வெள்ளி, 13 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 42

அயர்ச்சி நீங்க, துயில் முடித்து எழுந்தான் அவன். பொங்கல் விழா நெருங்கிக் கொண்டிருந்தது. வீடெல்லாம் சுத்தம் செய்து முடிக்கவேண்டுமே என்று நினைத்து அந்த வார இறுதியில் வீட்டின் ஒரு பகுதியை சுத்தம் செய்து முடிக்க முடிவு செய்தான். வேலை விறுவிறுவென்று நடந்தது. அப்பொழுது அழகான ஒரு பை அவன் கண்ணில் பட்டது. அழகைப் பார்த்து அதனால் கவரப்பட்டு அருகே சென்று அப்பையை எடுத்தான். எடுத்து உள்ளே என்ன இருக்கிறது என்று பையை திருப்பிப்  பார்க்கும் பொழுதான் தெரிந்தது அதனுள் இருந்த தூசியும் துர்நாற்றமும். வெகு நாட்களாக சரியாக பராமரிக்காமல், வெளியே பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் உள்ளே அசுத்தங்களுடன் இருந்தன. அட.. இதைத்தானே ஒரு நாலடியார்ப் புலவர் பாடியிருக்கிறார் என்று உணர்ந்த அவனுக்கு, அந்தப் பாடல் நினைவுக்கு வந்தது.

தோலால் உண்டான போர்வை.. இந்தப் போர்வையில் துளைகள் பல உள்ளன. துளைகள் உள்ள இந்தப் போர்வை பல மாசுக்களை போர்த்தி இருக்கின்றது. மாசுக்கள் மறைக்கப் பட்டிருப்பதினால்தான் இவ்வுடம்பு மாட்சிமை பொருந்தித் திகழ்கின்றது. பொய்களை, மாசுகளை மறைக்கும் போர்வையினால் உண்டான அழகில் மயங்காமல், பையை திருப்பிப் பார்த்தால், எவ்வாறு உண்மை தெரியுமோ, அது போல் உடம்பின் உண்மை நிலை உணர்ந்து செயல்படுவமாக. 

பாடல் : 

தோல்போர்வை மேலும் தொளைபலவாய்ப் பொய்ம்மறைக்கும்
மீப்போர்வை மாட்சித் துடம்பானால் - மீப்போர்வை
பொய்ம்மறையாக் காமம் புகலாது மற்றதனைப்
பைம்மறியாப் பார்க்கப் படும்.

பதம் பிரித்த பாடல்: 

தோல் போர்வைமேலும் துளை பலவாய், பொய்ம் மறைக்கும்
மீப் போர்வை மாட்சித்து, உடம்பு; ஆனால், மீப் போர்வை
பொய்ம் மறையா, காமம் புகலாது, மற்று அதனைப்
பைம் மறியாப் பார்க்கப்படும்.

அருஞ்சொற்பொருள்:
பொய் - மாசு 
மீ - மேல் 
பை மறியா - பையின் திருப்பமாக 

1 கருத்து:

  1. நம் உடம்பைத் திருப்பிப்போட்டுப் பார்த்தால் என்ன இருக்கும்.

    “ஊற்றைச்சரீரத்தை ஆபாசக் கொட்டிலை ஊன்பொதிந்த
    பீற்றற் றுத்தியைச் சோறிடுந்தோற்பையைப் பேசரிய
    காற்றிற் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல்செய்தே
    ஏற்றுத் திரிந்து விட்டேன் இறைவாகச்சி ஏகம்பனே.“

    எனறு இதைத்தானோ சொல்லிப் போனான் பட்டினத்தான்..?

    தங்கள் விளக்கம் அருமை!

    பதிலளிநீக்கு