புதன், 11 மார்ச், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 40

நம் உடம்புக்கும் உயிருக்குமான தொடர்பு வியக்கத் தக்க உறவாகும். உடம்பின் இயக்கத்திற்கு உயிர் வேண்டும். உயிரின் இயக்கத்திற்கு உடம்பு வேண்டும். இது ஒன்றுக்குள் ஒன்று பின்னிப் பிணைந்திருப்பது. இதில் எது நிலைத்திருப்பது? எதனைப் பின் பற்றினால் உடம்பு நிலையாக இருக்கும்? எதனைப் பின் பற்றினால் உயிர் நிலையாக இருக்கும்? நிலையாய் நீடித்திருப்பதற்கு வழி உண்டா?

பல வினாக்கள். பலர் பல காலம் விடை தேடும் வினாக்கள். ஓரளவு விடையளிக்கும் விதமாக ஒரு நாலடியார்ப் பாடல்.



எவ்வகை செயல் செய்து (நல்ல செயல் மட்டுமல்ல, இழிவான செயல் செய்து) உணவு ஈட்டி, அதனால் உடம்பு உறுதி பெற்று, அவ்வுறுதியினால் உடம்பு நீடித்து நிலையாக இருக்கும் என்றால், இந்த நாலடியார்ப் புலவர் யாரும் செய்யத் தயங்கும் செயலையும் செய்வேன் என்கிறார். அது என்ன செயல்? ஒருவருக்கு அணிகலனாக அமைவது ஒருவரின் மானம் ஆகும். மானம் இழந்தால் உயிர் விடும் மாந்தர் பிறந்த இம்மண்ணில், அந்த அணிகலனையே துறந்து, மானமிழந்து, பிச்சையெடுத்து வாழ்வேன் என்கின்றார்.

உட்கருத்து: எவ்வகை உணவு எவ்வழி ஈட்டினும் உடம்பு நிலைத்திருப்பதில்லை. உயிரும் நிலைத்திருப்பதில்லை. அதனால் நிலையாய் இருக்கும் அறச் செயல்களை செய்வோமாக.

பாடல்: 

மான அருங்கலம் நீக்கி இரவென்னும்
ஈன இளிவினால் வாழ்வேன்மன் - ஈனத்தால்
ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந் திவ்வுடம்பு
நீட்டித்து நிற்கும் எனின்.

பதம் பிரித்த பாடல்:

மான அருங் கலம் நீக்கி, இரவு என்னும்
ஈன இளிவினால் வாழ்வேன்மன்-ஈனத்தால்
ஊட்டியக் கண்ணும் உறுதி சேர்ந்து, இவ் உடம்பு
நீட்டித்து நிற்கும் எனின்!

அருஞ்சொற்பொருள்:

அருங்கலம் - அணிகலன்
இரவு - இரத்தல் - பிச்சை எடுத்தல்
ஈன - ஏளனமான
இளிவினால் - இழி தொழிலினால்
ஊட்டியக் கண்ணும் - உண்பித்த இடத்திலும்

2 கருத்துகள்:

  1. மானம் இழந்தால் உயிர் விடும் மாந்தர் பிறந்த இம்மண்ணில், அந்த அணிகலனையே துறந்து, மானமிழந்து, பிச்சையெடுத்து வாழ்வேன் என்கின்றார்.

    நிதர்சனம்

    பதிலளிநீக்கு
  2. அய்யா,
    மான அருங்கலம் எத்துணை சிறப்பான சொல்லாடல்?
    அணிகலன்கள் அழிந்து போகும் உடலுக்குச் சிறப்புச் செய்து நிற்பன...!

    ஒருவனது உயிருக்குச் சிறப்புச் செய்து நிற்பது, வாழும் வரை அவன் காத்துப் போற்றுகின்ற மானம் மட்டுமே..!

    அதனை அணிகலன் என்று சொல்லாமல் அருங்கலம் என்று சொன்னவனின் வாயில் சர்க்கரையைத்தான் போட வேண்டும்.

    தொடருங்கள் அய்யா!

    பதிலளிநீக்கு