பல்லாண்டுகளுக்கு முன்பு நடந்தது இந்த நிகழ்வு. அந்தப் புலவர் வெகுதூரம் நடந்து சென்றார். ஊருக்கு புறம் வந்தபிறகு சுடு காடு தென்பட்டது. சரி இன்னும் கொஞ்சம் நடக்கலாம் என்று எண்ணி நடந்தார். சுடு காட்டில் பல பொருட்கள் கிடந்தன. அன்று அவர் கண்ணில் பட்டது பல் எலும்புகள். அந்த எலும்புகள் அனைவரும் பார்க்கும் வண்ணம் சுடுகாட்டில் சிதறிக் கிடந்தன. அந்த எலும்புகளைப் பார்த்தால் அழகிழந்து திகழ்ந்தன. இந்தப் பல் எலும்புகள் உடம்பில் இருக்கும் பொழுது, கல்வி அறிவு அற்றவர்கள் எவ்வாறு விவரித்திருப்பார்கள்? புலவர் அல்லவா.. கற்பனை மிகுந்தது...
ஒருவரின் பற்களைப் பார்த்து, "அட இது முல்லை அரும்புகள் போல் இருக்கின்றனவே! இல்லை இல்லை முத்துக்கள் போல் அழகு பொழிகின்றன" என்று புனைவுகளைப் பேசுவார்கள் அறிவற்ற மாந்தர்கள். உலகின் உண்மை நமக்கு முன்னே சிதறிக் கிடக்கும் பொழுது, அவர்கள் பேச்சினைக் கேட்டு, புற அழகில் மயங்கி, ஆசை வயப்பட்டு, அதனால் கவலைக்கு உள்ளாக மாட்டேன் என்று உறுதி பூண்டார். தான் எடுத்துக் கொண்ட உறுதியை பாடலாக எழுதினர்...
உட்கருத்து : புற அழகில் மயங்காமல், அக அழகைக் கூட்டும் நற்செயல்கள் செய்வோமாக.
பாடல்
முல்லை முகைமுறுவல் முத்தென் றிவைபிதற்றும்
கல்லாப்புன் மாக்கள் கவற்ற விடுவெனோ
எல்லாரும் காணப் புறங்காட் டுதிர்ந்துக்க
பல்லென்பு கண்டொழுகு வேன்.
பதம் பிரித்த பாடல்
'முல்லை முகை, முறுவல், முத்து' என்று இவை பிதற்றும்
கல்லாப் புன்மாக்கள் கவற்ற விடுவெனோ-
எல்லாரும் காண, புறங்காட்டு உதிர்ந்து உக்க
பல்-என்பு கண்டு ஒழுகுவேன்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக