திங்கள், 16 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 43

இவ்வுலகில் பிறந்து வாழும் நாம் இயங்குவதற்கு உடலும் உயிரும் இணைந்திருப்பது இன்றியமையாதது. உடல் இயங்க உயிரும் உயிருக்கு உறுதுணையாக உடலும் இருக்கின்றது. இவ்வாறு உடலும் உயிரும் சேர்ந்திருக்க, அதற்குத் தேவையான சக்தி வழங்க உணவு உண்ணுதல் வேண்டும். அவ்வாறு உண்ணும் உணவை சக்தியாக மாற்ற நம் உடம்பு உணவைச் சீரணிக்கும் பொழுது தேவயற்ற பொருட்கள், வாயுக்கள் வருவது இயற்கை.



துர்நாற்றம் வருகிறதென்று வாசனையுள்ள பொருட்களைச் சாப்பிட்டாலோ அல்லது வாசனை மிகுந்த மலர்களைச் சூடினாலோ துர்நாற்றமோ அல்லது தேவையற்ற பொருளோ வராமல் இருப்பது இல்லை. அதனால் அவ்வாறு உண்டு அல்லது உடுத்தி வாசனை சேர்க்கத் தேவையல்ல என்பதை உணர்ந்தவர்கள் பெரியோர். அவர்கள் இவ்வாறு செய்வதை கைவிட்டவர்கள்.

உட்கருத்து: உடம்பை சுத்தப் படுத்தி வாசனை சேர்க்கும் செய்கைகளில் நேரத்தை செலவழிக்காமல் நம் உள்ளமும் உயிரும் விரும்பும் வண்ணம் நற்செயல்கள் செய்வோமாக.

பாடல்: 

தக்கோலம் தின்று தலைநிறையப் பூச்சூடி
பொய்க்கோலம் செய்ய ஒழியுமே - எக்காலும்
உண்டு வினையுள் உறைக்கும் எனப்பெரியோர்
கண்டுகை விட்ட மயல்.

பதம் பிரித்த பாடல்:

தக்கோலம் தின்று, தலை நிறையப் பூச் சூடி,
பொய்க் கோலம் செய்ய, ஒழியுமே-'எக்காலும்
உண்டி வினையுள் உறைக்கும்' எனப் பெரியோர்
கண்டு, கைவிட்ட மயல்?

அருஞ்சொற்பொருள்:

தக்கோலம் - ஒருவித மணப் பொருள்
உறைக்கும் - துர்நாற்றம் ஏற்படும்

1 கருத்து:

  1. அருமை அய்யா!

    தக்கோலம் என்பதற்கு வால்மிளகு என்பது நேர்ப்பொருள்.

    "தக்கோலந் தீம்பூந் தகைசால் இலவங்கங்
    கப்பூரஞ் சாதியோ டைந்து" என்னும் சிலப்பதிகார உரை.

    பொதுவாக இவ்வைந்தையும் தக்கோலம் என்ற பெயரில் அழைத்தல் பண்டைய மரபு.

    “மெய்ப்படு சாந்தும் பூவு மிகநனி கமழு மேனுங்
    கைப்படு சாந்தும் பூவுங் கொண்டலாற் கலக்க லாகா
    வைப்படு பித்து நெய்த்தோ ரசும்புசோ ரழுகற் புன்றோற்
    பொய்ப்பட வுரைத்த துண்டோ பொன்னனீர் நம்மு ணாமால்.“
    என்னும் சிந்தாமணிப் பாடல் இப்பாலோடு ஒருங்கு வைத்தெண்ணற்குரியது.

    தங்களின் விளக்கம் அருமை!

    பதிலளிநீக்கு