செவ்வாய், 31 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 55

ஆழ்ந்த சிந்தனையில் நாம் மூழ்கும் பொழுது, நாம் உள்நோக்கத் துவங்கிவோம். நமக்குள் நாமே நாம் வினாக்கள் கேட்போம். “நான் என் அவ்வாறு பேசினேன்? அங்கு அதனை நாம் அவ்வாறு செய்திருக்கலாமோ?” - இது போன்ற வினாக்கள் கொண்டு சுய வேள்வி நடத்தும் போது, நம் மனதின் நிலை, நம் மனதின் வழி  அறிவின் பால் பட்டதா, அல்லது புலன்களின் ஆளுமையில் உணர்ச்சியின் பால் பட்டதா என்ற ஆய்வும், ஆய்வின் முடிவில் நம் மனதிற்கு நாம் கட்டளையிடுவதும் அவ்வப்போது நடப்பது. இது போன்ற ஒரு சுய ஆய்வினை, சுய வேள்வியினை இங்கு நம் முன் வைக்கிறார் இந்த நாலடியார்ப் புலவர்.  



இளமை என்பது முடியக் கூடியது. அவ்வாறான இளமை முடிய முடிய, நாம் மூப்படைந்து, அதனால் நாம் நோய்வாய்ப்படுவதும் இயற்கை. என்னுடன் சேராது புலன்களின் வழி செல்லும் என் மனமே, நிலையாமை உண்மையை உணர்ந்து, இனியாவது நாம் நல்ல வழியில் செல்ல, துணிவு கொண்டு என்னுடன் வருவாயா?

இங்கு இளமை வீணாக கழிந்தது என்ற குறிப்பின் வழி பயனுள்ள செயல்கள் அற்று புலன்களின் ஆளுமையில் இளமைக் காலம் கழிந்தது என்று குறிப்பால் உணர்த்தப் படுகிறது. இப்பாடலின் மற்றுமொரு அழகு  “ என் நெஞ்சே!” என்று தனித்துத் துவங்கி, பின் “நமக்கு" என்று இணைத்து முடித்தது.

பாடல்:
கொன்னே கழிந்தன் றிளமையும் இன்னே
பிணியொடு மூப்பும் வருமால் - துணிவொன்றி
என்னொடு சூழா தெழுநெஞ்சே போதியோ
நன்னெறி சேர நமக்கு.

பதம் பிரித்த பாடல்:
கொன்னே கழிந்தன்று இளமையும்! இன்னே
பிணியொடு மூப்பும் வருமால்;-துணிவு ஒன்றி,
என்னொடு சூழாது, எழுநெஞ்சே!-போதியோ,
நல் நெறி சேர, நமக்கு?

அருஞ்சொற்பொருள்
கொன்னே - வீணாக
போதியோ - போகிறாயோ

இது வரை வெளியிடப்பட்ட பாடல்கள் மற்றும் கருத்துகளின் தொகுப்பினைப் படிக்க: http://thamizhvaan.blogspot.com

சனி, 28 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 54

துறவி என்பவர் யார்? பற்றுகளைத் துறந்தவர், ஆசைகளை விரும்பாமல் விட்டவர், துறவி. எத்தகையவர் துறவு மேற்கொள்வர்? செல்வம் சேர்க்க முடியாதவர் துறவு மேற்கொள்வாரா? தனிமை விரும்புகிறவர் துறவு மேற்கொள்வாரா? துறவு மேற்கொள்பவரின் பண்பு எது? எதற்காக அவர்கள் துறவு மேற்கொள்கின்றனர்? இவ்வினாக்களுக்கு விடைகள் அளிக்கும் விதமாக அமைகின்றது இந்த நாலடியார்ப் பாடல்.



பல நாட்கள் துன்பத்தில் உழன்று இடையிடயே ஓரிரு நாட்கள் மட்டுமே இன்பம் அடையலாம் என்று தெரிந்தும் இன்பத்தை விரும்பிகிறவர்கள் அறிவற்றவர்கள். இன்பம் இடையிடேயே வரும் என்றும் அவ்வாறான இன்பத்தினை அடைய நாம் செய்யும் செயல்களினால் வரும் துன்பங்களையும் அறிந்து, பல நூல்களைக் கற்ற பெரியோர் இல்வாழ்க்கையின் வழி செல்லாமல் அவர்கள் பற்றுகளை விட்டு துறவினை மேற்கொள்வர்.

இப்பாடலில் ஏழையர் என்ற சொல்லின் பயன்பாட்டின் வழி, ஏழையர் என்ற சொல் செல்வம் அற்றவரை மட்டும் குறிப்பிடாது அறிவில் குறைந்தவரையும் ஏழையர் என்று அழைத்தர் என்பது தெரிய வருகிறது.

பாடல்:
துன்பம் பலநாள் உழந்தும் ஒருநாளை
இன்பமே காமுறுவர் ஏழையார் - இன்பம்
இடைதெரிந் தின்னாமை நோக்கி மனையா
றடைவொழிந்தார் ஆன்றமைந் தார்.


பதம் பிரித்த பாடல்:
துன்பம் பல நாள் உழந்தும், ஒரு நாளை
இன்பமே காமுறுவர், ஏழையார்; இன்பம்
இடை தெரிந்து, இன்னாமை நோக்கி, மனை ஆறு
அடைவு ஒழிந்தார், ஆன்று அமைந்தார்.

அருஞ்சொற்பொருள்:

உழந்து - அனுபவித்து
காமுறுவர் - விரும்புவர்
ஏழையார் - அறிவற்றவர்கள்
அடைவு - புகலிடம்
ஆன்று - நிறைந்து - இங்கு “அறிவில் நிறைந்து” என்ற பொருள் கொண்டது

வெள்ளி, 27 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 53

அந்த வாரம் வேலைப் பளு காரணமாக அவளின் மன அழுத்தம் சற்றே அதிகமானது. அதனைச் சரி கட்ட, வார இறுதியில் எந்த வேலையும் செய்வதில்லை என்ற உறுதியோடு எழுந்தாள். காலைக் கடன்களை முடித்து கடற்கரை சென்று காலார நடந்தாள். அந்த அலையின் ஓசை அவளுடைய மனதை இதமாக வருட, அவள் மனதில் சிந்தனைகள் வலம் வந்தன. அட நேற்று போல் இருக்கிறது,எவ்வளவோ நிகழ்வுகள் முடிந்தன! ஆம் இந்த காலச் சக்கரத்தில் பல நிகழ்வுகள்.. ஆனால் நிலைப்பது எது? எப்பொழுதும் இவ்வாறு வினா எழுந்தால், அவள் மனதில் ஒரு குறள் வந்து நிற்கும். ஆனால் அன்று ஒரு நாலடியார் நினைவில் வந்தது.



இனிமையான இல் வாழ்வு, துடிதுடிப்பான இளமைக் காலம், அழகும் வனப்பும் மிகுந்த நம் உடம்பு, நம் சொல்லிய சொல்லை மற்றவர்கள் மேன்மையான சொல்லாகக் கொண்ட நாட்கள், உழைத்து சேர்த்த செல்வம், நன்றாக உணவுண்டு, நற்பயிற்சி கொண்டு பெற்ற வலிமை என்று இவை அனைத்துமே நிலையாக நிற்பது இல்லை. இதனைப் புரிந்துகொண்ட மெய்யறிவு கண்ட மேன் மக்கள் காலத்தை நீடிக்காமல், தாம் உய்வதற்காக பற்றுகளைத் துறந்து நற்செயல்கள் செய்து வாழ்வர்.


பாடல்:

இல்லம் இளமை எழில்வனப்பு மீக்கூற்றம்
செல்வம் வலிஎன் றிவையெல்லாம் - மெல்ல
நிலையாமை கண்டு நெடியார் துறப்பர்
தலையாயார் தாம் உய்யக் கொண்டு.

பதம் பிரித்த பாடல்

இல்லம், இளமை, எழில், வனப்பு, மீக்கூற்றம்,
செல்வம், வலி, என்று இவை எல்லாம், மெல்ல,
நிலையாமை கண்டு, நெடியார், துறப்பர்-
தலையாயார்-தாம் உய்யக் கொண்டு.

அருஞ்சொற்பொருள்

மீக்கூற்றம் - மென்மையான சொல் ; செல்வாக்குள்ள சொல்
வலி - வலிமை

நெடியார் - நீடிக்க மாட்டார்

வியாழன், 26 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 52

உலகில் பிறந்த ஒவ்வொரு உயிர் தாங்கிய உடம்பும் ஒரு நாள் இயற்கை எய்துவது என்பது மறக்கமுடியாத, மறுக்கமுடியாத உண்மை. ஏழையாக இருக்கலாம், செல்வந்தராக இருக்கலாம், ஆணாக இருக்கலாம், பெண்ணாக இருக்கலாம், நகரத்தில் வாழலாம், கிராமத்தில் வாழலாம். எப்படி எங்கு வாழ்ந்தாலும் இறப்பது என்பதனை தவிர்க்க முடியாது. நோயினால் பாதிக்கப்படுவது, முதியவராக வயது கடப்பது, என்று பல காரணங்களால் நாம் இறக்க நேரிடுவது இவ்வுடம்பின் நிலையாமையை உறுதி படுத்துகின்றது. நிலையாமை என்பது நிலையான உண்மை. சரி, அதனை உணர்ந்து நாம் செய்யவேண்டியது என்ன? வினாவிற்கு அழகாக விடையளிக்கிறது இந்த நாலடியார்ப் பாடல்.




உண்மை அறிவை அறிந்த பெரியவர்கள், தங்களுடைய கருமங்களை, அதாவது நற் செயல்களைச் செய்வர். அவ்வாறு நற்செயல்கள் செய்யாமல், முடிவு இல்லாத, கற்று முடிக்க முடியாத, இலக்கணம் மற்றும் சோதிட நூல்களை கற்க முயன்று அதனைப் பற்றியே பேசிக் கொண்டு இருக்கும் மாந்தர்களை விட அறிவற்ற பேதையர் இவ்வுலகில் இல்லை.

பாடல்:

நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தங்கருமம் செய்வார் - தொலைவில்லாச்
சத்தமும் சோதிடமும் என்றாங் கிவைபிதற்றும்
பித்தரின் பேதையார் இல்.

பதம் பிரித்த பாடல்

நிலையாமை, நோய், மூப்பு, சாக்காடு, என்று எண்ணி,
தலையாயார் தம் கருமம் செய்வார்; தொலைவு இல்லாச்
சத்தமும் சோதிடமும் என்று ஆங்கு இவை பிதற்றும்
பித்தரின் பேதையார் இல்.

அருஞ்சொற்பொருள்

தொலைவு - இங்கு முடிவு என்னும் பொருளில் பயன்படுத்தப் பட்டது.
சத்தம் - இலக்கண நூலைக் குறிக்கின்றது
பிதற்றும் - அறிவற்ற வார்த்தைகளை அடிக்கடி சொல்லுதல்
பித்தர், பேதையார் - அறிவற்றவர்

புதன், 25 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 51

அன்று ஒரு மின்வெட்டு. திட்டமிடப்பாடாத மின் வெட்டு. வீடுகளுக்கான மின் வெட்டு திட்டமிடப்பட்டு, எப்பொழுதும் பகலில் தான் நடைபெறும். எதிர்பாராத மின் வெட்டு என்பதால் இரவில் வந்தது. அவள் இருக்கையில் இருந்து எழுந்தாள். இருள் கௌவிய  அந்த நேரத்தில், சிறிது தட்டுத் தடுமாறி, மெழுகுவர்த்தியையும் தீப்பெட்டியும் எடுத்து, மெழுகுவர்த்தியை ஏற்றினாள். என்னவொரு மாறுபாடு..ஒளி இல்லையென்றால் எவ்வாறெல்லாம் தடுமாறிப் போகின்றோம்..சிறு மெழுகுவர்த்தி தான்.. இருந்தாலும் அதனை ஏற்றிய பிறகு அந்த அறை எவ்வளவு ஒளிமயமாகின்றது...இவ்வாறான எண்ணங்கள் அவள் மனதினில் ஓட, அவள் சிறுபிள்ளையாக இருக்கும்பொழுது படித்த நாலடியார்ப் பாடல் நினைவுக்கு வந்தது.



இருள் சூழ்ந்திருக்கும் இடத்தில் ஒரு விளக்கு ஏற்றப்பட்டால், அங்கு ஒளி புகும். அவ்வாறு ஒளி புகும் வேளையில் அங்கு இருள் மறந்து விடும். அது போல ஒருவர் செய்கின்ற தவம் அவர் முன்பு செய்த பாவங்களை நீக்கும். அது சரி.. தவம் என்றால் என்ன? காட்டில் சென்று உணவு நீர் இல்லாமல் மெய்யறிவினை நினைத்திருப்பதா? இல்லை கைகளை தூக்கி ஒரு காலில் நின்று மெய்யறிவினை நினைத்திருப்பதா? இதற்கு விடை தரும் வண்ணம் அமைகிறது அடுத்து வரும் இரண்டு அடிகள். எந்த விளக்கினால் இருள் மறைந்ததோ, அந்த விளக்கின் நெய் குறைத்து வற்றிவிட்டால், அங்கு இருள் மீண்டும் பரவும். அது போன்று நல் வினை தீருமானால், அங்கு தீயவை வந்து நிற்கும் என்கின்றார் நாலடியார்ப் புலவர். தவம் என்று இரண்டாம் அடியில் சொல்லியதும் நல் வினை என்று மூன்றாம் அடியில் சொல்லியதும் ஒன்றானது. ஆக இந்தப் பாடலில் தவம் என்பது நற் செயல்கள் செய்வதனை குறிக்கின்றது.

பாடல்:

விளக்குப் புகஇருள் மாய்ந்தாங் கொருவன்
தவத்தின்முன் நில்லாதாம் பாவம் - விளக்குநெய்
தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை
தீர்விடத்து நிற்குமாம் தீது.

பதம் பிரித்த பாடல்

விளக்குப் புக இருள் மாய்ந்தாங்கு, ஒருவன்
தவத்தின்முன் நில்லாதாம் பாவம்; விளக்கு நெய்
தேய்விடத்துச் சென்று இருள் பாய்ந்தாங்கு, நல் வினை
தீர்விடத்து நிற்குமாம், தீது.

அருஞ்சொற்பொருள்

மாய்ந்து - மறைந்து

தீர்விடத்து - தீரும் இடத்து

செவ்வாய், 24 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 50

குற்றம் என்பதனை எவ்வாறு வரையறுப்பது? ஒருவரின் செயலால் மற்றவருக்கு தீங்கு நேருமானால் அந்தச் செயல் குற்றம் எனப்படுமா? அல்லது அந்தச் செயலுக்கு முன்னதாகவே தோன்றும் எண்ணங்கள், சிந்தனைகள் குற்றங்கள் எனப்படுமா? நம் தமிழ் இலக்கியக் களஞ்சியத்தில் இவ்வினாக்களுக்கு விடையளிக்கப் பல்வேறு பாடல்கள் இருக்கின்றன. ஒருவர் மனத்தளவில் மாசு இல்லாதவராக இருப்பது தான் அறத்தின் வழி நிற்பது  என்கிறார் வள்ளுவர். இவ்வாறு மனம் சார்ந்த ஒரு குற்றத்தைப் பற்றியும் அந்த குற்றம் எவ்வாறு ஒருவரிடமிருந்து நீங்கும் என்பதையும், அவ்வாறு குற்றம் நீங்கியவர் நிலை பற்றியும் இந்த நாலடியார்ப் பாடல் விளக்குகிறது.



ஒருவர் தமது உடம்பின் மேல் ஆசை வைத்து, அறச் செயல்களை நினையாது, உடலால் உண்டாகும்  இன்பங்களை மட்டும் நினைத்து துய்ப்பார்கள் என்றால் அவர்கள் குற்றம் புரிந்தவர் ஆவர். அவர்கள் எப்போது குற்றம் நீங்குவார்கள்?  இவ்வுலகில் வாழ்ந்து மடிந்தவரின் வெள்ளை தலை ஓடுகளால் இந்த உடலின் நிலையாமையினை உணர்த்துப் படும் பொழுது அவர்கள அந்த குற்றத்தில் இருந்து விடுபடுவர். அவ்வாறு விடுபட்ட மாந்தர், “இவ்வுடலின் நிலை நிலையாமை ஒன்று தான்” என்று அறிந்து தங்கள் உடலைப் பெரிதாகப் பொருட்படுத்தாது அறச் செயல்களில் ஈடுபடுவார்கள்.


பாடல்:

உயிர்போயார் வெண்டலை உட்கச் சிரித்துச்
செயிர்தீர்க்குஞ் செம்மாப் பவரைச் - செயிர்தீர்ந்தார்
கண்டிற் றிதன்வண்ண மென்பதனால் தம்மையோர்
பண்டத்துள் வைப்ப திலர்.

பதம் பிரித்த பாடல்

உயிர் போயார் வெண் தலை உட்கச் சிரித்து,
செயிர் தீர்க்கும், செம்மாப்பவரை; செயிர் தீர்ந்தார்
கண்டு, 'இற்று, இதன் வண்ணம்' என்பதனால், தம்மை ஓர்
பண்டத்துள் வைப்பது இலர்.

அருஞ்சொற்பொருள்

செயிர் - சுற்றம்
செம்மப்பவரை - இன்புறுகின்றவரை

இற்று - இத்தகையது

ஞாயிறு, 22 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 49

கொஞ்சம் அலுப்புத்தட்ட, எதுவும் செய்ய விருப்பம் இல்லாத நிலையில் இருந்த அவன், தான் எடுத்த பழைய நிழற்படங்களை பார்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அவன் இடுகாட்டில் எடுத்த ஒரு படம் கண்ணில் பட்டது. அன்றைய நாள் நினைவுகள் அவன் கண் முன்னே காட்சியாய் வந்தன.




அந்தப் படம் இறந்த ஒருவரின் உடம்பு எரிக்கப் பட்ட பின்னர் இருந்த தலையின் ஓடு ஆகும். கண்கள் இருந்த இடம் மிகவும் ஆழம் மிகுந்த குழிகளைக் கொண்டு, பார்ப்பவர்க்கு அச்சம் எழச்செய்யும் வண்ணம் இருந்தது. அது ஏதோ செய்தி சொல்வது போல் தெரிகிறதே! என்னவென்று கேட்போமா? அது இன்னும் இறக்காமல் இருப்பவரைப் பார்த்து, உங்கள் உடம்பின் நிலையும் இத்தன்மையது தான், அதனால் நீங்கள் அறச் செயல்களை கைப் பிடித்து நல்ல வழியில் நில்லுங்கள் என்று ஒரு புன்முறுவலுடன் சொல்வது போல் தெரிகிறது.


அந்தப் படம் கொண்டு வந்த சிந்தனைகளால் அவன் சோம்பல் முறிய, இனி இருக்கப் போகும் நாட்களில் இனிய அறங்கள் செய்து வாழ்வோமாக என்றெண்ணி செயலில் இறங்கினான்.


பாடல்:

கழிந்தார் இடுதலை கண்டார்நெஞ் சுட்கக்
குழிந்தாழ்ந்த கண்ணவாய்த் தோன்றி - ஒழிந்தாரைப்
போற்றி நெறிநின்மின் இற்றிதன் பண்பென்று
சாற்றுங்கொல் சாலச் சிரித்து.


பதம் பிரித்த பாடல்:

கழிந்தார் இடு தலை, கண்டார் நெஞ்சு உட்க,
குழிந்து ஆழ்ந்த கண்ணவாய்த் தோன்றி, ஒழிந்தாரை,
'போற்றி நெறி நின்மின்; இற்று, இதன் பண்பு' என்று
சாற்றும்கொல், சாலச் சிரித்து!


அருஞ்சொற்பொருள்

உட்க - அஞ்ச
கண்ணவாய் - கண்கள் இருந்த இடத்தில் இருக்கும் குழி

சனி, 21 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 48


மெல்லோட்டம் மற்றும் மெது நடையுடன் அவள் இயற்கையை உள்வாங்கிகொண்டிருந்தாள். பாதையைக் கடக்கும் பொழுது ஒரு வண்டி பாதையின் ஓரமாக நின்றிருந்தது. வண்டியின் அச்சு முறிந்ததால், அவ்வண்டியின் பயணம் அன்று முடிந்திருந்தது. உண்மை தான். அச்சு இருக்கும் வரையில் தான் வண்டியின் இயக்கம். அந்தக் காட்சியைக் கண்ட அவளுக்கு நாலடியார்ப் பாடல் நினைவுக்கு வர, அதைப் பற்றி சிந்திக்கத் துவங்கினாள்.


நம் உடம்புக்கும் உயிருக்குமான உறவு, ஒரு வண்டிக்கும் அவ்வண்டியின் அச்சுக்குமான உறவுக்கு இணையானது. அச்சில்லாத வண்டி முச்சாணும் ஓடாது என்பது போல் உயிரற்ற உடலின் இயக்கம் உடனே நின்றுவிடும். அவ்வாறு உயிரிழந்த உடம்பின் நிலை எவ்வாறு இருக்கும்? அவ்வுடம்பு இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்படும். அவ்வுடம்பினை வலிமையான பெண் மற்றும் ஆண் கழுகுகள் புரட்டி குத்தி உணவாகக் கொள்ளும். இதனை அறியாமல் தானோ அறிவற்ற மாந்தர் உடம்பில் பூசப் படும் சந்தனம், மற்றும் அணியப்படும் மாலையையும் கண்டு இவ்வுடம்பினைப் பாராட்டுவர்?

நாலடியார் பாடலின் ஆழமான கருத்தினை மனதினில் அசைபோட்டுக் கொண்டே இல்லம் திரும்பினாள் அவள்.

உட்கருத்து: உடம்பைப் பாராட்டாது உயிருக்கு பயனளிக்கும் அறச் செயல்களை செய்வோமாக.

பாடல்:
பண்டம் அறியார் படுசாந்தும் கோதையும்
கண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல் - மண்டிப்
பெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்தும்
முடைச்சாகா டச்சிற் றுழி.

பதம் பிரித்த பாடல்

பண்டம் அறியார், படு சாந்தும் கோதையும்
கண்டு, பாராட்டுவார் கண்டிலர்கொல்-மண்டிப்
பெடைச் சேவல் வன் கழுகு பேர்த்து இட்டுக் குத்தல்,
முடைச் சாகாடு அச்சு இற்றுழி?

அருஞ்சொற்பொருள்

பண்டம் : உணவுப் பொருள் ; இங்கு உடம்பைக் குறிக்கிறது.
சாந்து : சந்தானம்
கோது : மாலை
கண்டிலர்கொல் : அறிந்திலர் போலும்
மண்டி - சேர்ந்து
பேர்த்து - புரட்டி
முடை - புலால் நாற்றம்
இற்று - முறிந்து

வியாழன், 19 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 47

ஒரு குடம். அதில் ஒன்பது துவாரங்கள். அந்த ஒன்பது துவாரங்களின் வழியாக இவ்வுலகின் பொருள்களின் பரிமாற்றத்தால், அருவருக்கத் தக்க அழுக்குகள் அக்குடத்தினுள். அந்தக் குடத்தினுள் அவ்வழுக்குகள் அங்கும் இங்குமாக சிதறி அலை மோதுகின்றன. அக்குடத்தின் மேல் அழகான ஓர் உறை. அந்த உறையின் அழகினால் உள்ளே இருக்கும் அழுக்குகள் மறைவதில்லை. உடம்பினை இது போன்ற குடத்திற்கு ஒப்பிடுகிறார் இந்த நாலடியார்ப் புலவர்.


இளமையும் அழகும் பொருந்திய தோல் போர்த்திய ஒரு பெண்ணின் உடலைப் பார்த்து, அதனால் கண்களில் ஒளிபெருக, "இவள் பெரிய தோளை உடையவள். இவள் கவர்ச்சியான வளையல்கள் அணிந்தவள்" என்று அப்பெண்ணைப் பார்த்து மயங்குகின்ற மாந்தர் அறிவற்றவர்களே. ஏன் என்றால் எந்த உடம்பைப் பார்த்து மயங்கினார்களோ அந்த உடம்பினுள் அருவருக்கத் தக்க அழுக்குகள் அங்கும் இங்கும் அலை மோதும். 

உட்கருத்து : அறிவு மிகுந்த மாந்தர் உடம்பின் அழுக்கு நிலையை உணர்ந்து, உடம்பின் புற அழகினைப் போற்றாமல், அக அழகினைப் போற்றி அறம் செய்து வாழ்வார்கள். 

பாடல்: 

ஊறி உவர்த்தக்க ஒன்பதுவாய்ப்புலனும்
கோதிக் குழம்பலைக்கும் கும்பத்தைப் - பேதை
பெருந்தோளி பெய்வளாய் என்னுமீப் போர்த்த
கருந்தோலால் கண்விளக்கப் பட்டு.

பதம் பிரித்த பாடல் :

ஊறி, உவர்த்தக்க ஒன்பது வாய்ப் புலனும்
கோதிக் குழம்பு அலைக்கும் கும்பத்தை, பேதை,
'பெருந்தோளி! பெய்வளாய்!' என்னும்-மீப் போர்த்த
கருந் தோலால் கண் விளக்கப்பட்டு.

அருஞ்சொற்பொருள்:

உவர்த் தக்க - அருவருக்கத்தக்க 
கோதி - சிதறுதல்
கும்பம் - குடம், கரகம் - இங்கு உடம்பைக் குறித்தது 
பெருந்தோளி - பெரிய தோளை உடையவள் 
பெய்வளாய் - வளையல் இட்டவள் 
மீ - மேல் 
கருந் தோலால் - அழகிய தோலால் 


புதன், 18 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 46

பூங்காவில் அமர்ந்து மாலைப் பொழுதின் இனிமையை ரசித்துக் கொண்டிருந்தான் அவன். அப்பொழுது அங்கு ஒரு பெண் அவ்வழியே நடந்து சென்றாள். பார்ப்பதற்கு அழகு மிகுந்து திகழ்ந்தாள் அந்தப் பெண். அவளைப் பார்த்து ஒரு நிமிடம் அவன் தன்னிலை மறந்தான். தன்னை மறந்த நிலையில் இருந்து வெளியே வந்த அவன், சிந்தனையில் மூழ்கினான். "அட என்ன இப்படிச் செய்து விட்டோமே? நாம் கல்வி அறிவு இல்லாத மாந்தர் போல் புற அழகில் மயங்கிவிட்டோமே! இந்த புற அழகென்பது உடம்பின் பால் வந்தது. அவ்வுடம்பு எதனால் ஆனது? எத்தன்மையது?"


சிந்திக்க சிந்திக்க, சிறிது தெளிவு வந்தது. அந்த உடம்பு, குடலும், கொழுப்பும், குருதியும், எலும்பும், உடல் முழுதும் தொடராக இருக்கும் நரம்பும், இவையனைத்துக்கும்    இடையிடையே தசையும், கொழுப்போடு திகழும் வழுவழுப்பு கொண்ட நிணமும், தோலும் கொண்டது. சரி, அப்படியென்றால், இதில் எந்தப் பகுதி இனிமையான, அழகான பெண்?" விடை பகர முடியாத வினா இது. அழகென்பது அகம் சார்ந்தது என்று உணர்த்திய நாலடியார்ப் பாடல் நினைவுக்கு வர, பூங்காவில் இருந்து அவன் புறப்பட்டான். 

பாடலின் உட்கருத்து: உண்மையறிவை உணர்ந்தவர்கள் பெண்ணின் புற அழகைப் பார்க்காமல் அக அழகினைப் போற்றுவர். 

பாடல்:

குடருங் கொழுவுங் குருதியும் என்பும்
தொடரும் நரம்பொடு தோலும் - இடையிடையே
வைத்த தடியும் வழும்புமாம் மற்றிவற்றுள்
எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள்.

பதம் பிரித்த பாடல் :

குடரும், கொழுவும், குருதியும், என்பும்,
தொடரும் நரம்பொடு தோலும், இடையிடையே
வைத்த தடியும், வழும்பும், ஆம் மற்று இவற்றுள்
எத் திறத்தாள், ஈர்ங் கோதையாள்?

அருஞ்சொற்பொருள்: 

குடரும் - குடலும் 
கொழுவும் - கொழுப்பும் 
என்பும் - எலும்பும் 
தடியும் - தசையும் 
வழும்பு - நிணம் - வழு வழு தன்மை கொண்டு கொழுப்போடு இருக்கும் பொருள் 
எத் திறத்தாள் - எந்தப் பகுதியைச் சார்ந்தவள் 
ஈர் - இனிமை 

செவ்வாய், 17 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 45

பல்லாண்டுகளுக்கு முன்பு நடந்தது இந்த நிகழ்வு. அந்தப் புலவர்  வெகுதூரம் நடந்து சென்றார். ஊருக்கு புறம் வந்தபிறகு சுடு காடு தென்பட்டது. சரி இன்னும் கொஞ்சம் நடக்கலாம் என்று எண்ணி நடந்தார். சுடு காட்டில் பல பொருட்கள் கிடந்தன. அன்று அவர் கண்ணில் பட்டது பல் எலும்புகள். அந்த எலும்புகள் அனைவரும் பார்க்கும் வண்ணம் சுடுகாட்டில் சிதறிக் கிடந்தன. அந்த எலும்புகளைப் பார்த்தால் அழகிழந்து திகழ்ந்தன. இந்தப் பல் எலும்புகள் உடம்பில் இருக்கும் பொழுது, கல்வி அறிவு அற்றவர்கள் எவ்வாறு விவரித்திருப்பார்கள்? புலவர் அல்லவா.. கற்பனை மிகுந்தது...


ஒருவரின் பற்களைப் பார்த்து, "அட இது முல்லை அரும்புகள் போல் இருக்கின்றனவே! இல்லை இல்லை முத்துக்கள் போல் அழகு பொழிகின்றன" என்று புனைவுகளைப் பேசுவார்கள் அறிவற்ற மாந்தர்கள். உலகின் உண்மை நமக்கு முன்னே சிதறிக் கிடக்கும் பொழுது, அவர்கள் பேச்சினைக் கேட்டு, புற அழகில் மயங்கி, ஆசை வயப்பட்டு, அதனால் கவலைக்கு உள்ளாக மாட்டேன் என்று உறுதி பூண்டார். தான் எடுத்துக் கொண்ட உறுதியை பாடலாக எழுதினர்...

உட்கருத்து : புற அழகில் மயங்காமல், அக அழகைக் கூட்டும் நற்செயல்கள் செய்வோமாக. 

பாடல்

முல்லை முகைமுறுவல் முத்தென் றிவைபிதற்றும்
கல்லாப்புன் மாக்கள் கவற்ற விடுவெனோ
எல்லாரும் காணப் புறங்காட் டுதிர்ந்துக்க
பல்லென்பு கண்டொழுகு வேன்.

பதம் பிரித்த பாடல் 

'முல்லை முகை, முறுவல், முத்து' என்று இவை பிதற்றும்
கல்லாப் புன்மாக்கள் கவற்ற விடுவெனோ-
எல்லாரும் காண, புறங்காட்டு உதிர்ந்து உக்க
பல்-என்பு கண்டு ஒழுகுவேன்?

திங்கள், 16 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 44

இனிய மாலைப் பொழுது அது. மிதிவண்டியில் சுற்றுகள் வரலாம் என்று அவன் அவ்வூரில் இருந்த குளக்கரைக்கு வந்தான். அதிக வெப்பமும் இல்லாமல், குளிரும் இல்லாமல், அந்தப் பொழுது இதமாக இருந்தது. இரு சுற்றுகள் மிதிவண்டியில் வந்த பிறகு அவன் கண்ணில் பட்டது அந்த குவளை மலர். வெண்மை நிறத்தின் நடுவில் கருவிழி போல் வெண்மை நிறம் கொண்டு திகழ்ந்ததால் தானோ குவளை மலரினை குமரியின் கண்களுக்கு ஒப்பிட்டனர்? அட அது மட்டுமா.. கண்ணைக் கவரும் அந்தக் கண்களின் வடிவம் மீன் போன்றதனால் கயல் விழியாள் என்றுமல்லவா வர்ணித்தனர்! அக் கண்களின் கூர்மையால் வேல் விழியாள் என்றும் விவரித்தனரே! அவனின் சிந்தனைகள் குமரியின் கண்களுக்கான உவமைகளை சிந்திக்க, இந்த இவமைகளை மேற்கோளிட்டிருக்கும் நாலடியார்ப் பாடலை நினைவு கூர்ந்தான்.



உடம்பின் உண்மைத் தன்மையை அறிந்த பெரியோர், மெய் அறிவற்ற மாந்தர்கள், அறியாமையின் காரணமாக, உடம்பின் அழகை மட்டும் பார்த்து மயங்குவது போல் மயங்கி, கவலைக்கு ஆளாகமாட்டர்கள். ஏன் என்றால், குவளை மலர் என்றும், கயல் என்றும், வேல் என்றும் விவரிக்கப் பட்டாலும், ஒருவரின் கண்களில் இருக்கின்ற உள் நீர் வற்றிவிட்டால், அவரின் முகம் தோண்டி எடுக்கப்பட்ட நுங்குபோல் காட்சியளிக்கும் என்பதனை, அவர்கள் முற்றும் உணர்ந்தவர்கள்.

பாடலின் உட்கருத்து: புற அழகினைப் பார்த்து மயங்காமல் அக அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

பாடல்: 

தெண்ணீர்க் குவளை பொருகயல் வேலென்று
கண்ணில்புன் மாக்கள் கவற்ற விடுவெனோ
உண்ணீர் களைந்தக்கால் நுங்குசூன் றிட்டன்ன
கண்ணீர்மை கண்டொழுகு வேன்.


பதம் பிரித்த பாடல்:

'தெள் நீர்க் குவளை, பொரு கயல், வேல்' என்று,
கண் இல் புன்மாக்கள் கவற்ற, விடுவெனோ-
உள் நீர் களைந்தக்கால் நுங்கு சூன்றிட்டன்ன
கண் நீர்மை கண்டு ஒழுகுவேன்?

அருஞ்சொற்பொருள்: 

கண் இல் - மெய் அறிவில்லாத
கவற்ற - என்னைக் கவலையுற
சூன்றிட்டு அன்ன - தோண்டி விட்டாற்போன்ற
நீர்மை - இயல்பை

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 43

இவ்வுலகில் பிறந்து வாழும் நாம் இயங்குவதற்கு உடலும் உயிரும் இணைந்திருப்பது இன்றியமையாதது. உடல் இயங்க உயிரும் உயிருக்கு உறுதுணையாக உடலும் இருக்கின்றது. இவ்வாறு உடலும் உயிரும் சேர்ந்திருக்க, அதற்குத் தேவையான சக்தி வழங்க உணவு உண்ணுதல் வேண்டும். அவ்வாறு உண்ணும் உணவை சக்தியாக மாற்ற நம் உடம்பு உணவைச் சீரணிக்கும் பொழுது தேவயற்ற பொருட்கள், வாயுக்கள் வருவது இயற்கை.



துர்நாற்றம் வருகிறதென்று வாசனையுள்ள பொருட்களைச் சாப்பிட்டாலோ அல்லது வாசனை மிகுந்த மலர்களைச் சூடினாலோ துர்நாற்றமோ அல்லது தேவையற்ற பொருளோ வராமல் இருப்பது இல்லை. அதனால் அவ்வாறு உண்டு அல்லது உடுத்தி வாசனை சேர்க்கத் தேவையல்ல என்பதை உணர்ந்தவர்கள் பெரியோர். அவர்கள் இவ்வாறு செய்வதை கைவிட்டவர்கள்.

உட்கருத்து: உடம்பை சுத்தப் படுத்தி வாசனை சேர்க்கும் செய்கைகளில் நேரத்தை செலவழிக்காமல் நம் உள்ளமும் உயிரும் விரும்பும் வண்ணம் நற்செயல்கள் செய்வோமாக.

பாடல்: 

தக்கோலம் தின்று தலைநிறையப் பூச்சூடி
பொய்க்கோலம் செய்ய ஒழியுமே - எக்காலும்
உண்டு வினையுள் உறைக்கும் எனப்பெரியோர்
கண்டுகை விட்ட மயல்.

பதம் பிரித்த பாடல்:

தக்கோலம் தின்று, தலை நிறையப் பூச் சூடி,
பொய்க் கோலம் செய்ய, ஒழியுமே-'எக்காலும்
உண்டி வினையுள் உறைக்கும்' எனப் பெரியோர்
கண்டு, கைவிட்ட மயல்?

அருஞ்சொற்பொருள்:

தக்கோலம் - ஒருவித மணப் பொருள்
உறைக்கும் - துர்நாற்றம் ஏற்படும்

வெள்ளி, 13 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 42

அயர்ச்சி நீங்க, துயில் முடித்து எழுந்தான் அவன். பொங்கல் விழா நெருங்கிக் கொண்டிருந்தது. வீடெல்லாம் சுத்தம் செய்து முடிக்கவேண்டுமே என்று நினைத்து அந்த வார இறுதியில் வீட்டின் ஒரு பகுதியை சுத்தம் செய்து முடிக்க முடிவு செய்தான். வேலை விறுவிறுவென்று நடந்தது. அப்பொழுது அழகான ஒரு பை அவன் கண்ணில் பட்டது. அழகைப் பார்த்து அதனால் கவரப்பட்டு அருகே சென்று அப்பையை எடுத்தான். எடுத்து உள்ளே என்ன இருக்கிறது என்று பையை திருப்பிப்  பார்க்கும் பொழுதான் தெரிந்தது அதனுள் இருந்த தூசியும் துர்நாற்றமும். வெகு நாட்களாக சரியாக பராமரிக்காமல், வெளியே பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் உள்ளே அசுத்தங்களுடன் இருந்தன. அட.. இதைத்தானே ஒரு நாலடியார்ப் புலவர் பாடியிருக்கிறார் என்று உணர்ந்த அவனுக்கு, அந்தப் பாடல் நினைவுக்கு வந்தது.

தோலால் உண்டான போர்வை.. இந்தப் போர்வையில் துளைகள் பல உள்ளன. துளைகள் உள்ள இந்தப் போர்வை பல மாசுக்களை போர்த்தி இருக்கின்றது. மாசுக்கள் மறைக்கப் பட்டிருப்பதினால்தான் இவ்வுடம்பு மாட்சிமை பொருந்தித் திகழ்கின்றது. பொய்களை, மாசுகளை மறைக்கும் போர்வையினால் உண்டான அழகில் மயங்காமல், பையை திருப்பிப் பார்த்தால், எவ்வாறு உண்மை தெரியுமோ, அது போல் உடம்பின் உண்மை நிலை உணர்ந்து செயல்படுவமாக. 

பாடல் : 

தோல்போர்வை மேலும் தொளைபலவாய்ப் பொய்ம்மறைக்கும்
மீப்போர்வை மாட்சித் துடம்பானால் - மீப்போர்வை
பொய்ம்மறையாக் காமம் புகலாது மற்றதனைப்
பைம்மறியாப் பார்க்கப் படும்.

பதம் பிரித்த பாடல்: 

தோல் போர்வைமேலும் துளை பலவாய், பொய்ம் மறைக்கும்
மீப் போர்வை மாட்சித்து, உடம்பு; ஆனால், மீப் போர்வை
பொய்ம் மறையா, காமம் புகலாது, மற்று அதனைப்
பைம் மறியாப் பார்க்கப்படும்.

அருஞ்சொற்பொருள்:
பொய் - மாசு 
மீ - மேல் 
பை மறியா - பையின் திருப்பமாக 

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 41

துறவு மேற்கொள்பவரின் மன நிலை எவ்வாறு இருக்க வேண்டும்? மனது தூய்மையோடு இருக்க வேண்டும் அல்லவா? தூய்மை ஒன்றையே நினைத்து அதன் ஒருமையுடன் இருக்கவேண்டும். அவ்வாறு துறவு மேற்கொண்ட ஒருவர் தவறி நடந்தால் என்னவாகும்? அவர் மனம் தடுமாறினால் அவரைப் பற்றி இவ்வுலகம் என்ன நினைக்கும்?  இன்று நாம் படிக்கவிருக்கும் நாலடியார்ப் பாடல் இதனை விளக்குகிறது.



மிகவும் அழகான நபர். அவரைக் கண்டவரை மயக்கும் வண்ணம் அவர் நிறமும் அமைப்பும் இருந்தது. அத்தகைய அழகான ஒருவருக்கு ஈயின் சிறகு அளவுக்கு ஒரு புண் ஏற்பட்டது. புண் மிகச் சிறிதாக இருந்தாலும், அவர் அழகாக இருந்தாலும், அந்தப் புண்ணைக் கொத்த காக்கை வரும். அதனை விரட்ட ஒரு பெரிய கோல் வேண்டும். ஒருவரின் அழகோ நிறமோ ஒருவரின் உடம்பை காக்கை கொத்தாமல் செய்வதில்லை. அவ்வாறான இழிநிலை கொண்ட உடம்பினைப் பார்த்து, பெரியவர்கள், "மாந்தளிரின் நிறம் போன்ற நிறமும் இளமையும் பொருந்திய பெண்ணே"  என்று துதித்துக் கத்துகிற பெரியவர்கள், மிகவும் அற்பமாக, உடம்பைப் பார்ப்பதை இழிவான செயல் என்று நினைக்கமாட்டர்களா? 

உட்கருத்து: துறவு பூண்ட ஒருவர் இழிவான உடம்பை மேன்மையாக நினைத்தல் அசுத்தமேயல்லாது சுத்தமன்று.

பெரியவர் என்று பயன்படுத்தியது வஞ்சப்புகழ்ச்சியணி. 

பாடல்: 

மாக்கேழ் மடநல்லாய் என்றரற்று சான்றவர்
நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை - யாக்கைக்கோர்
ஈச்சிற கன்னதோர் தோல் அறினும் வேண்டுமே
காக்கை கடிவதோர் கோல்.

பதம் பிரித்த பாடல்: 

'மாக் கேழ் மட நல்லாய்!' என்று அரற்றும் சான்றவர்
நோக்கார்கொல், நொய்யது ஓர் புக்கிலை? யாக்கைக்கு ஓர்
ஈச் சிறகு அன்னது ஓர் தோல் அறினும், வேண்டுமே,
காக்கை கடிவது ஓர் கோல்!

அருஞ்சொற்பொருள்: 

கேழ் - நிறங்கொண்ட 
அரற்றும் - கத்தும் - இங்கு துதித்திக் கொண்டாடும் என்ற வகையில் கையாளப்பட்டுள்ளது. 
நொய்யது - இழிவானது 

புதன், 11 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 40

நம் உடம்புக்கும் உயிருக்குமான தொடர்பு வியக்கத் தக்க உறவாகும். உடம்பின் இயக்கத்திற்கு உயிர் வேண்டும். உயிரின் இயக்கத்திற்கு உடம்பு வேண்டும். இது ஒன்றுக்குள் ஒன்று பின்னிப் பிணைந்திருப்பது. இதில் எது நிலைத்திருப்பது? எதனைப் பின் பற்றினால் உடம்பு நிலையாக இருக்கும்? எதனைப் பின் பற்றினால் உயிர் நிலையாக இருக்கும்? நிலையாய் நீடித்திருப்பதற்கு வழி உண்டா?

பல வினாக்கள். பலர் பல காலம் விடை தேடும் வினாக்கள். ஓரளவு விடையளிக்கும் விதமாக ஒரு நாலடியார்ப் பாடல்.



எவ்வகை செயல் செய்து (நல்ல செயல் மட்டுமல்ல, இழிவான செயல் செய்து) உணவு ஈட்டி, அதனால் உடம்பு உறுதி பெற்று, அவ்வுறுதியினால் உடம்பு நீடித்து நிலையாக இருக்கும் என்றால், இந்த நாலடியார்ப் புலவர் யாரும் செய்யத் தயங்கும் செயலையும் செய்வேன் என்கிறார். அது என்ன செயல்? ஒருவருக்கு அணிகலனாக அமைவது ஒருவரின் மானம் ஆகும். மானம் இழந்தால் உயிர் விடும் மாந்தர் பிறந்த இம்மண்ணில், அந்த அணிகலனையே துறந்து, மானமிழந்து, பிச்சையெடுத்து வாழ்வேன் என்கின்றார்.

உட்கருத்து: எவ்வகை உணவு எவ்வழி ஈட்டினும் உடம்பு நிலைத்திருப்பதில்லை. உயிரும் நிலைத்திருப்பதில்லை. அதனால் நிலையாய் இருக்கும் அறச் செயல்களை செய்வோமாக.

பாடல்: 

மான அருங்கலம் நீக்கி இரவென்னும்
ஈன இளிவினால் வாழ்வேன்மன் - ஈனத்தால்
ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந் திவ்வுடம்பு
நீட்டித்து நிற்கும் எனின்.

பதம் பிரித்த பாடல்:

மான அருங் கலம் நீக்கி, இரவு என்னும்
ஈன இளிவினால் வாழ்வேன்மன்-ஈனத்தால்
ஊட்டியக் கண்ணும் உறுதி சேர்ந்து, இவ் உடம்பு
நீட்டித்து நிற்கும் எனின்!

அருஞ்சொற்பொருள்:

அருங்கலம் - அணிகலன்
இரவு - இரத்தல் - பிச்சை எடுத்தல்
ஈன - ஏளனமான
இளிவினால் - இழி தொழிலினால்
ஊட்டியக் கண்ணும் - உண்பித்த இடத்திலும்

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 39

#நாளுமொருநாலடியார் #நாலடியார்

அவன் தன் குழந்தையுடன் விளையாட்டு மைதானத்திற்கு வந்திருந்தான். மாலையின் இளம் வெப்பத்தில், காற்று மெதுவாக வீச, அந்தப்  பொழுது இனிதாக இருந்தது. குழந்தையை ஊஞ்சலில் வைத்து ஆட்டி விட்டான். ஊஞ்சல் மேலே போவதும் கீழே வருவதுமாக இருந்தது. மேலே செல்வது எல்லாம் கீழே வருமா? அனைத்து நிகழ்வுக்கும் எதிர் நிகழ்வு உண்டா? முன்னே செல்லம் பொருள் பின்னே வந்தாக வேண்டுமா? சிந்தனைக்கு வித்திட்டன அந்த வினாக்கள். சிந்தித்துப் பார்த்ததன் முடிவில் அவன் ஒரு முடிவுக்கு வந்தான். அனைத்து நிகழ்வுக்கும் எதிர் நிகழ்வு இருக்கவேண்டும் என்பது இல்லை. அதற்கு எடுத்துக் காட்டாக அவனுக்கு ஒரு நாலடியார்ப் பாடல் நினைவில் வந்தது. அந்தப் பாடல் நேரம் மற்றும் வாழ்நாள் எவ்வாறு ஒரு திசை மட்டும் நோக்கிச் செல்கிறது என்பதைப் பற்றி உணர்த்தியிருக்கும்.



"நாள் தோறும் காலம் (நாட்பொழுது) வந்து தோன்றி மறைவதைப் பார்த்தும், அதனை உணராமல், அறச் செயல்களை செய்யாமல் நம் நேரம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று நினைத்து இன்பச் செயல்கள் மட்டுமே செய்யும் மாந்தரும் இருக்கின்றனர். அம்மாந்தர்கள் நாள்தோறும் தம்முடைய வாழ்நாள் அதிகரித்து ஆயுள் பெருகிக் கொண்டு இருக்கும் என்று நினைத்து வாழ்நாளின் நிலையாமையை உணராதவர்கள் ஆவர்." பாடலின் கருத்தை அசைபோட்ட அவன் அதன் உட்கருத்தை மீண்டும் உள் வாங்கிக்கொண்டான்: இங்கு நமக்குள்ள காலம் மிகச் சிறிது. அந்தக் காலத்தில் அறச் செயல்களும் செய்து இன்புறுவோமாக.

பாடல்:

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.

பதம் பிரித்த பாடல்:

வைகலும் வைகல் வரக்கண்டும், அஃது உணரார்,
வைகலும், வைகலை வைகும் என்று இன்புறுவர்-
வைகலும் வைகல் தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்து உணராதார்.

அருஞ்சொற்பொருள்: 

வைகலும் - நாள்தோறும்
வைகல் - காலம்
வைகும் - நிலைத்திருக்கும்

திங்கள், 9 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் - 38

அன்று வெப்பம் அதிகமாக இருந்தது. பேருந்துக்கு செல்வதற்கு சிறிது தூரம் தானே என்று அவன் நடந்து கொண்டிருந்தபொழுது சற்று அயர்ந்து அந்த ஆல மரத்தின் நிழலில் அமர்ந்தான். சுகமாக இருந்தது. வெயிலின் நடுவில் நிழலின் அருமை நன்றாக இருந்தது. அதன் அருமையில் அயர்ச்சி நீங்க, அந்த ஆலமரத்தை நோக்கும் பொழுது, அவன் மனதுள் நன்றியெண்ணம் எழுந்தது. அம்மரத்திற்கும், அம்மரத்தினை வளர்ந்தததில் பங்கு வகித்த இயற்கைக்கும், அந்த ஆல மரத்தின் விதையினை நட்ட மாந்தருக்கும் நன்றிகள் தன மனதின் வழி, எண்ணங்களின் வழி வழங்கினான். நட்ட நபர் இன்று இல்லை. ஆனால், அவர் நட்ட ஒரு சிறு விதை இவ்வளவு பெரிய மரமாக வளர்ந்து பல தலைமுறையினருக்கு பயன் அளித்து வருகின்றதே என்ற இன்ப வியப்புடன் அவன் அங்கிருந்து புறப்பட்டான்.

ஒரு ஆல விதை சிறிது தான். ஆனால் அந்த விதை நல்லவர் ஒருவரின் கையில் கிடைத்தால், அது செடியாக தழைத்து மரமாக வளர்ந்து அனைவருக்கும் பலகாலம் நிழல் கொடுப்பது போல், அறச் செயல்கள் சிறிய செயல்கள் ஆனாலும், தகுந்த நல்லவர்க்கு சென்று சேரும் பொழுது, அதனால் அடையும் பயன்களின் அளவு, இவ்வுலகின் வானத்தை சிறியதாக்கி விடும்.

பாடல்:   

உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி
இறப்ப நிழற்பயந் தாஅங் - கறப்பயனும்
தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்.

பதம் பிரித்த பாடல்:

உறக்கும் துணையது ஓர் ஆலம் வித்து ஈண்டி,
இறப்ப நிழல் பயந்தாஅங்கு, அறப்பயனும்,
தான் சிறிதுஆயினும், தக்கார் கைப் பட்டக்கால்,
வான் சிறிதாப் போர்த்துவிடும்.

அருஞ்சொற்பொருள்:

உறக்குதல் - சுருங்குதல் ; சிறிதாதல் .
துணையது-அளவினது
ஈண்டி - அடர்ந்து ; இங்குத் தழைத்து என்னும் பொருளில் பயன்படுத்தப் பட்டது.
இறப்ப - மிகவும்
பயந்தாங்கு - கொடுத்தாற்போல
தக்கார்  - தகுதியுடைய பெரியோர்
போர்த்து விடும் - சூழ வைத்துவிடும்