ஞாயிறு, 22 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 49

கொஞ்சம் அலுப்புத்தட்ட, எதுவும் செய்ய விருப்பம் இல்லாத நிலையில் இருந்த அவன், தான் எடுத்த பழைய நிழற்படங்களை பார்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அவன் இடுகாட்டில் எடுத்த ஒரு படம் கண்ணில் பட்டது. அன்றைய நாள் நினைவுகள் அவன் கண் முன்னே காட்சியாய் வந்தன.




அந்தப் படம் இறந்த ஒருவரின் உடம்பு எரிக்கப் பட்ட பின்னர் இருந்த தலையின் ஓடு ஆகும். கண்கள் இருந்த இடம் மிகவும் ஆழம் மிகுந்த குழிகளைக் கொண்டு, பார்ப்பவர்க்கு அச்சம் எழச்செய்யும் வண்ணம் இருந்தது. அது ஏதோ செய்தி சொல்வது போல் தெரிகிறதே! என்னவென்று கேட்போமா? அது இன்னும் இறக்காமல் இருப்பவரைப் பார்த்து, உங்கள் உடம்பின் நிலையும் இத்தன்மையது தான், அதனால் நீங்கள் அறச் செயல்களை கைப் பிடித்து நல்ல வழியில் நில்லுங்கள் என்று ஒரு புன்முறுவலுடன் சொல்வது போல் தெரிகிறது.


அந்தப் படம் கொண்டு வந்த சிந்தனைகளால் அவன் சோம்பல் முறிய, இனி இருக்கப் போகும் நாட்களில் இனிய அறங்கள் செய்து வாழ்வோமாக என்றெண்ணி செயலில் இறங்கினான்.


பாடல்:

கழிந்தார் இடுதலை கண்டார்நெஞ் சுட்கக்
குழிந்தாழ்ந்த கண்ணவாய்த் தோன்றி - ஒழிந்தாரைப்
போற்றி நெறிநின்மின் இற்றிதன் பண்பென்று
சாற்றுங்கொல் சாலச் சிரித்து.


பதம் பிரித்த பாடல்:

கழிந்தார் இடு தலை, கண்டார் நெஞ்சு உட்க,
குழிந்து ஆழ்ந்த கண்ணவாய்த் தோன்றி, ஒழிந்தாரை,
'போற்றி நெறி நின்மின்; இற்று, இதன் பண்பு' என்று
சாற்றும்கொல், சாலச் சிரித்து!


அருஞ்சொற்பொருள்

உட்க - அஞ்ச
கண்ணவாய் - கண்கள் இருந்த இடத்தில் இருக்கும் குழி

2 கருத்துகள்:

  1. அய்யா வணக்கம்.
    பட்டினத்தாரைப் பற்றி ஒரு கதை கூறப்படுவதுண்டு.
    இழவு வீட்டில் அழுது கொண்டிருப்பவர்களைப் பார்த்துப் பெருகச் சிரித்தபடி, “ செத்த பிணங்களைப் பார்த்து இனிச் சாம் பிணங்கள் அழுகின்றன “ என்று கூறிப்போனாராம் அவர்.

    மண்டையோடு என்றாலே சிரித்துப் பயமுறுத்தும் காட்சிதான் திரைப்படங்களில் வரும். குழிந்த கண்களும் வாய் திறந்து சிரித்தலும்........!

    என்ன அது இங்கு உடலை விரும்பி வளர்ப்பவனைப் பார்த்துச் சிரிக்கிறது.
    “ தம்பி ..! என்னைப் பார் சிந்தி ..!“ இருக்கும் போதே நல்லதைச் செய்...!
    உன் உடம்பு மட்டும் பிராதனம் என்று இருக்கிறாய்... என்னைப் பார் நானும் அப்படி இருந்தவன்தான்...! இப்பொழுது எப்படி இருக்கிறேன் பார்த்தாயா ? ஒழுங்காக இருக்கும் பொழுதே நல்ல வழியில் நடந்துகொள். அழிவதன் மேல் ஆசை கொள்ளாதே..!! என்று கூறிக் கொல் எனச் சிரிக்கின்றன. என்ன அருமையான சித்தரிப்பு.
    இடுகாட்டில் கழிந்தாரின் தலை குழியாழ்ந்த கண்ணவாய்க் கிடத்தல் இயல்பு. அதன் மேல் கவி தன் குறிப்பை ஏற்றிக் கூறுகிறான். இதுவல்லவோ தற்குறிப்பேற்றம்..?!!!
    இதைவிட அருமையாகத் தற்குறிப்பேற்றிச் சொல்ல முடியுமா என்ன?
    ஏன் இதையெல்லாம் பள்ளிகளில் சொல்வதில்லை என்று தெரியவில்லை.
    படித்த பழம்பாட்டையே திரும்பத்திரும்பப் படித்துக் கொண்டிருக்கின்றன நம் பிள்ளைகள்.
    இதனோடு தொடர்புடைய பட்டினத்தான் பாட்டு.

    இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
    ஒறுத்தார்க்கும் தீங்கினையொண் ணாதே! - பருத்ததொந்தி
    நம்மதென்று நாமிருக்க நாய்நரிகள் பேய்கழுகு
    தம்மதென்று தாமிருக்குந் தான்“

    தங்களது தமிழ்ச்சேவை தொடரட்டும்.!!

    தொடர்கிறேன்.

    நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய ஊமைக்கனவுகள் அம்மா/ஐயா, அருமையான பட்டினத்தார் மேற்கோள் மற்றும் விளக்கம். மிக்க நன்றி. இதனை உங்கள் அனுமதியுடன் எனது முகநூலிலும் பகிர்கிறேன்.

      நீக்கு