புதன், 2 செப்டம்பர், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 77

அன்று இரவு தனது தோழியின் வீட்டில் கூட்டாஞ்சோறு. தான் சமைக்க நேரம் இல்லாத காரணத்தால் சாப்பிடத்தேவையான தட்டுகள் மற்றும் கரண்டிகளை வாங்கி வருவதாகச் சொல்லியிருந்தாள். அலுவலகத்தில் தன் குழுவில் இருக்கும் நிர்வாகிகளுடன் இருந்த சந்திப்பு முடிந்தவுடன், விரைவாகப் புறப்பட்டு, செல்லும் வழியில் ஒரு பலசரக்குகடையில் தட்டுகளையும் கரண்டிகளையும் வாங்கிச் சென்றாள். அவள் செல்வதற்கும், அனைவரும் சாப்பிடத்துவங்குவதற்கும் சரியாக இருந்தது. அந்த விருந்துக்கு மற்றவர்கள் வருவார்கள் என்று தெரியும். ஆனால் இவ்வளவு பேர்வருவார்கள் என்று அவள் நினைக்கவில்லை. அனைவரும் தனது தோழியிடம் மிகவும் நெருங்கி, அன்புடன் பழகும் நபர்கள்.அவர்களைப் பார்த்தவுடன் அவளுக்குள் ஒரு கேள்வி எழுந்தது.. இவ்வளவு நல்ல நண்பர்கள் தன் தோழிக்கு அமையக்காரணம் என்ன? ஒரு நிமிடம் கூட யோசிக்கவில்லை, அவளுக்கு விடை தெரிந்துவிட்டது. அவள் எண்ணத்தில் தோன்றிய விடை கீழ் வரும் நாலடியார்ப் பாடலில் அழகாக விளக்கப் படுகின்றது.



ஓல் என ஒலிக்கும் அருவியினைத் தழுவி நிற்கும் உயர்ந்த மலைகளை உடைய நாட்டில் வாழ்பவனே, நல்ல செயல்கள்செய்யும் ஒருவருக்கு நண்பர்கள் அமைவது அரிதாகுமோ? ஆகாது. ஏன் என்றால்,அவ்வாறு நல்லது செய்யும் பெரியோர்செய்யக் கூடாத செயல்களைச் செய்தாலும் நண்பர்கள் என்பதால் பொறுத்துக் கொள்வர். அதன் காரணமாக அவரின்நட்பினைப் பெற அவரை நாடி வரைவார்கள்.


பாடல்: 
பெரியார் பெருநட்புக் கோடல்தாம் செய்த
அரிய பொறுப்பஎன் றன்றோ - அரியரோ
ஒல்லென் அருவி உயர்வரை நன்னாட
நல்லசெய் வார்க்குத் தமர்.

பதம் பிரித்த பாடல்: 
பெரியார் பெரு நட்புக் கோடல், தாம் செய்த
அரிய பொறுப்ப என்று அன்றோ? அரியரோ-
ஒல்லென் அருவி உயர் வரை நல் நாட!-
நல்ல செய்வார்க்குத் தமர்?


அருஞ்சொற்பொருள்: 
கோடல் - கொள்ளுதல்
ஒல் - ஒல் என்ற சத்தத்தைக் குறிக்கும் சொல்
உயர் வரை - உயர்ந்த மலை
தமர் - நண்பர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக