சனி, 28 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 54

துறவி என்பவர் யார்? பற்றுகளைத் துறந்தவர், ஆசைகளை விரும்பாமல் விட்டவர், துறவி. எத்தகையவர் துறவு மேற்கொள்வர்? செல்வம் சேர்க்க முடியாதவர் துறவு மேற்கொள்வாரா? தனிமை விரும்புகிறவர் துறவு மேற்கொள்வாரா? துறவு மேற்கொள்பவரின் பண்பு எது? எதற்காக அவர்கள் துறவு மேற்கொள்கின்றனர்? இவ்வினாக்களுக்கு விடைகள் அளிக்கும் விதமாக அமைகின்றது இந்த நாலடியார்ப் பாடல்.



பல நாட்கள் துன்பத்தில் உழன்று இடையிடயே ஓரிரு நாட்கள் மட்டுமே இன்பம் அடையலாம் என்று தெரிந்தும் இன்பத்தை விரும்பிகிறவர்கள் அறிவற்றவர்கள். இன்பம் இடையிடேயே வரும் என்றும் அவ்வாறான இன்பத்தினை அடைய நாம் செய்யும் செயல்களினால் வரும் துன்பங்களையும் அறிந்து, பல நூல்களைக் கற்ற பெரியோர் இல்வாழ்க்கையின் வழி செல்லாமல் அவர்கள் பற்றுகளை விட்டு துறவினை மேற்கொள்வர்.

இப்பாடலில் ஏழையர் என்ற சொல்லின் பயன்பாட்டின் வழி, ஏழையர் என்ற சொல் செல்வம் அற்றவரை மட்டும் குறிப்பிடாது அறிவில் குறைந்தவரையும் ஏழையர் என்று அழைத்தர் என்பது தெரிய வருகிறது.

பாடல்:
துன்பம் பலநாள் உழந்தும் ஒருநாளை
இன்பமே காமுறுவர் ஏழையார் - இன்பம்
இடைதெரிந் தின்னாமை நோக்கி மனையா
றடைவொழிந்தார் ஆன்றமைந் தார்.


பதம் பிரித்த பாடல்:
துன்பம் பல நாள் உழந்தும், ஒரு நாளை
இன்பமே காமுறுவர், ஏழையார்; இன்பம்
இடை தெரிந்து, இன்னாமை நோக்கி, மனை ஆறு
அடைவு ஒழிந்தார், ஆன்று அமைந்தார்.

அருஞ்சொற்பொருள்:

உழந்து - அனுபவித்து
காமுறுவர் - விரும்புவர்
ஏழையார் - அறிவற்றவர்கள்
அடைவு - புகலிடம்
ஆன்று - நிறைந்து - இங்கு “அறிவில் நிறைந்து” என்ற பொருள் கொண்டது

4 கருத்துகள்:

  1. எளிய விளக்கத்துடன்
    பதிவு மிக மிக அருமை
    தொடர்வதில் பெருமை கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய திரு ரமணி, உங்களின் கனிவான வார்த்தைகளுக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. அய்யா வணக்கம்.
    இந்தத் துறவு என்று சொல்லப்படும் போது வேண்டப்பெறுவது பற்றற்ற தன்மை.
    அதாவது எதனோடு ஒட்டாமல் இருந்தல்.
    எதனோடு எதனோடு ஒட்டாமல் நீங்கி இருக்கிறானோ அதனால் அதனால் அவனுக்குத் துன்பம் இல்லை என்கிறது திருக்குறள்.
    “யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன் “

    இக்குறளை நாம் சொல்லும் போது நம் உதடுகள் கூட ஒட்டுவதில்லை:))
    இலக்கணம் இவ்வகைப் பாடல்களை நிரொட்டகம் என்னும்.
    ஏழையர் என்ற சொல்லுக்குச் சொல்லப்பட்ட விளக்கம் சிறப்பு
    இதையே நாலடி,

    “நுண்ணுணர் வின்மை வறுமை யஃதுடைமை
    பண்ணப் பணைத்த பெருஞ்செல்வ மெண்ணுங்காற்
    பெண்ணவா யாணிழந்த பேடி யணியாளோ
    கண்ணவாத் தக்க கலம் “ ( நாலடி 251 )

    எனப் பிறிதோரிடத்துக் காட்டுகிறது.
    வள்ளுவரும், “அறிவிலார் என்னுடைய ரேனு மிலர் “ என்பார்.

    பாடலுக்குத் தக்கவாறு கேள்விகளைத் தொடுத்துப் பாடல்களை அறிமுகப் படுத்தியவிதம் சிறப்பு.

    தொடருங்கள் அய்யா!

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "இக்குறளை நாம் சொல்லும் போது நம் உதடுகள் கூட ஒட்டுவதில்லை:))" - அருமை! தொடர்ந்து ஊக்கமளிக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு