திங்கள், 16 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 44

இனிய மாலைப் பொழுது அது. மிதிவண்டியில் சுற்றுகள் வரலாம் என்று அவன் அவ்வூரில் இருந்த குளக்கரைக்கு வந்தான். அதிக வெப்பமும் இல்லாமல், குளிரும் இல்லாமல், அந்தப் பொழுது இதமாக இருந்தது. இரு சுற்றுகள் மிதிவண்டியில் வந்த பிறகு அவன் கண்ணில் பட்டது அந்த குவளை மலர். வெண்மை நிறத்தின் நடுவில் கருவிழி போல் வெண்மை நிறம் கொண்டு திகழ்ந்ததால் தானோ குவளை மலரினை குமரியின் கண்களுக்கு ஒப்பிட்டனர்? அட அது மட்டுமா.. கண்ணைக் கவரும் அந்தக் கண்களின் வடிவம் மீன் போன்றதனால் கயல் விழியாள் என்றுமல்லவா வர்ணித்தனர்! அக் கண்களின் கூர்மையால் வேல் விழியாள் என்றும் விவரித்தனரே! அவனின் சிந்தனைகள் குமரியின் கண்களுக்கான உவமைகளை சிந்திக்க, இந்த இவமைகளை மேற்கோளிட்டிருக்கும் நாலடியார்ப் பாடலை நினைவு கூர்ந்தான்.



உடம்பின் உண்மைத் தன்மையை அறிந்த பெரியோர், மெய் அறிவற்ற மாந்தர்கள், அறியாமையின் காரணமாக, உடம்பின் அழகை மட்டும் பார்த்து மயங்குவது போல் மயங்கி, கவலைக்கு ஆளாகமாட்டர்கள். ஏன் என்றால், குவளை மலர் என்றும், கயல் என்றும், வேல் என்றும் விவரிக்கப் பட்டாலும், ஒருவரின் கண்களில் இருக்கின்ற உள் நீர் வற்றிவிட்டால், அவரின் முகம் தோண்டி எடுக்கப்பட்ட நுங்குபோல் காட்சியளிக்கும் என்பதனை, அவர்கள் முற்றும் உணர்ந்தவர்கள்.

பாடலின் உட்கருத்து: புற அழகினைப் பார்த்து மயங்காமல் அக அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

பாடல்: 

தெண்ணீர்க் குவளை பொருகயல் வேலென்று
கண்ணில்புன் மாக்கள் கவற்ற விடுவெனோ
உண்ணீர் களைந்தக்கால் நுங்குசூன் றிட்டன்ன
கண்ணீர்மை கண்டொழுகு வேன்.


பதம் பிரித்த பாடல்:

'தெள் நீர்க் குவளை, பொரு கயல், வேல்' என்று,
கண் இல் புன்மாக்கள் கவற்ற, விடுவெனோ-
உள் நீர் களைந்தக்கால் நுங்கு சூன்றிட்டன்ன
கண் நீர்மை கண்டு ஒழுகுவேன்?

அருஞ்சொற்பொருள்: 

கண் இல் - மெய் அறிவில்லாத
கவற்ற - என்னைக் கவலையுற
சூன்றிட்டு அன்ன - தோண்டி விட்டாற்போன்ற
நீர்மை - இயல்பை

1 கருத்து:

  1. அய்யா வணக்கம்.

    பெண்ணின் கண்களுக்கு இந்தக் குவளை, கயல், வேல் என்று எத்தனை எத்தனை உவமைகள்..!!!!
    நிறத்தாலும், மென்மையாலும், அழகினாலும் குவளை கண்ணொத்தது என்றால்,
    வடிவத்தாலும், துள்ளுதலாலும் மீனொத்தது.
    கூர்மையாலும் ஆடவர் விரும்பி ஏற்குமாறு நெஞ்சில் பாய்தலாலும் வேலொத்தது.

    பறித்த குவளையல்ல. அது நீரில் இருப்பதால் வாடாமல் இருக்கின்ற குவளை என்பதற்குத் தெண்ணீர்க்குவளை என்கிறான்.

    அறநூல் என்றாலும் எத்தனை சிறப்பு...!

    தங்களின் பணி போற்றுதற்குரியது.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு