சனி, 7 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 37

அவள் மெல்லோட்டம் ஓடிய சமயத்தில் வீசிக்கொண்டிருந்த காற்றின் வேகம் சற்று கூடியது. வீசிய காற்று சிறு புழுதியினை சற்றே எழுப்ப கண்களுக்குத் தெரியா நுண்துகள்கள் அவள் மூச்சுக்காற்றுடன் உட்செல்ல இரு தும்மல் தும்மினாள். பல நாட்கள் பலமுறை நடக்கும் நிகழ்வு என்றாலும் அன்று அவளின் தும்மல்கள் அவளைச் சிந்தனை உலகத்திற்கு அழைத்துச் சென்றன. உடம்பின் உறுப்புகள் தான் என்னவொரு அழகாக உடம்பைப் பாதுகாக்கின்றன ? தேவையற்ற நுண்துகள் உட்சென்றால் வெளியேற்ற தும்மல், கிருமி உட்சென்றால் போர்தொடுக்கும் வெள்ளையணுக்கள், சிறு காயம் ஏற்பட்டால் குருதி வெளிச்செல்லாமல் காக்க குருதி உறைதல் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இத்தனை கருவிகளைக் கொண்ட உடம்பு தன்னைத்தானே காத்துக்கொள்ளும். இதனால் தானோ நாலடியார்ப் புலவர் உயிருக்குத் தேவையான செயல்களை உணர்ந்து செய்வது பற்றிப் பாடினார்?



அவளின் மனதினில் அந்த நாலடியார்ப் பாடல் மீண்டும் உதித்தது. "இவ்வுலகில் வாழும் மக்களால் செய்யத்தக்க நற்செயல்கள் என்னவென்று ஆராய்ந்து பார்த்தால், அவ்வாறான செயல்கள் எண்ணில் அடங்காது. அவ்வாறு அத்தனை செயல்கள் இருக்கும் பொழுது, பல கருவிகள் கொண்டு தன்னைக் காத்துக்கொள்ளும் உடம்பக்குத் தேவையான செயல்களைச் செய்யாமல், உயிர் பிறந்து வாழ்ந்ததற்குப் பயனாக நல்ல செயல்களைச் செய்வோமாக. அவ்வாறு நற்செயல்கள் செய்தால் உயிர் இவ்வுடலை விட்டு பிரிந்த பின்னர் மேலுலகத்தில் இன்புறும்" என்பதுதான் அப்பாடலின் கருத்து. 

பாடல்:


மக்களா லாய பெரும்பயனும் ஆயுங்கால்
எத்துணையும் ஆற்றப் பலவானால் - தொக்க
உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகா தும்பர்க்
கிடந்துண்ணப் பண்ணப் படும்.

பதம் பிரித்த பாடல்:

மக்களால் ஆய பெரும் பயனும், ஆயுங்கால்,
எத்துணையும் ஆற்றப் பலஆனால், தொக்க
உடம்பிற்கே ஒப்புரவு செய்து ஒழுகாது, உம்பர்க்
கிடந்து உண்ணப் பண்ணப்படும்.

அருஞ்சொற்பொருள்:

ஆயுங்கால்: எண்ணிப் பார்க்கும் பொழுது
எத்துணையும்: எவ்வளவும்
தொக்க உடம்பிற்கே : கருவிகள் கொண்ட உடம்பிற்கே
ஒப்புரவு: உதவி
உம்பர்க் கிடந்து : மேலுலகத்தில் 

2 கருத்துகள்:

  1. வணக்கம்.
    தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
    இணைப்பு http://blogintamil.blogspot.in/2015/03/blog-post_7.html

    பதிலளிநீக்கு
  2. அன்பின் தேன் மதுரத் தமிழ் கிரேஸ், அறிமுகத்திற்கும் ஊக்கம் அளிக்கும் கனிவான் வார்த்தைகளுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு