அவன் அந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று சில மாதங்கள் ஆகி விட்டன. நிறுவனத்தின் அனைத்துப் பிரிவுகளையும் நன்கு புரிந்து கொண்டுவிட்டான். ஒவ்வொரு பிரிவின் நோக்கம் என்ன, அதன் வருவாய் செலவு என்று அனைத்தும் புரிந்து கொண்ட பின், சிற்சில பிரிவுகளில் வருவாயைக் கூட்ட மாற்றங்கள் தேவை என்றறிந்து, அவற்றைச் செயலாற்றத் தொடங்கினான். மாற்றம் என்றவுடன் மனமுவந்து செய்யும் மாந்தர் சிலர் தான். அதனால் அவனுக்கு மாற்றங்களைச் செய்ய சற்று கடினமாக இருந்தது. பலமுறை சொல்லியும் தான் சொன்னதைக் கேட்காமல் இருந்த ஒரு பிரிவின் தலைவரைப் பார்த்துப் பேசும் பொழுது அவனையும் அறியாமல், அவன் தன் கோபத்தை வெளியிட நேர்ந்தது. அவ்வாறு நடந்து கொண்ட விதம் அவனைப் பாதித்ததனால், அவன் அங்கிருந்து விலகி, சில நிமிடங்கள் தனியாக இருக்க நினைத்து, மன்னிப்புக் கேட்டு தன் அறைக்குச் சென்றான். தன் இருக்கையின் அருகே இருந்த நாலடியார் நூலை எடுத்து சினமின்மை அதிகாரத்தைப் புரட்ட, அவன் கண்களில் பட்டது இந்தப் பாடல்.
தாம் என்ன பேசுகின்றோம் என்று அறியாமல், தன் நாவினைக் காக்காமல், ஒருவர் கட்டுப்பாடில்லாமல் தன் வாயைத் திறந்து, கோபம் மிகுதி கொண்டு பேசினால், அவ்வகைச் சொற்கள் கேட்பவரை பாதிப்பது மட்டுமல்லாமல், அவ்வாறு பேசியவரையும் என்றும் பாதிக்கும். இதனை நன்கு உணர்ந்த, கேள்வி அறிவு மற்றும் ஆய்வறிவு கொண்ட அறிவுடைய மேல்மக்கள், மனம் பாதிக்கக் கூடிய சுடும் சொற்களை ஒரு நாளும் பேச மாட்டார்கள்.
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
என்ற திருக்குறளின் வழி ஒருவர் நாவினால் பேசிய சினம் மிகுந்த சொல் கேட்பவரின் மனதில் என்றும் ஆறாத வடுவாக இருக்கும் என்பது உணர்த்தப் படுகிறது. ஆனால் இந்தப் பாடலில், கேட்பவர் மட்டுமல்லாமல் சினத்துடன் பேசியவர் மனத்தையும் புண் படுத்தக் கூடியது சினம் மிகுந்த சொற்கள், என்று விளக்கப் படுகிறது. அதனால் அவற்றைத் தடுப்போமாக.
பாடல்:
காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்
ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து.
பதம் பிரித்த பாடல்:
காவாது, ஒருவன் தன் வாய் திறந்து சொல்லும் சொல்
பதம் பிரித்த பாடல்:
காவாது, ஒருவன் தன் வாய் திறந்து சொல்லும் சொல்
ஓவாதே தம்மைச் சுடுதலால், ஓவாதே
ஆய்ந்து அமைந்த கேள்வி அறிவுடையார், எஞ் ஞான்றும்,
காய்ந்து அமைந்த சொல்லார், கறுத்து.
அருஞ்சொற்பொருள்:
காவாது - காக்காது
அருஞ்சொற்பொருள்:
காவாது - காக்காது
ஓவாதே - நீங்காமல், இடை விடாமல்
எஞ் ஞான்றும் - எந்த நாளும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக