வெள்ளி, 19 ஜூன், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 70

நாலடியார்ப் பாடல்களில் நகைச்சுவை உண்டா? நாம் பள்ளிகளில் படித்த பாடல்களில் பொருள் பொதிந்து பல பாடல்கள் படித்துள்ளோம். ஆனால் நம்மை சிரிக்க வைத்து பின்பு சிந்திக்க வைத்த நாலடியார்ப் பாடல்கள் படித்தது இல்லை. இன்று நாம் பார்க்கப் போகும் பாடல் ஒரு நகைச்சுவை மிகுந்த உவமையினை கொண்டுள்ளது. கதிரவனையும் நாயையும் இணைத்து வரும் சொலவடை கேட்டுள்ளோம். இப்பாடலின் உவமையில் நாயையும் மனிதரையும் இணைத்து கையாண்டுள்ளார் புலவர்.



கோபம் கொண்டு ஒரு நாய், தன் சினம் மிகுதியால், ஒருவரின் உடம்பைக் கடித்து தசையைப் பிடுங்கினாலும், நாய் நம்மை இவ்வாறு துன்புறுத்திவிட்டதே என்று அந்த நாயை திருப்பிக் கடிக்கும் மனிதர் இவ்வுலகில் இல்லை. அது போல, அறிவில் குறைந்த கீழானவர் தகுதி குறைந்த தாழ்வான சொற்களைக் கூறும்பொழுது அறிவிற் சிறந்த மேன் மக்கள் தமது வாயினால் அந்த தாழ்வான சொற்களைச் சொல்வார்களோ?

பாடல்:

கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டும் தம்வாயாற்
பேர்த்துநாய் கௌவினார் ஈங்கில்லை - நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு.

பதம் பிரித்த பாடல்:

கூர்த்து நாய் கௌவிக் கொளக் கண்டும், தம் வாயால்
பேர்த்து நாய் கௌவினார் ஈங்கு இல்லை; நீர்த்து அன்றிக்
கீழ்மக்கள் கீழ் ஆய சொல்லியக்கால், சொல்பவோ,
மேன்மக்கள் தம் வாயால் மீட்டு?

அருஞ்சொற்பொருள்:

கூர்த்து - சினம் மிகுந்து
பேர்த்து - திருப்பி
நீர்த்து - தகுதி

இது வரை வெளியிடப்பட்ட பாடல்கள் மற்றும் கருத்துகளின் தொகுப்பினைப் படிக்க: http://thamizhvaan.blogspot.com

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 69

ஒருவர் உயர்ந்தோர் என்று எப்பொழுது கருதப் படுவார்? கல்வியில் சிறந்து விளங்கும் போதா? அல்லது கல்வியில் சிறந்து அதனை மற்றவருக்குக் கற்பிக்கும் பொழுதா? செல்வச் செழிப்பில் கொழிக்கும் பொழுதா? இல்லை அச்செல்வம் கொழிக்கின்ற காரணத்தால் அதனை மற்றவருக்குக் கொடையாகக் கொடுக்கும் பொழுதா? வான் அளவு உயர்ந்த புகழ் கொண்டவர் என்று ஒருவர் புகழப் பட அவருக்கு இருக்க வேண்டிய இயல்பு என்ன?  விடை தருகின்றது இந்த நாலடியார்ப் பாடல்.



ஒருவர் தமக்கு நல்லது செய்ததை நினைக்காமல் அவ்வாறு நல்ல செயல் செய்தவருக்கே ஒருவர் தீங்கு மிகுதியாக செய்தாலும், அவ்வாறு தீங்கு செய்தவருக்கு நல்ல செயல் மட்டுமே செய்து தவறியும் அவருக்கு தீய செயல்களை செய்ய மாட்டார்கள் வான் புகழ் கொண்ட உயர்ந்தோர்.

“தவறியும் தீங்கு இழைக்க மாட்டார்கள்" என்று கூற்றினால், பெரியோரின்  இயற்கை குணம் எப்பொழுதும் நன்மை செய்வது என்கின்றார் இந்த நாலடியார்ப் புலவர்.


பாடல்: 

உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம்
தாம்செய்வ தல்லால் தவற்றினால் தீங்கூக்கல்
வான்தோய் குடிப்பிறந்தார்க் கில்.

பதம் பிரித்த பாடல்: 

உபகாரம் செய்ததனை ஓராதே, தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும், உபகாரம்
தாம் செய்வது அல்லால், தவற்றினால் தீங்கு ஊக்கல்
வான் தோய் குடிப் பிறந்தார்க்கு இல்.

அருஞ்சொற்பொருள்:
உபகாரம் - நன்மை
ஓராதே - நினைக்காமல்
தங்கண் - தம்மிடம்
அபகாரம் - தீய செயல்
ஆற்ற - மிகுதியாக


இது வரை வெளியிடப்பட்ட பாடல்கள் மற்றும் கருத்துகளின் தொகுப்பினைப் படிக்க: http://thamizhvaan.blogspot.com

புதன், 17 ஜூன், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 68

அலுவலகத்தில் அன்றைய தினம் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு பரபரப்பாக அலுவல்கள் நடந்து கொண்டிருந்தன. ஓர் அறையில் ஒரு கூட்டத்தை முடித்து வெளிவரும்பொழுது தான், அவன் அந்தக் காட்சியைப் பார்த்தான். நிறுவனத்தின் உபதலைவர் ஒரு தொழிலாளியிடம் கார சாரமாக பேசிக் கொண்டிருந்தார். எப்பொழுதும் அமைதியாகத்தானே இருப்பார் என்று மனதில் நினைத்துக் கொண்டு அவன் தன் அறையினுள் நுழைந்தான். சில நிமிடங்கள் கழித்து தேநீர் அருந்தச் செல்லும் பொழுது, கோபத்துடன் பேசிய உபதலைவர் அந்த தொழிலாளியிடம் மிகவும் கனிவாக பேசிக் கொண்டிருந்தார். அதனைப் பார்த்த அவனுக்கு நினைவில் வந்தது இந்த நாலடியார்ப் பாடல்.



நீர் பொதுவாக எப்பொழுதும் தண்மை கொண்டது. அதனால் தான் தண்ணீர் என்கின்றோம். அந்த நீர் சுட வைக்கும் பொழுது தண்மை நீங்கி, சூடேறி, வெந்நீர் ஆக மாறும். அவ்வாறு மாறிய வெந்நீர் சிறிது நேரம் கழித்து, சூடு இறங்கி தண்ணீராக மாறிவிடும். அது போல அறிவிற் சிறந்த சான்றோர், ஏதோவொரு காரணத்திற்காக கோபம் கொண்டாலும், அந்த கோபம் சிறிது நேரத்தில் தணிந்து விடும். ஆனால், அறிவில் கீழானவர், கோபம் அடைந்தார்கள் என்றால், அவர்கள் எவ்வளவு நாட்கள் ஆனாலும், அவர்கள் கோபம் தீராது.

கோபம் வருவது மனிதற்கு இயல்பான பண்பு, அதனை எவ்வாறு கையாளுகிறோம் என்பதை வைத்து அவர் அறிவிற் சிறந்த சான்றோரா இல்லையா என்று தெரிய வரும்.

பாடல்:

நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி
கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - அடுங்காலை
நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே
சீர்கொண்ட சான்றோர் சினம்.

பதம் பிரித்த பாடல்:

நெடுங் காலம் ஓடினும், நீசர் வெகுளி
கெடும் காலம் இன்றிப் பரக்கும்; அடும் காலை
நீர் கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே
சீர் கொண்ட சான்றோர் சினம்.

அருஞ்சொற்பொருள்:

நீசர் - அறிவில் குறைந்த கீழானவர்
பரக்கும் - பெருகும்
அடும் - சுடும்


நாளும் ஒரு நாலடியார் : பாடல் 67

ஒருவர் ஒரு செயலை செய்யத் தக்கவர் என்று எப்பொழுது மதிக்கப் படுவார்? அவர் ஒரு செயலை செய்ய முடியாதவர் என்று எப்பொழுது மதிக்கப் படுவார்? செய்யப் படும் செயலின் தன்மைக்கும் இவ்வாறு மதிப்பிடப் படுவதற்கும் தொடர்பு உண்டா? நன்மையை உண்டாக்கும் செயலுக்கும் தீமையை உண்டாக்கும் செயலுக்கும் வேறுபாடு உண்டா? இருக்கின்றது என்கின்றது இந்த நாலடியார்ப் பாடல்.



ஒருவர் நம் முன் பகைமையை வெளிப்படுத்தி நடந்துகொள்ளும் பொழுது, ஒருவர் அவரிடம் பகைமை பாராட்டவில்லை என்றால் அதனை இயலாமை என்று அறிவில் சிறந்த பெரியோர் கூற மாட்டார்கள். எனவே, ஒருவர் தம் பகையைக் கட்டுப் படுத்தாமல், துன்பம் விளைவிக்கக் கூடிய செயல்களைச் செய்தால், நாம் அவருக்கு திருப்பி துன்பங்கள் செய்யாமல் இருப்பது நல்லது.

இதனைத் தான் திருவள்ளுவர்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்துவிடல்

என்று கூறுகின்றார்.



பாடல்: 

மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க் கேலாமை
ஆற்றாமை என்னார் அறிவுடையார் - ஆற்றாமை
நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாம் அவரைப்
பேர்த்தின்னா செய்யாமை நன்று.

பதம் பிரித்த பாடல்: 

மாற்றாராய் நின்று, தம் மாறு ஏற்பார்க்கு ஏலாமை,
'ஆற்றாமை' என்னார், அறிவுடையார்; ஆற்றாமை
நேர்த்து, இன்னா மற்று அவர் செய்தக்கால், தாம் அவரைப்
பேர்த்து இன்னா செய்யாமை நன்று.

அருஞ்சொற்பொருள்:

மாற்றாராய் - பகைவராய்
மாறு - பகைமை
ஏலாமை - செய்யாமை
ஆற்றாமை - இயலாமை
பேர்த்து - திருப்பி

ஞாயிறு, 14 ஜூன், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 66

வார இறுதியினை இயற்கையோடு செலவிடலாம் என்று அவள் நினைத்து, காணகத்தில் தங்குவதற்குத் தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அவள் தன் மகிழுந்துவில் பயணிக்கத் துவங்கினாள். ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பின் தங்க வேண்டிய இடம் வந்தடைந்தாள். தங்கும் கொட்டகையை நிலத்தில் பதித்த பின், கோடை கால இள வெயிலில் தென்றல் காற்று இதமாக வருட ஒரு சுற்று நடக்கத் துவங்கினாள். காட்டிற்குள் சென்ற அவள், அதன் உட்புதரில் நாகம் ஒன்றைக் கண்டாள். அந்த நாகம் அமைதியாக இருந்தது. அதே நாகம் சீற்றம் கொண்டால் எவ்வாறு இருக்கும் என்று நினைத்துப் பார்த்தாள். அப்பொழுது சீற்றம் இல்லாத அமைதியான நாகம் உவமையாக பயன்படுத்தப் பட்ட நாலடியார்ப் பாடல் அவள் மனதினில் வலம் வந்தது.



சீறி வரும் நாகம் மந்திரிக்கப் பட்ட திருநீற்றால் அமைதியடையும் என்ற நம்பிக்கை இருந்தது. அவ்வாறு இருக்கும் நாகம் எப்படி அமைதியாக இருக்குமோ, அது போன்று குணத்தில் பெரியோர், தங்களது குலப் பெருமை கருதி, குணத்தில் தாழ்ந்து இருக்கும் கயவர் தீமையான சொற்களை, தங்கள் மீது கற்கள் எறிவது போல், எல்லோர் முன்னிலையில் பேசினாலும், அவர்கள் பொறுமையாக இருப்பர்.

பாடல்:
கல்லெறிந் தன்ன கயவர்வாய் இன்னாச்சொல்
எல்லாருங் காணப் பொறுத்துய்ப்பர் - ஒல்லை
இடுநீற்றால் பைஅவிந்த நாகம்போல் தத்தம்
குடிமையான் வாதிக்கப் பட்டு.

பதம் பிரித்த பாடல்:
கல் எறிந்தன்ன கயவர் வாய் இன்னாச் சொல்
எல்லாரும் காணப் பொறுத்து, உய்ப்பர்-ஒல்லை,
இடு நீற்றால் பை அவிந்த நாகம்போல், தம்தம்
குடிமையான் வாதிக்கப்பட்டு.

அருஞ்சொற்பொருள்:
ஒல்லை - விரைவாக
பை அவிந்த - படம் சுருங்கி சினம் அடங்கிய
வாதிக்கப் பட்டு - தடை செய்யப் பட்டு