திங்கள், 9 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் - 38

அன்று வெப்பம் அதிகமாக இருந்தது. பேருந்துக்கு செல்வதற்கு சிறிது தூரம் தானே என்று அவன் நடந்து கொண்டிருந்தபொழுது சற்று அயர்ந்து அந்த ஆல மரத்தின் நிழலில் அமர்ந்தான். சுகமாக இருந்தது. வெயிலின் நடுவில் நிழலின் அருமை நன்றாக இருந்தது. அதன் அருமையில் அயர்ச்சி நீங்க, அந்த ஆலமரத்தை நோக்கும் பொழுது, அவன் மனதுள் நன்றியெண்ணம் எழுந்தது. அம்மரத்திற்கும், அம்மரத்தினை வளர்ந்தததில் பங்கு வகித்த இயற்கைக்கும், அந்த ஆல மரத்தின் விதையினை நட்ட மாந்தருக்கும் நன்றிகள் தன மனதின் வழி, எண்ணங்களின் வழி வழங்கினான். நட்ட நபர் இன்று இல்லை. ஆனால், அவர் நட்ட ஒரு சிறு விதை இவ்வளவு பெரிய மரமாக வளர்ந்து பல தலைமுறையினருக்கு பயன் அளித்து வருகின்றதே என்ற இன்ப வியப்புடன் அவன் அங்கிருந்து புறப்பட்டான்.

ஒரு ஆல விதை சிறிது தான். ஆனால் அந்த விதை நல்லவர் ஒருவரின் கையில் கிடைத்தால், அது செடியாக தழைத்து மரமாக வளர்ந்து அனைவருக்கும் பலகாலம் நிழல் கொடுப்பது போல், அறச் செயல்கள் சிறிய செயல்கள் ஆனாலும், தகுந்த நல்லவர்க்கு சென்று சேரும் பொழுது, அதனால் அடையும் பயன்களின் அளவு, இவ்வுலகின் வானத்தை சிறியதாக்கி விடும்.

பாடல்:   

உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி
இறப்ப நிழற்பயந் தாஅங் - கறப்பயனும்
தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்.

பதம் பிரித்த பாடல்:

உறக்கும் துணையது ஓர் ஆலம் வித்து ஈண்டி,
இறப்ப நிழல் பயந்தாஅங்கு, அறப்பயனும்,
தான் சிறிதுஆயினும், தக்கார் கைப் பட்டக்கால்,
வான் சிறிதாப் போர்த்துவிடும்.

அருஞ்சொற்பொருள்:

உறக்குதல் - சுருங்குதல் ; சிறிதாதல் .
துணையது-அளவினது
ஈண்டி - அடர்ந்து ; இங்குத் தழைத்து என்னும் பொருளில் பயன்படுத்தப் பட்டது.
இறப்ப - மிகவும்
பயந்தாங்கு - கொடுத்தாற்போல
தக்கார்  - தகுதியுடைய பெரியோர்
போர்த்து விடும் - சூழ வைத்துவிடும் 

4 கருத்துகள்:

  1. உறக்கும்துணை என்பது ஒரு சிட்டிகை அளவு.
    பெருவிரலும் ஆட்காட்டிவிரலும் தம்முற் பொருந்த இடைப்படும் அளவு.
    “வகிர்ப்படுத் துரக்கும் பற்றி
    வாய்களைப் பிளக்கும் வன்தோல்
    துகிற்படுத் துரிக்கும் செந்தீக்
    கண்களைச் சூலும் சுற்றிப்
    பகிர்ப்படக் குடரைக் கொய்யும்
    பகைஅறப் பிசையும் பல்கால்
    உகிர்ப்புரைப் புக்கோர் தம்மை
    உகிர்களால் உறக்கும் ஊன்றி “

    என்னும் கம்பராமாயணத்தில் இந்த உறக்குதல் வந்திருக்கிறது.

    வெர்னியர் போல ஆலவிதையை அளப்பதற்கு அந்தக்காலத்திலேயே வழிமுறை காட்டியவனை வியக்கத்தான் வேண்டி இருக்கிறது.

    பகிர்விற்கு நன்றி அய்யா!

    தங்களின் உரை அருமை!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கினிய ஊமைக்கனவுகள், உங்கள் கருத்துப் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி. மிகவும் அருமையான கருத்துகள், மேற்கோள்கள். மிக்க நன்றி.

      நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு