங்கும் இங்கும் பறக்கும் ஈ நம் உடல் மேல் உட்காரலாம். நம் தலை மேலே ஏறி தன் சிறு கால்களுடன் உட்காரலாம். அவ்வகை ஈ என்ன செய்தாலும் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டோம். அது போல், நம்மை நன்றாக மதிக்கும் ஒருவரும், ஒரு சில சமயங்களில், நம்மை தாழ்த்திப் பேசலாம். நம்மை மதிக்காமல், நம்மை தாழ்த்துவாரும் இருக்கலாம். ஆனால் மற்றவரின் தாழ்த்துதல் எவ்வாறு இருந்தாலும் நாம் அதனை பெரிதாக எடுத்துக்கொண்டு, மற்றவரை மனதளவில் எரிக்கும் தன்மை கொண்ட சினத்தைக் கைக்கொள்வது நல்ல செயல் அன்று.

பாடல்:
மதித்திறப் பாரும் இறக்க மதியா
மிதித்திறப் பாரும் இறக்க - மிதித்தேறி
ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
காயும் கதமின்மை நன்று.

பதம் பிரித்த பாடல்:
மதித்து இறப்பாரும் இறக்க! மதியார்,
மிதித்து இறப்பாரும் இறக்க! மிதித்து ஏறி,
ஈயும் தலைமேல் இருத்தலால், அஃது அறிவார்
காயும் கதம் இன்மை நன்று.

அருஞ்சொற்பொருள்:
இறக்க - ஒருவரைத் தாழ்த்துதல்

கதம் - கோபம்

திங்கள், 20 ஏப்ரல், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 60

ஏழை என்பவர் யார்? செல்வந்தர் என்பவர் யார்? ஏழை, செல்வந்தர் என்ற சொற்கள் ஒருவரின் பொருட்செல்வ நிலையைக் குறிப்பது மட்டும்தானா? அருட்செல்வம் அதில் அடங்காதா? அவ்வாறு அருட்செல்வம் அடங்கும் என்றால் அந்த அருட்செல்வத்தை எவ்வாறு வரையறுப்பது? பொருட்செல்வத்தை வரையறுப்பது எளிது. ஒருவர் எவ்வளவு பொருள் வைத்திருக்கிறார் என்பது அவரது இல்லம், வங்கி, முதலீடுகள் என்று அனைத்தையும் கணக்கிட்டால் தெரிந்துவிடும். இவ்வாறு ஒருவரின் பொருட்செல்வ நிலையை நிர்ணயித்து விடலாம். அருட்செல்வ நிலையை எவ்வாறு நிர்ணயிப்பது? அருட்செல்வத்தின் ஒரு பரிமாணமான துறவு நிலையில் இருந்து, அதனை எவ்வாறு வரையறுக்கலாம் என்பதை, இந்த நாலடியார்ப் பாடலில் பார்க்கலாம்.




சிறிது காலம் மட்டுமே நிலைக்கக் கூடிய சிற்றின்பத்தினை அடைய, துன்பங்கள் மேலும் மேலும் வருவது தெரிந்தும், சிற்றின்பத்தையே விரும்பிச் செல்வர் அறிவில் குறைந்த ஏழை மாந்தர். அதே சமயத்தில், சிற்றின்பம் தங்கள் வழி வரும் பொழுது, அதனுடன் இணைந்திருக்கும் இன்னல்களை நன்கறிந்த, அச்சிற்றின்பத்தில் திளைக்காமல் திகழ்வர் மேன்மக்கள்.

பாடல்:

துன்பமே மீதூரக் கண்டும் துறவுள்ளார்
இன்பமே காமுறுவர் ஏழையார் - இன்பம்
இசைதொறும் மற்றதன் இன்னாமை நோக்கிப்
பசைதல் பரியாதாம் மேல்.


பதம் பிரித்த பாடல்:

துன்பமே மீதூரக் கண்டும், துறவு உள்ளார்,
இன்பமே காமுறுவர், ஏழையார்; இன்பம்
இசைதொறும், மற்று அதன் இன்னாமை நோக்கி,
பசைதல் பரியாதாம், மேல்.


அருஞ்சொற்பொருள்:

மீதூர - மிகுந்து மிகுந்து மேலும் வருதல்
உள்ளார் - நினைக்காதவர்
இசைதொறும் - வரும் பொழுது
பசைதல் - ஆசைப் படுதல்
பரியாது - விரும்பாது

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 59

துறவு மேற்கொள்பவர் யார்? ஆசைகளைத் துறந்தவர் துறவு மேற்கொள்பவரா ? அனைவரிடத்தும் அன்பு காட்டுபவர் துறவு மேற்கொள்பவரா? ஆசைகளைத் துறந்து, துறவு மேற்கொண்ட பின்னர், ஒருவர் துறவினை மேற்கொள்ள என்ன செய்ய வேண்டும்?  இவ்வகை வினாக்களுக்கு விடை பகர வருகின்றது இப்பாடல்.




ஒருவர் துறவு வழி மேற்கொண்ட பின்னாலும், அவருடைய ஐந்து புலன்களின் வழி நுகரப்படும் செயல்களினால், அவருடைய ஆசைகள் தூண்டிவிடப்படும். அவ்வாறு தூன்டத்தல் உண்டாகும் பொழுது தனது மனதினை அலைய்பாய விடாமல், அதனை ஒருவழிப் படுத்தி, உடம்பு, கண், வாய் (நாக்கு), மூக்கு, காது என்ற ஐந்து புலன்களினால் உண்டாகும் கட்டற்ற ஆசைகளைக் கட்டுப்படுத்தி திகழ்பவரே துறவு மேற்கொள்பவர் ஆவார். அவ்வாறு துறவு மேற்கொள்பவர் வீடு பேறு, அதாவது முக்திநிலை, அடைபவர் ஆவர்.

“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்”

என்ற திருக்குறளும் இதனைத்தான் குறிப்பிட்டு விளக்குகிறது.



பாடல்:

மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய்
கலங்காமற் காத்துய்க்கும் ஆற்ற லுடையான்
விலங்காது வீடு பெறும்

பதம் பிரித்த பாடல்:

மெய், வாய், கண், மூக்கு, செவி எனப் பேர் பெற்ற
ஐ வாய வேட்கை அவாவினை, கைவாய்,
கலங்காமல் காத்து, உய்க்கும் ஆற்றல் உடையான்
விலங்காது வீடு பெறும்.

அருஞ்சொற்பொருள்:

கைவாய் - ஒழுக்கம் மிகுந்த வழி
விலங்காது - தவறாது

சனி, 18 ஏப்ரல், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 58

அன்று அவனுக்கு பனிச் சுமை அதிகமாக இருந்தது. அதன் காரணமாக மன அழுத்தம் அவனுள் பரவிக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் அந்த நிகழ்வு நடந்தது. அவனுடன் வேலை பார்க்கும் சக ஊழியன் தன்னைப் பற்றி இகழ்வாகப் பேசினான். அந்தப் பேச்சினைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவனும் கோபத்துடன் பேசினான். அதன் பின் சில நிமிடங்கள் கழித்து, “அட என்ன இப்படிப் பேசிவிட்டோமே?” என்று மனம் வருந்தலானான். அவனது இடத்தில் துறவு மேற்கொண்ட ஒருவர் இருந்திருந்தால் எப்படி நடந்து கொண்டிருப்பார்? சிந்தனையில் மூழ்க, அவனுக்கு விடையளிக்கும் வண்ணம் அந்த நாலடியார்ப் பாடல் நினைவில் வந்தது.



பற்றுகள் அனைத்தையும் விட்டு விட்டு துறவு மேற்கொண்ட பெரியரவகள், தங்களை யாராவது இகழ்ந்து பேசினால், அந்த இகழ்ச்சியினைப் பொறுத்துக் கொள்வர். அதோடு நின்று விடாமல், அட, நம்மை இகழ்ந்து பேசிய காரணத்தால் இவர்கள் நரகம் சென்று துன்பப் படப் போகின்றார்களே என்று அவர்களுக்கு இரக்கம் காட்டி அன்பு செலுத்துவர். கோபப் படாமல் இருப்பதோடு அன்பும் இரக்கமும் காட்டுதல் துறவு மேற்கொண்ட சான்றோர்களின் பண்பு ஆகும்.

பாடல்:
தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்
றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று
பரிவதூஉம் சான்றோர் கடன்.

பதம் பிரித்த பாடல்:
தம்மை இகழ்ந்தமை தாம் பொறுப்பது அன்றி, 'மற்று
எம்மை இகழ்ந்த வினைப் பயத்தான், உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல்!' என்று
பரிவதூஉம், சான்றோர் கடன்.


அருஞ்சொற்பொருள்

எரிவாய் நிரயத்து - நரகத்து
பரிவதூஉம் - இரங்குவதுவும்



ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 57

அவள்  துறவறம் மேற்கொள்வது என்று முடிவு செய்தாள். ஆனால் மெய்யறிவினைப் பெற அவள் கானகம் நோக்கிச் செல்லவில்லை. பலகாலமாக, பலர் தவமிருந்து பெற்றெடுத்த நன்னூல்களை படிக்கத்துவங்கினாள். அட எவ்வளவு நூல்கள்! எத்தனை ஆழமான கருத்துகள்! படிக்க படிக்க பூரித்துப் போனாள். அன்று அவள் படித்தது நாலடியார். தவம் மேற்கொண்டு மெய்யறிவினைப் பெற்று நல்லொழுக்கத்தினைக் காக்க வல்லவர் யார் என்று கூறிய பாடல் அவளைக் கவர்ந்தது.



உலகில் இன்பங்களைத் துய்த்து இல்வாழ்க்கை வாழாமல், ஊக்கத்தின் உந்துதலால், விரதங்கள் கொள்வர் துறவு நாடுபவர். அவ்வாறான விரதங்களைத் தாக்கி, அவ்விரதங்களை உடைய வைக்கும் துன்பங்கள் வரும் பொழுது, மனம் பிறழாது, அத்துன்பங்களை நீக்கி, நல் நெறிகளை தம்முள் நிற்க வைக்கும் மன வலிமை உடையவரே, நல் ஒழுக்கத்தினைக் காக்கும் மேலான தவத்தை மேற்கொள்ளத் தக்கவர்.

துறவறம் மேற்கொள்ளத் தேவையான மன உறுதியினை மிக அழகாக விளக்குகின்றது இப்பாடல்.     


பாடல்:
ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள்ளுடையத்
தாக்கருந் துன்பங்கள் தாந்தலை வந்தக்கால்
நீக்கி நிறூஉம் உரவோரே நல்லொழுக்கம்
காக்கும் திருவத் தவர்.

பதம் பிரித்த பாடல்:
ஊக்கித் தாம் கொண்ட விரதங்கள் உள் உடைய,
தாக்கு அருந் துன்பங்கள் தாம் தலைவந்தக்கால்,
நீக்கி, நிறூஉம் உரவோரே, நல் ஒழுக்கம்
காக்கும் திருவத்தவர்.

அருஞ்சொற்பொருள்:
நிறூஉம் - நிறுத்தும்
உரவோரே - வலியோரே
திருவத்தவர் - மேலான தவத்தவர்

புதன், 1 ஏப்ரல், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 56

இல்லறம் இத்தகையது, துறவறம் இத்தகையது என்று மிகவும் நன்றாக வரையறுத்துள்ளனர் நம் முன்னோர். துறவறத்தை மேற்கொண்டவர்கள் இவ்வுலகின் பிடிப்பில் இருந்து விலக, பற்றுகளில் இருந்து விலக, அவர்கள் கையாளவேண்டிய வழிமுறைகள் நம் இலக்கியத்தில் சொல்லப்பட்டுள்ளன. பற்றற்ற நிலையை ஒருவர் அடையவேண்டுமானால், அவர் இவ்வுலகியலின் கட்டில் இருந்து விடுபட வேண்டும். கட்டுகள் எவை எவை? அவை ஏன் கட்டுகளாகின்றன? நம்மைக் கட்டிப் போடும் பலவித கட்டுகளில் ஒன்றைப் பற்றி பேசுகின்றார் இந்த நாலடியார்ப் புலவர்.



இல்லறத்தில் வாழும் மனிதருக்கு நடக்கும் நிகழ்வு, ஒருவரை திருமணம் செய்துகொள்வது. அவ்வாறு திருமணம் செய்துகொண்ட தன்னுடைய இல்லாள் (இணையர்), மாட்சிமை பொருந்திய நபராக இல்லாமலோ அல்லது மக்கட்பேறு இல்லாமலோ இருக்க வாய்ப்புண்டு, அவ்வாறு நிகழுமானாலும், திருமணம் செய்துகொண்டவன் தன் இணையாளை விட்டுவிடக் கூடாது. இல்லறத்தின் இந்த நியதியை புரிந்துகொண்ட மேலான ஒழுக்கமுடைய கற்றறிந்த மக்கள், தாம் துறவறம் மேற்கொள்ள திருமணம் தடையாக இருக்கும் என்று உணர்ந்து, அதில் இருந்து விலகி நிற்பர்.

பாடல்:

மாண்ட குணத்தொடு மக்கட்பே றில்லெனினும்
பூண்டான் கழித்தற் கருமையால் - பூண்ட
மிடியென்னும் காரணத்தின் மேன்முறைக் கண்ணே
கடியென்றார் கற்றறிந் தார்.

பதம் பிரித்த பாடல்:
'மாண்ட குணத்தொடு மக்கட் பேறு இல் எனினும்,
பூண்டான் கழித்தற்கு அருமையால், பூண்ட
மிடி என்னும் காரணத்தின், மேன்முறைக்கண்ணே
கடி' என்றார், கற்று அறிந்தார்.

அருஞ்சொற்பொருள்:

மாண்ட - மாண்புமிக்க
பூண்டான் - திருமணம் செய்து கொண்டவன்
மிடி - துன்பம்
மேன்முறை - மேலான ஒழுக்கமுடைய

கடி - விலக்கு