வெள்ளி, 13 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 41

துறவு மேற்கொள்பவரின் மன நிலை எவ்வாறு இருக்க வேண்டும்? மனது தூய்மையோடு இருக்க வேண்டும் அல்லவா? தூய்மை ஒன்றையே நினைத்து அதன் ஒருமையுடன் இருக்கவேண்டும். அவ்வாறு துறவு மேற்கொண்ட ஒருவர் தவறி நடந்தால் என்னவாகும்? அவர் மனம் தடுமாறினால் அவரைப் பற்றி இவ்வுலகம் என்ன நினைக்கும்?  இன்று நாம் படிக்கவிருக்கும் நாலடியார்ப் பாடல் இதனை விளக்குகிறது.



மிகவும் அழகான நபர். அவரைக் கண்டவரை மயக்கும் வண்ணம் அவர் நிறமும் அமைப்பும் இருந்தது. அத்தகைய அழகான ஒருவருக்கு ஈயின் சிறகு அளவுக்கு ஒரு புண் ஏற்பட்டது. புண் மிகச் சிறிதாக இருந்தாலும், அவர் அழகாக இருந்தாலும், அந்தப் புண்ணைக் கொத்த காக்கை வரும். அதனை விரட்ட ஒரு பெரிய கோல் வேண்டும். ஒருவரின் அழகோ நிறமோ ஒருவரின் உடம்பை காக்கை கொத்தாமல் செய்வதில்லை. அவ்வாறான இழிநிலை கொண்ட உடம்பினைப் பார்த்து, பெரியவர்கள், "மாந்தளிரின் நிறம் போன்ற நிறமும் இளமையும் பொருந்திய பெண்ணே"  என்று துதித்துக் கத்துகிற பெரியவர்கள், மிகவும் அற்பமாக, உடம்பைப் பார்ப்பதை இழிவான செயல் என்று நினைக்கமாட்டர்களா? 

உட்கருத்து: துறவு பூண்ட ஒருவர் இழிவான உடம்பை மேன்மையாக நினைத்தல் அசுத்தமேயல்லாது சுத்தமன்று.

பெரியவர் என்று பயன்படுத்தியது வஞ்சப்புகழ்ச்சியணி. 

பாடல்: 

மாக்கேழ் மடநல்லாய் என்றரற்று சான்றவர்
நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை - யாக்கைக்கோர்
ஈச்சிற கன்னதோர் தோல் அறினும் வேண்டுமே
காக்கை கடிவதோர் கோல்.

பதம் பிரித்த பாடல்: 

'மாக் கேழ் மட நல்லாய்!' என்று அரற்றும் சான்றவர்
நோக்கார்கொல், நொய்யது ஓர் புக்கிலை? யாக்கைக்கு ஓர்
ஈச் சிறகு அன்னது ஓர் தோல் அறினும், வேண்டுமே,
காக்கை கடிவது ஓர் கோல்!

அருஞ்சொற்பொருள்: 

கேழ் - நிறங்கொண்ட 
அரற்றும் - கத்தும் - இங்கு துதித்திக் கொண்டாடும் என்ற வகையில் கையாளப்பட்டுள்ளது. 
நொய்யது - இழிவானது 

1 கருத்து:

  1. அய்யா வணக்கம்.

    மாகேழ்மடநல்லாய்....
    மா - அழகு
    கேழ் -ஒளி
    மடம் - இளமை
    நல் - நற்குணம்
    ஆய் - பெண்.
    அழகொளிர்நல்லிளம்பெண் என்ன ஒரு சொல்லாட்சி....!!!!!
    முதல் சொல்லையே கடந்து உட்போக முடியாதபடி இருக்கிறதே!!!!!

    பெண் பித்தரைச் சான்றவர் என்றது

    தேவரனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுகலான். என்று வள்ளுவன் கயவரை தேவரைப் போன்றவர்கள் என்று ஒப்பிட்டது போல எனத் தோன்றுகிறது.

    பகிர்விற்கு நன்றி!

    பதிலளிநீக்கு