புதன், 18 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 46

பூங்காவில் அமர்ந்து மாலைப் பொழுதின் இனிமையை ரசித்துக் கொண்டிருந்தான் அவன். அப்பொழுது அங்கு ஒரு பெண் அவ்வழியே நடந்து சென்றாள். பார்ப்பதற்கு அழகு மிகுந்து திகழ்ந்தாள் அந்தப் பெண். அவளைப் பார்த்து ஒரு நிமிடம் அவன் தன்னிலை மறந்தான். தன்னை மறந்த நிலையில் இருந்து வெளியே வந்த அவன், சிந்தனையில் மூழ்கினான். "அட என்ன இப்படிச் செய்து விட்டோமே? நாம் கல்வி அறிவு இல்லாத மாந்தர் போல் புற அழகில் மயங்கிவிட்டோமே! இந்த புற அழகென்பது உடம்பின் பால் வந்தது. அவ்வுடம்பு எதனால் ஆனது? எத்தன்மையது?"


சிந்திக்க சிந்திக்க, சிறிது தெளிவு வந்தது. அந்த உடம்பு, குடலும், கொழுப்பும், குருதியும், எலும்பும், உடல் முழுதும் தொடராக இருக்கும் நரம்பும், இவையனைத்துக்கும்    இடையிடையே தசையும், கொழுப்போடு திகழும் வழுவழுப்பு கொண்ட நிணமும், தோலும் கொண்டது. சரி, அப்படியென்றால், இதில் எந்தப் பகுதி இனிமையான, அழகான பெண்?" விடை பகர முடியாத வினா இது. அழகென்பது அகம் சார்ந்தது என்று உணர்த்திய நாலடியார்ப் பாடல் நினைவுக்கு வர, பூங்காவில் இருந்து அவன் புறப்பட்டான். 

பாடலின் உட்கருத்து: உண்மையறிவை உணர்ந்தவர்கள் பெண்ணின் புற அழகைப் பார்க்காமல் அக அழகினைப் போற்றுவர். 

பாடல்:

குடருங் கொழுவுங் குருதியும் என்பும்
தொடரும் நரம்பொடு தோலும் - இடையிடையே
வைத்த தடியும் வழும்புமாம் மற்றிவற்றுள்
எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள்.

பதம் பிரித்த பாடல் :

குடரும், கொழுவும், குருதியும், என்பும்,
தொடரும் நரம்பொடு தோலும், இடையிடையே
வைத்த தடியும், வழும்பும், ஆம் மற்று இவற்றுள்
எத் திறத்தாள், ஈர்ங் கோதையாள்?

அருஞ்சொற்பொருள்: 

குடரும் - குடலும் 
கொழுவும் - கொழுப்பும் 
என்பும் - எலும்பும் 
தடியும் - தசையும் 
வழும்பு - நிணம் - வழு வழு தன்மை கொண்டு கொழுப்போடு இருக்கும் பொருள் 
எத் திறத்தாள் - எந்தப் பகுதியைச் சார்ந்தவள் 
ஈர் - இனிமை 

2 கருத்துகள்:

  1. பாடலின் உட்கருத்து: உண்மையறிவை உணர்ந்தவர்கள் பெண்ணின் புற அழகைப் பார்க்காமல் அக அழகினைப் போற்றுவர். ..... Thanks for your good work

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய திரு செந்தில் குமார், உங்கள் கனிவான வார்த்தைகளுக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு