அவள் துறவறம் மேற்கொள்வது என்று முடிவு செய்தாள். ஆனால் மெய்யறிவினைப் பெற அவள் கானகம் நோக்கிச் செல்லவில்லை. பலகாலமாக, பலர் தவமிருந்து பெற்றெடுத்த நன்னூல்களை படிக்கத்துவங்கினாள். அட எவ்வளவு நூல்கள்! எத்தனை ஆழமான கருத்துகள்! படிக்க படிக்க பூரித்துப் போனாள். அன்று அவள் படித்தது நாலடியார். தவம் மேற்கொண்டு மெய்யறிவினைப் பெற்று நல்லொழுக்கத்தினைக் காக்க வல்லவர் யார் என்று கூறிய பாடல் அவளைக் கவர்ந்தது.
உலகில் இன்பங்களைத் துய்த்து இல்வாழ்க்கை வாழாமல், ஊக்கத்தின் உந்துதலால், விரதங்கள் கொள்வர் துறவு நாடுபவர். அவ்வாறான விரதங்களைத் தாக்கி, அவ்விரதங்களை உடைய வைக்கும் துன்பங்கள் வரும் பொழுது, மனம் பிறழாது, அத்துன்பங்களை நீக்கி, நல் நெறிகளை தம்முள் நிற்க வைக்கும் மன வலிமை உடையவரே, நல் ஒழுக்கத்தினைக் காக்கும் மேலான தவத்தை மேற்கொள்ளத் தக்கவர்.
துறவறம் மேற்கொள்ளத் தேவையான மன உறுதியினை மிக அழகாக விளக்குகின்றது இப்பாடல்.
பாடல்:
ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள்ளுடையத்
தாக்கருந் துன்பங்கள் தாந்தலை வந்தக்கால்
நீக்கி நிறூஉம் உரவோரே நல்லொழுக்கம்
காக்கும் திருவத் தவர்.
பதம் பிரித்த பாடல்:
ஊக்கித் தாம் கொண்ட விரதங்கள் உள் உடைய,
தாக்கு அருந் துன்பங்கள் தாம் தலைவந்தக்கால்,
நீக்கி, நிறூஉம் உரவோரே, நல் ஒழுக்கம்
காக்கும் திருவத்தவர்.
அருஞ்சொற்பொருள்:
நிறூஉம் - நிறுத்தும்
உரவோரே - வலியோரே
திருவத்தவர் - மேலான தவத்தவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக