சனி, 28 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு நாலடியார்: பாடல் 31

மிகவும் உயரமாக பார்ப்பதற்கு கண்ணைக் கவரும் வண்ணம் அமைந்திருந்தது அந்த மாளிகை. அந்த மாளிகையின் உள்ளே இருந்த மாந்தர்கள் நல்ல வசதிகள் கொண்டு வாழ்வினை மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். அந்த மாளிகையில் நாம் செல்ல முடியுமா? அப்படிச் செல்வதற்கு என்ன தகுதி வேண்டும்? ஏன் நாம் மட்டும் அதனுள் செல்ல முடியவில்லை? இவ்வாறான வினாக்களுடன் ஒருவர் அந்த மாளிகையினை வெளியில் நின்று அண்ணாந்து பார்த்தக் கொண்டிருந்தார்.

இவ்வுலகில் நடக்கும் எந்த ஒரு காரியத்திற்கும் காரணம் இருக்கும். பகலவன் உதித்த காரணத்தால் ஒளியும் வெப்பமும் பூமியை அடைந்தது. காற்று வீசியதால் மரம் அசைந்தது. இவ்வாறு ஒவ்வொரு இயற்கை நிகழ்வுக்கும் காரணம் இருப்பது போல் மேற்கண்ட மாந்தர் வெளியில் இருந்து மாளிகையினை நோக்கி பார்த்து உள்ளே செல்ல முடியாமல் இருப்பதைக் கண்ட நாலடியார்ப் புலவர், இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று சிந்திக்கத் துவங்கினார். முற்பிறவியில் மற்றும் இந்தப் பிறவியிலும் அறம் செய்யாமல் இருப்பதனால் தான் அவர் இவ்வாறு வெளியில் இருந்து பார்க்கவேண்டிய நிலை வந்தது என்று முடிவுக்கு வந்து, காட்சியையும் அதற்கான காரணத்தையும் பாடலாக வடித்தார்.  

முற்பிறப்பினை மேலை என்று குறிப்பிட்ட புலவர் இப்பிறப்பிலும் அறம் செய்வதைக் குறிக்க, "தவம் செய்யாதார்" என்று குறிப்பிட்டார். 

பாடல்: 

அகத்தாரே வாழ்வார்என் றண்ணாந்து நோக்கிப்
புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றி
மிகத்தாம் வருந்தி இருப்பாரே மேலைத்
தவத்தால் தவஞ்செய்யா தார்.

பொருளறிந்து படிக்க பதம் பிரித்த பாடல்: 

'அகத்து ஆரே வாழ்வார்?' என்று அண்ணாந்து நோக்கி,
புகத் தாம் பெறாஅர், புறங்கடை பற்றி,
மிகத் தாம் வருந்தியிருப்பரே-மேலைத்
தவத்தால் தவம் செய்யாதார்.

அருஞ்சொற்பொருள்:

புகத் தாம் - தாம் நுழைய 
புறங்கடை - வெளியில் 
தவம் - இங்கு அறம் செய்தலைக் குறிக்கிறது. 

வியாழன், 26 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு நாலடியார்: பாடல் 30

கார் காலம் முடிந்து வசந்த காலம் துவங்கியது. சில மரங்கள் பசுந்தளிருடன் காட்சியளித்தன. சில மரங்கள் பசுந்தளிர்கள் மட்டுமல்லாது மலர்களையும் தாங்கி மனதுக்கு இதமளித்தன. பசுந்தளிர்களுடனும் மலர்களுடனும் இணைந்தன பல பறவையினங்கள். அவ்வப்போது சில பறவைகள் வந்தன, சில பறவைகள் தாங்கள் தங்கியிருந்த கூடுகளை விட்டு விலகிச் சென்றன. அவை வந்து தங்கிய காரணம் தங்களது குஞ்சுகளை பொரித்து, வளர்க்க. அந்த காரியம் முடிந்தவுடன் அவை விலகிச் சென்றன.


கேளாமல் வந்து விட்டு சும்மா கூடுகளை விட்டுச் செல்லும் பறவைகள் போல், கேளாமல் வந்து சுற்றத்தாருக்கு சுற்றமாய் இல்லத்தில் வந்து தோன்றி, தங்களது சுற்றத்தார் வருத்தப்பட தங்களது உடம்பை பிறந்த இல்லத்தில் விட்டுவிட்டு, இவ்வுலகில் இருந்து பிரிவர் மனிதர். இப்பாடலில் உள்ளுரை உவமும் எடுத்தாளப்பட்டுள்ளது. எவ்வாறு பறவைகள் தாங்கள் மரத்தின் கூட்டில் தங்கள் குஞ்சுகள் பிறக்கத் தங்குகின்றனவோ, அது போல் நாம் இவ்வுகத்தில் உயிருடன் இருக்கும் பொழுது மற்றவருக்கு உதவி செய்ய வேண்டும். 

பாடல்:

கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி
வாளாதே போவரால் மாந்தர்கள் - வாளாதே
சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல
யாக்கை தமர்க்கொழிய நீத்து.

பொருளறிந்து படிக்க சொல் பிரித்த பாடல்:

கேளாதே வந்து, கிளைகளாய் இல் தோன்றி,
வாளாதே போவரால், மாந்தர்கள்-வாளாதே.
சேக்கை மரன் ஒழியச் சேண் நீங்கு புள் போல,
யாக்கை தமர்க்கு ஒழிய நீத்து.

அருஞ்சொற்பொருள்:

வாளாதே - வாளா - மௌனமாய்
சேக்கை - பறவைக் கூடு 
சேன் - சேய்மை - வெகு தூரத்தில் 
புள் - பறவை 
தமர்க்கு - பெற்றோர்க்கு, உறவினர்க்கு 

புதன், 25 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 29

கார்த்திகைத் திங்கள் இறுதி வாரக் காலை அது. மரங்களும் செடி கொடிகளும், பனிக் காலத்திற்கு, தங்களை ஆயத்தம் செய்துகொண்டிருந்தன. பசுமையுடன் திகழ்ந்த அந்த புல் வெளியில், புற்களின் நுனிமேல் இருந்த சிறு சிறு பனித் துளிகள், நம் கண்களைக் கவர்ந்து, பார்ப்பதற்கு இனிதாய், நம் மனதை வருடும் காட்சியாய் அமைந்தது. சிறிது நேரம் கழித்து கதிரவன் உதித்து, கதிர்க்கரங்கள் நீட்ட, புல் நுனிமேல் இருந்த பனித்துளிகள் அவ்வொளியை பிரதிபலிக்க, அவை இன்னும் நம் கண்களைக் கவர்ந்தன. பிறகு அக்கதிர்க்ககரங்கள் அளித்த வெப்பத்தின் காரணமாக அந்த பனித்துளிகள் நீராவியாகி மறைந்தன.



அந்த பதித்துளிகளின் சிறிய வாழ்நாள் போல் நம் வாழ்வும் நிலையற்றது என்பதை உணர்ந்து, காலம் தாழ்த்தாது நாம் இன்றே நல்ல செயல்களையும், அறச் செயல்களையும் செய்ய வேண்டும். தற்போது தான் நன்றாக இருந்தான், நம்மிடம் நன்றாக பேசினான், திடீரென காலமகிவிட்டானென்று அவனுடய நண்பர்களும் உறவினர்களும் வருத்தப்பட்டு அழ, ஒருவனின் வாழ்க்கை முடியும் என்பதால், காலம் தாழ்த்தாது நல்ல செயல்கள் செய்வோமாக.

பாடல்:

புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை ; - இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்
சென்றான் எனப்படுத லால்.

பொருளறிந்து படிக்க சொல் பிரித்த பாடல்:

'புல் நுனிமேல் நீர்போல் நிலையாமை' என்று எண்ணி,
இன்னினியே செய்க அறவினை-'இன்னினியே
நின்றான், இருந்தான், கிடந்தான், தன் கேள் அலறச்
சென்றான்' எனப்படுதலால்!

அருஞ்சொற்பொருள்

இன்னினியே - இப்பொழுதே 
தன் கேள் - தன் நண்பர்கள், உறவினர்கள் 

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு நாலடியார்: பாடல் 28

வான் தொடுமளவுக்கு உயர்ந்த மலை. அம்மலையின் உச்சிக்கருகில் அழகாக தவழ்ந்து வந்தன அந்த மேகங்கள். அவற்றை பார்த்து ரசித்த வண்ணம் மெல்லோட்டம் சென்றான் அவன். மெல்லோட்டம் செல்லும்போது அவனது மேனியைத் தழுவியது குளிர்ந்த காற்று. மழை வரப்போகிறதோ என்று நினைத்த வண்ணம் அவன் ஓட்டத்தைத் தொடர்ந்தான். ஒரு சுற்று முடித்து மறு சுற்றுத் துவங்கும் பொழுதே மழை பொழியத் துவங்கிவிட்டது. அவன் மெல்லோட்டம் முடிவதற்கும் அங்கு அவன் பார்த்து ரசித்த மேகங்களில் சில பூமி நோக்கிய தங்களது பயணத்தை முடிப்பதற்கும் சரியாக இருந்தது. ஆம், அம் மலைகளின் மேல் அழகாக தவழ்ந்த மேகங்கள் நீராக மாறி மறைந்து விட்டன.


மேற்கண்ட காட்சியில் உள்ள மேகங்களை உவமையாகக் கூறி இந்த நாலடியாரை இயற்றிய புலவர் கூறும் கருத்து: மறைந்த மேகங்கள் போன்று , நிலையாக இல்லாமல், நம் உடலும் ஒரு நாள் மறையும். அதனால் நல்ல நோயற்ற உறுதியான உடலைக் கொண்டவர்கள், அந்த உடல் உறுதியாக இருக்கும் பொழுதே அதனைக் கொண்டு அறச் செயல்கள் செய்து அதன் பயனை அடையவேண்டும். 

பாடல்: 

யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற
யாக்கையா லாய பயன்கொள்க ;- யாக்கை
மலையாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கே
நிலையாது நீத்து விடும்.

பொருளறிந்து படிக்க சொல் பிரித்த பாடல் :

யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர், தாம் பெற்ற
யாக்கையால் ஆய பயன் கொள்க-யாக்கை
மலை ஆடும் மஞ்சுபோல் தோன்றி, மற்று ஆங்கே
நிலையாது நீத்துவிடும்!

அருஞ்சொற்பொருள்:

யாப்பு - உறுதி - நோயற்ற திடமான நிலையைக் குறிக்கிறது. 
மஞ்சு - மேகம் 

திங்கள், 23 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு நாலடியார்: பாடல் 27

பல்வேறு மக்கள் வாழும் இவ்வுலகில் பல நல்லறிவாளர்கள் வாழ்ந்தனர். வாழ்கின்றனர். இனியும் வாழ்வர். இத்தகைய அறிவாளர்களில் மற்ற அறிவாளர்களுடன் சமமாக கருத முடியாத மெய் அறிவாளர்கள் யார்? அவர்களுடைய தகுதி என்ன? அவர்கள் மெய் அறிவாளர்கள் என்றழைக்கபட நூல்கள் பல கற்றனரோ? அவ்வாறென்றால் எந்த எந்த நூல்கள் படித்தால் மெய் அறிவாளர்கள் ஆகலாம்? இவ்வினாக்களுக்கு விடையளிக்கிறது இந்த நாலடியார்ப் பாடல்.


மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் தேங்கி இருந்த நீரில் மழை பெய்யப் பெய்ய நீர்க் குமிழிகள் உருவாவதும் மறைவதுமாய் இருந்தன. அந்த நீர்க் குமிழிகள் போல் தான் நம் வாழ்வும், உருவாவதும் மறைவதும் இயற்கையாய் நடப்பது என்றுணர்ந்து, தாம் பிறந்த பிறப்பில் நல்ல அறச் செயல்கள் செய்து, அதனால் இந்தப் பிறவியில் ஏற்படும் தடுமாற்றத்தில் இருந்த நீங்கப் பாடுபடுபவரே மெய்யறிவாளர், என்றழைக்கின்றார் இந்த நாலடியாரை இயற்றிய புலவர்.

பாடல்: 
படுமழை மொக்குகளின் பல்காலும் தோன்றிக்
கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித் - தடுமாற்றம்
தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரை
நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல்.

பொருளறிந்து படிக்க சொல் பிரித்த பாடல் :

'படு மழை மொக்குளின் பல் காலும் தோன்றி,
கெடும், இது ஓர் யாக்கை' என்று எண்ணி, 'தடுமாற்றம்
தீர்ப்பேம் யாம்' என்று உணரும் திண் அறிவாளரை
நேர்ப்பார் யார், நீள் நிலத்தின்மேல்?

அருஞ்சொற்பொருள்:

மொக்கு - நீர்க் குமிழி
யாக்கை - உடல்
திண் அறிவாளர் - மெய் அறிவாளர்
நேர்ப்பார் - சமமானவர், ஒப்பானவர்

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு நாலடியார்: பாடல் 26

நேரம் சற்று குறைவாகவே இருப்பதால் அவர் விரைவாக அலுவலகம் புறப்பட்டுக் கொண்டிருந்தார் . கண்ணாடி முன் நிற்கும் பொழுதுதான் தெரிந்தது அந்தக் கீறல். தன நெற்றியில் எவ்வாறு அந்தக் கீறல் எப்படி வந்தது? விரைவாக புறப்பட வேண்டிய நேரம் என்றாலும் அவருடைய மனது ஏனோ அக்கீறல் வந்ததற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று சிந்தித்த வண்ணம் இருந்தது. சிந்தனை அப்படி ஓடினாலும் ஒருவழியாக புறப்பட்டு அலுவலகத்திற்கு நடந்து சென்றார். அப்போது அருகில் வேகமாக வந்த வண்டி அருகில் இருந்த நீரில் செல்ல தன் கால் பகுதியில் அந்தச் சகதி மிகுந்த நீர் பட, சிறிது சினம் கொண்டார்.

மேற்கண்ட நிகழ்வுகளில் அவர் சந்தித்தது, சிந்தித்தது போல், நாம் பல நிகழ்வுகளைப் பார்த்திருப்போம். நம் உடம்பினை என்றும் பேணிப் பாதுகாப்போம். எதுவரை நாம் இவ்வாறு பாதுகாக்கலாம்? தோல் பையால் ஆன இந்த உடம்பு பலவிதச் செயல்களைச் செய்ய ஊட்டுவிக்கும் உயிர் இருக்கும் வரைப் பாதுகாக்க இயலும். உயிர் ஆகிய அந்தக் கூத்தன் நம் உடலைவிட்டு நீங்கிவிட்டால் நம் உடம்பை நாரில் கட்டி இழுத்தாலும், நன்றாக தூய்மை செய்து இடுகாட்டுக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தாலும், இந்த இடத்தில் வைக்கலாம், இந்த இடத்தில் வைக்கக் கூடாது என்று பாராமல் எவ்விடத்தில் போட்டாலும், கண்ட இடத்தில் போட்டதனால் மற்றவர்கள் தூற்றினாலும் நமக்கு பெருமையோ சிறுமையோ இல்லை.

உட்கருத்து: உயிர் நீங்கிய பின் உடம்பின் தன்மை போற்றப்படாததால், நம் உயிர் இருக்கும் பொது உடலை மட்டும் பாதுகாக்காமல் நம் உயிரைப் பாதுகாக்க அறச் செயல்கள் செய்வோமாக.

பாடல்:

நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென்
பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்;
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்
கூத்தன் புறப்பட்டக் கால்.

பொருளறிந்து படிக்க சொல் பிரித்த பாடல்:

நார்த் தொடுத்து ஈர்க்கில் என்? நன்று ஆய்ந்து அடக்கில் என்?
பார்த்துழிப் பெய்யில் என்? பல்லோர் பழிக்கில் என்?-
தோல் பையுள் நின்று, தொழில் அறச் செய்து ஊட்டும்
கூத்தன் புறப்பட்டக்கால்.

அருஞ்சொற்பொருள்:

ஈர்க்கில் - ஈர்த்தல் - இழுக்கப்படுதல்
ஆய்ந்து - தூய்மை செய்து
உழி - இடம்
பெய்யில் - பெய்தால் - வைத்தல்
கூத்தன் - இங்கு உயிரைக் குறிக்கின்றது

சனி, 21 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு நாலடியார்: பாடல் 25


நாம் நம்முடைய அன்றாட வாழ்வினைத் தொடர்கின்றோம். தொழில் நிமித்தமாக இருக்கட்டும் அல்லது இல்லத்தின் நிமித்தமாக இருக்கட்டும் நாளை மீதுள்ள நம்பிக்கை என்பது தான் நமக்கு கை கொடுக்கும் தோழமை. நாளும் பொழுதும் இவ்வாறு நகரும் பொழுது அவ்வப்போது நமக்கு ஏதோ ஒரு நிகழ்வு நம்மை ஆழ்ந்த சிந்தனைக்கு இழுத்துச் செல்லும். நாம் நல்ல பாதையில் சென்று கொண்டிருக்கிறோமா? நல்ல செயல்கள் செய்கிறோமா? என்று வினாக்கள் நம் மனதில் எழும்.

இப்படி நமக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கும் ஒரு நிகழ்வு ஒருவர் இயற்கை எய்திய இல்லத்தில் ஒலிக்கும் பறை ஒலி. "டொன் ,டொன், டொடு" என்று ஒலிக்கும் அந்தப் பறை என்ன எச்சரிக்கை விடுக்கிறது? ஊரும் உறவினரும் சேர்ந்து, அலறி அழுது கலமானவரின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்வதைக் கண்டும், திருமணம் புரிந்து அனைத்து இன்பங்களும் என்றும் "உண்டு, உண்டு, உண்டு" என்று சிற்றின்பச் செயல்கள் மட்டும் புரிந்து இவ்வுலக வாழ்வினை வாழ்பவருக்கு, இவ்வுலகில் இருந்து பிரிவது இயற்கையே என்று எச்சரிக்கை விடும்.

உட்கருத்து: சிறிது காலம் வசிக்கும் நாம் சிற்றின்பம் மட்டுமன்றி அறச் செயல்களும் செய்வோமாக.

பாடல் :

கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்
பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் - மணங் கொண்டீன்
டுண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமே
டொண்டொண்டொ டென்னும் பறை.

பொருளறிந்து படிக்க சொல் பிரித்த பாடல்:

கணம் கொண்டு சுற்றத்தார் கல்லென்று அலற,
பிணம் கொண்டு காட்டு உய்ப்பார்க் கண்டும், மணம் கொண்டு, ஈண்டு,
'உண்டு, உண்டு, உண்டு' என்னும் உணர்வினான்-சாற்றுமே,
'டொண் டொண் டொடு' என்னும் பறை.

அருஞ்சொற்பொருள்:

கணம் - கூட்டம்
ஈண்டு - இவ்வுலகில்


வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு ‪நாலடியார்‬: பாடல் 24

காலை எழுந்து மெல்லோட்டம்.. பின்பு கடன்கள் முடித்து மகிழுந்துவில் அலவலகத்திற்கு பயணம். வேலை விறுவிறுப்புடன் முடிய, அன்று மாலை ஒரு மெல்லிசை நிகழ்வு. அந்த நாளின் இடை இடையே சில உறவினர்களுடனும் சில நண்பர்களிடமும் தொலைபேசி வழியாக நலம் விசாரிப்பு. ஒரு நாள் என்பது பல வித நிகழ்வுகளை உள்ளடக்கிய கருவூலம். இந்நிகழ்வுகள் அனைத்தும் ஒருவரின் வாழ்வில் நடப்பதற்கு முக்கிய காரணம் நம் உடலில் உயிர் சேர்ந்திருப்பது தான்..
இவ்வாறு பல நிகழ்வுகளை நிகழ்த்திய உடலும் உயிரும் இயற்கையின் விதிப்படி ஒரு நாள் பிரியும். அவ்வாறு பிரிந்து விட்டால் என்ன நடக்கும்? நம் மீது அன்பைப் பொழிந்த உறவினர்களும் நண்பர்களும் கூடி, நம்மை நினைவில் நிறுத்தி வருத்தப் படும் வேளையில், காலமான நிகழ்வை தெரிவிக்க பறை ஒலிக்கப் படும். முதன் முறை ஒலித்துவிட்டு சிறிது நேரம் இடைவெளி விட்டு மீண்டும் பறை ஒலி. இவ்வாறு மூன்றாம் முறை பறை ஒலிக்கும் முன்னரே நம் உடல் துணியால் மூடப்பட்டு தீ சட்டியுடன் நம் உடலை நம் இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்வர். யார் எடுத்துச் செல்வார்கள்? இறந்தவரை இறக்கப் போகிறவர்கள் எடுத்துச் செல்வார்கள். எவ்வளவு செல்வம் வைத்திருந்தாலும், எத்தனை உறவினர் நண்பர்கள் இருந்தாலும், உடலை விட்டு உயிர் பிரிந்தவுடன், சிறிது நேரத்திலேயே நம் உடலை நாம் வாழ்ந்த இல்லத்தில் இருந்து எடுத்துச் சென்று விடுவார்கள்.
குறிப்பால் உணர்த்தப் படும் பொருள்: இறப்பது என்பது உறுதி. ஆதலால் இருக்கும் போதே நற்செயல்கள் செய்வோமாக.
பாடல்:
சென்றே எறிப ஒருகால் ; சிறுவரை
நின்றே எறிப பறையினை - நன்றேகாண்
முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டெழுவர்
செத்தாரைச் சாவார் சுமந்து.
பொருளறிந்து படிக்க சொல் பிரித்த பாடல்:
சென்றே எறிப ஒருகால்; சிறு வரை
நின்றே எறிப, பறையினை; நன்றேகாண்,
முக் காலைக் கொட்டினுள், மூடி, தீக் கொண்டு எழுவர்,
செத்தாரைச் சாவார் சுமந்து!
அருஞ்சொற்பொருள்
எறி - ஒலிப்பது
ஒருகால் - ஒரு முறை
வரை - இங்கு காலம் அன்னும் பொருளில் பயன்படுத்தப் பட்டது

வியாழன், 19 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு நாலடியார்: பாடல் 23

நம் முன்னோர்களின் வாழ்வில் ஓர் நாள்....
பெரியதொரு அவை. தென்னங்கீற்றில்  உண்டான தோரணங்கள், மலர் மாலைகள் என்று அந்த அவை மிகவும் அழகாக அலங்கரிக்கப் பட்டு இருந்தது. ஊர்ப் பெரிரவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று பலரும் அந்த அவைக்குள் நுழைந்து, இன்முகத்துடன் வரவேற்கப்பட்டு அந்த அவையில் சென்று அமர்ந்தார்கள். அந்த அவை அதிரும் வகையில் அங்கு திருமணப் பறை ஒலித்தது. அப்பறையின்  ஒலி அந்நிகழ்வை ஊருக்கு உணர்த்தியது. ஆம் அங்கு நம் முன்னோர் இருவருக்கு அன்று திருமணம் நல்ல படி நடந்தது.

அன்று துவங்கிய அத்தம்பதியினர் வாழ்வில் காலம் செல்லச் செல்ல பல நிகழ்வுகள் நடந்தேறின. பிறகு ஒரு நாளில் மங்கல நிகழ்வை ஊருக்கு அறிவிக்க பயன்பட்ட பறை அவர்கள் காலமான நிகழ்வை அறிவிக்க பயன்பட்டது. இது நாள் தோறும் நடக்கும் இயற்கை நிகழ்வு என்பதை உணர்ந்த மாட்சிமை வாய்ந்த பெரியவர்கள், அவர்களுக்கு கிடைத்த வாழ்நாட்களில் நற்செயல்கள் மற்றும் அறச்செயல்கள் செய்து அறம் சார்ந்த வழியில் பயணிப்பார்கள்.

இக்கருத்தை விளக்கும் பாடல்:

மன்றம் கறங்க மணப்பறை யாயின
அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் -பின்றை
ஒலித்தலும் உண்டாமென் றுய்ந்துபோம் ஆறே
வலிக்குமாம் மாண்டார் மனம்.

பொருளறிய சொல் பிரித்த பாடல்:

'மன்றம் கறங்க மணப் பறை ஆயின,
அன்று அவர்க்கு ஆங்கே, பிணப் பறை ஆய், பின்றை
ஒலித்தலும் உண்டாம்' என்று, உய்ந்துபோம் ஆறே
வலிக்குமாம்-மாண்டார் மனம்.

அருஞ்சொற்பொருள்:

மன்றம் - அவை, இங்கு திருமணம் நடக்கும் பேரவையைக் குறிக்கிறது
கறங்க - ஒலித்தல்
ஆறே - வழி
வலிக்குமாம் - துணிந்து நிற்குமாம்
மாண்டார் - மாட்சிமை மிகுந்தவர்கள்

புதன், 18 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு #நாலடியார்:பாடல் 22

இரவின் இருள் போர்வை மெதுவாக விலகத் துவங்கியது. புல் மற்றும் தாவரங்களின் மேல் இருந்த பனித்துளிகள் மறையத் துவங்கின. காலக் கணக்கில் ஒரு நாள் முடிந்து மற்றொரு நாள் தன் பயணத்தை ஆரம்பித்தது. இவை அனைத்தும் நடப்பதற்கு காரணகர்த்தாவாக விளங்கும் கதிரவன் தன் கதிர்க் கரங்களை நீட்டி கிழக்கில் உதயமானது. இந்நிகழ்வு நாள் தவறாமல் நடப்பது. 

காலக் கணக்கின் அளவாக உள்ள நாள் துவங்குவதற்கு அடையாளமாக கதிரவனின் உதயம் அமைவதால், அந்த உதயம் வாழ்நாளின் அலகாக கருதப்பட்டது. பகலவனின் உதயம் நாள் தவறாமல் நடப்பதால், நாம் வாழ்ந்த நாட்கள் கூடிக்கொண்டே உள்ளது. வாழக்கூடிய நாட்கள் அதிகம் கொண்டு, நிலையாக உயிருடன் வாழ்ந்தவர் என்று ஒருவருமில்லை. அதனால் வாழ்நாள் முடியும் முன்னரே நாம் மற்றவர்களுக்கு உதவி செய்து வாழ்வோமாக. 

இக்கருத்தை உணர்த்தும் நாலடியார்ப் மாடல்:

நாளும் ஒரு #நாலடியார் : பாடல் 22

இரவின் இருள் போர்வை மெதுவாக விலகத் துவங்கியது. புல் மற்றும் தாவரங்களின் மேல் இருந்த பனித்துளிகள் மறையத் துவங்கின. காலக் கணக்கில் ஒரு நாள் முடிந்து மற்றொரு நாள் தன் பயணத்தை ஆரம்பித்தது. இவை அனைத்தும் நடப்பதற்கு காரணகர்த்தாவாக விளங்கும் கதிரவன் தன் கதிர்க் கரங்களை நீட்டி கிழக்கில் உதயமானது. இந்நிகழ்வு நாள் தவறாமல் நடப்பது. 

காலக் கணக்கின் அளவாக உள்ள நாள் துவங்குவதற்கு அடையாளமாக கதிரவனின் உதயம் அமைவதால், அந்த உதயம் வாழ்நாளின் அலகாக கருதப்பட்டது. பகலவனின் உதயம் நாள் தவறாமல் நடப்பதால், நாம் வாழ்ந்த நாட்கள் கூடிக்கொண்டே உள்ளது. வாழக்கூடிய நாட்கள் அதிகம் கொண்டு, நிலையாக உயிருடன் வாழ்ந்தவர் என்று ஒருவருமில்லை. அதனால் வாழ்நாள் முடியும் முன்னரே நாம் மற்றவர்களுக்கு உதவி செய்து வாழ்வோமாக. 

இக்கருத்தை உணர்த்தும் நாலடியார்ப் மாடல்:

வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம்
வீழ்நாள் படாஅ தெழுதலால் - வாழ்நாள்
உலவாமுன் ஒப்புர வாற்றுமின் ; யாரும்
நிலவார் நிலமிசை மேல்.

பொருளறிய சொல் பிரித்த வரிகள்:

வாழ்நாட்கு அலகா, வயங்கு ஒளி மண்டிலம்
வீழ் நாள் படாஅது எழுதலால், வாழ்நாள்
உலவாமுன் ஒப்புரவு ஆற்றுமின்; யாரும்
நிலவார், நிலமிசை மேல்.

அருஞ்சொற்பொருள்:

அலகா - அளக்கப் பயன் படும் கருவியாக
வயங்கு - ஒளி செய்தல் 
ஒளி மண்டிலம் - கதிரவன்
வீழ நாள் படாஅது - நாள் தவறாமல்
உலவாமுன் - முடிவதற்கு முன்
ஒப்பரவு - உதவி
நிலவார் - நிலை பெற மாட்டார்
ஒப்பரவு - உதவி
நிலவார் - நிலை பெற மாட்டார்





செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 21



அந்த இடம் குறிஞ்சி நிலப் பரப்பைச் சார்ந்தது. அங்கங்கே மலைத்தொடர்கள். பல மலைகளின் சிகரங்கள் மேகங்களோடு உரையாடின. அந்த மலைகளுக்கெல்லாம் உச்சியில் அழகுடன் தவழ்ந்து வந்தது அந்த வெண்ணிலா.

ஆகாயத்தில் நிலவிய அந்தக் காட்சியைப் போல் நிலத்திலும் ஒரு நிகழ்வு நடந்தது. நிலத்தில் பல மக்கள் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். அந்த வேலைகளையும் நாட்டையும் பார்வையிட ஊர்வலம் வந்தார் மன்னர். அவ்வாறு வளம் வருகையில் அவர் யானை மீது ஏறி, அவரை வெயில் மழையில் இருந்து காப்பாற்ற, அவருடைய சேவகர்கள் அவருக்கு பெரிய குடை பிடித்து வந்தனர். இவ்வாறு அவர் வளம் வந்தது மேற்கண்ட காட்சியில் மலைகளுக்கெல்லாம் மேலே வந்த நிலவைப் போன்று இருந்தது.

அப்படி உயரத்தில் வலம் வந்த மன்னரும் மண்ணோடு மண்ணாக மாறுவது என்பது நிச்சயம். வாழும்பொழுது நாம் எவ்வளவு உயர் பதவியில் உயர் நிலையில் இருந்தாலும் நாம் அனைவரும் ஒரு நாள் இந்த இயற்கையோடு இணைவது தவிர்க்க முடியாதது.

உட்கருத்து: வாழ்க்கை என்பது நிலை அல்ல. வாழும் காலத்தில் நல்ல அறச்செயல்கள் செய்வோமாக.

பாடல்:
மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட்ட டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில்.


அருஞ்சொற்பொருள்:

மலைமிசை - மலையின் உச்சியில்
துஞ்சினார் - இறந்தார் என்பதற்கான மங்கல வழக்குச்சொல்
எஞ்சினார் - தப்பித்தார்


    

திங்கள், 16 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 20



நாம் நம் வாழ்நாளில் பலவற்றை சேர்த்து வருகிறோம். நிதி, வீடு, நிலம், நல்ல நண்பர்கள், நல்ல நூல்கள் - இது போன்று பல. இவை தவிர மிகவும் முக்கியமான ஒன்று சேர்க்கின்றோமா என்று நம் முன்னோர் வினவுகின்றனர். அது என்னவாக இருக்கும்? அதனை நாம் ஏன் சேர்க்க வேண்டும் என்று விரும்பினர்?  அனைத்து சேமிப்பை விடவும் மிகச் சிறந்த சேமிப்பு நாம் செய்த நற்செயல்களின் சேமிப்புதான் என்கின்றனர். அவ்வாறு சேர்த்தால் தான் நமக்கான அடுத்த பிறப்பில் நன்மை விளையும் என்று நம்பினர். அதுவும் அந்த சேமிப்பை செய்வதற்கு காலம் தாழ்த்தாமல் இளமைக் காலதிலேயே செய்துவிடவேண்டும் என்றனர்.

சேமிக்க வேண்டும், சரி. எதற்காக இளமையில் சேமிக்க வேண்டும்? அருள் அற்றவனாகிய எமன் உடலில் இருந்து உயிரைப் பிறக்கும் தொழிலை இடைவிடாது செய்து வருபவன். அவனுடை அருளற்ற தன்மைக்கு சான்றாக ஒரு காட்சியை விவரிக்கின்றனர்: தன் வயிற்றில் இருந்து பெற்ற குழந்தையைக் காப்பாற்ற ஒரு தாய் கதறி அழுதாலும் இரக்கம் காட்டாமல் அந்த எமன் கூட்டிச் செல்வான். அப்பேற்பட்ட எமனிடம் இருந்து தப்பிக்க இயலாது. அதனால் காலம் இருக்கும் பொழுதே நல்ல செயல்கள் செய்வீராக என்று உணர்த்துகிறது இப்பாடல்.

பாடல்:

ஆட்பார்த் துழலும் அருளில்கூற் றுண்மையால்
தோட்கோப்புக் காலத்தால் கொண்டுய்ம்மின் - பீட்பிதுக்கிப்
பிள்ளையைத் தாய்அலறக் கோடலான் மற்றதன்
கள்ளம் கைபிடித்தல் நன்று.

அருஞ்சொற்பொருள்

உழலும் - அதே வேலையாத் திரிகின்ற
அருள் இல் கூற்று - இரக்கம் இல்லாத எமன்
தோள் கோப்பு - கட்டுச் சோறு போல் நற்செயல் கட்டு - தோளில் தூக்கிச் செல்லுதல்
காலத்தால் - இளமைக் காலத்திலேயே
கொண்டுய்ம்மின் - உண்டாக்கிப் பிழையுங்கள்
பீள் - குழந்தை

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 19


அலுவலகத்தில் அன்று வேலைப் பளு அதிகமாக இருந்தது. மதிய உணவு முடித்துவிட்டு சிறிது நடந்துவிட்டு வரலாம் என்று அவன் அருகில் இருக்கும் பூங்காவிற்குச் சென்றான். பருவங்கள் மாறும் காலம் அது. அப்போதைய பகல் பொழுதில் காற்று மிகவும் பலத்துடன் கடுமையாக வீசியது. அதன் பலம் அதிகமாக இருந்ததால் மரங்கள் அனைத்தும் குலுங்கின. சில கனிகள் மரங்களில் இருந்தன. சில கனிகள் கீழே விழுந்தன. விழுந்தவை கனிகள் மட்டுமல்ல. இன்னும் கனியாத சில காய்களும் கீழே விழுந்தன. இயற்கையப் பார்த்து மகிழ்ந்து வந்த அவனுள்ளே எப்போதும் போல் எண்ணங்கள் வருவதும் போவதுமாக இருந்தன.

அவனுள் வந்த பல எண்ணங்களுள் ஒன்று நற்செயல் செய்வது பற்றியதாகும். நல்லது செய்ய வேண்டும் என்று தான் நினைத்த நாட்களை எல்லாம் சிந்தித்துப் பார்த்தான். பள்ளியில் இருக்கும் பொழுது கல்லூரிக் காலத்தில் தன் உழைப்பை வழங்கி உதவலாம் என்று நினைத்தது; பிறகு கல்லூரிக் காலத்தில் வேலைக்குச் சென்ற பிறகு செல்வம் சேர்த்து அறச்செயல்கள் செய்யலாம் என்று நினைத்தது; இவ்வாறு பல நினைவுகள். திடீரென அவனுக்குள் ஒரு பொறி தட்டியது. மரங்களில் இருந்து விழுந்த கனிகளும் காய்களும் அவனுக்குள் ஒரு உண்மையை உணர்த்தின. கனிகள் விழுவது எதிர்பார்த்ததுதான். ஆனால் காய்களும் விழுந்தனவே! இது போல் நம் வாழ்வு, முதுமையா அல்லது இளமையா என்று பார்க்காமல் என்று வேண்டுமானாலும் முடியலாம். அதனால் நல்ல அறச்செயல்கள் செய்வதற்கு "இது இளமைக் காலம் தானே. இன்னும் செல்வம் சேர்த்து நாம் பின்பு செய்யலாம்" என்று எண்ணாமல் இன்றே செய்யவேண்டும் என்ற முடிவோடு அவன் தன் நடையை முடித்தான்.

இதனை விளக்கும் நலடியார்ப் பாடல்:

மற்றறிவாம் நல்வினை யாம்இளையம் என்னாது
கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்ம்மின்;
முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு

அருஞ்சொற்பொருள்:

மற்றறிவாம்- மற்று அறிவாம் - பின்பு செய்து கொள்ளலாம்
இளையம் - இளமைப் பருவம்
கைத்துண்டாம் - கைத்து உண்டாம் - கையில் இருக்கும் பொருள்
கரவாது - மறைக்காமல்
தீ வளியால் - கடும் காற்றினால்




நாளும் ஒரு நாலடியார்: பாடல் 18


நீண்ட நாட்களுக்குப் பிறகு இரு நண்பர்கள் இணைந்தார்கள். பல ஆண்டுகள் கடந்த காரணத்தால் பல வினாக்கள் அவர்கள் மனதினில். என்ன வயது ஆகின்றது? நேரம் பறந்து விட்டதே! பற்கள் எத்தனை மீதம் இருக்கின்றது? மீதம் இருக்கும் பற்கள் எப்படி, எந்தத் தன்மையில் இருக்கின்றன? எவ்வளவு சாப்பிட முடிகிறது? இரு கவளமாவது சாப்பிட முடிகிறதா? இப்படி அனைத்து வினாக்களையும் அவர்களுக்குள் வரிசையாக பரிமாரிக்கொண்டார்கள். இவ்வினாக்களை நாம் உற்று நோக்கினால் ஓர் ஒற்றுமை வெளிப்படும். இவை அனைத்துமே உடல் நிலை பற்றியது.

இப்பொழுது வேறு ஒரு காட்சியைப் பார்க்கலாம். இதில் அறிவு மிகுந்த பெரியோர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கின்றனர். அவர்கள் தங்களுக்குள் கேட்டுக் கொண்ட வினாக்கள் அனைத்துமே ஈதல் மற்றும் புகழ் பெற வாழ்தல் குறித்து இருந்தன. எந்த வினாவுமே உடம்பைக் குறித்து இல்லை. ஏன் என்றால் அறிவுடைய அவர்கள், உடல் நிலையற்றது, அது காலம் செல்லச் செல்ல மாறும் என்பதை நன்கு உணர்ந்திருந்தனர். அதனால் அதனைப்பற்றி சிந்திக்காமல் நல்ல அறச்செயல்கள் பற்றி சிந்திக்கிறார்கள்.

பாடல்:
பருவம் எனைத்துள பல்லின்பால் ஏனை
இருசிகையும் உண்டீரோ என்று - வரிசையால்
உண்ணாட்டம் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோள்
எண்ணார் அறிவுடை யார்.

அருஞ்சொற்பொருள்:

பருவம் - வயது
எனைத்து - எவ்வளவு
பால் - தன்மை
சிகை - பிடி, கவளம்
உண்ணாட்டம் - உள் நாட்டம் - உள்ளத்தில் ஆராயப்படுதல்
யாக்கை - உடம்பு
கோள் - தன்மை


நாளும் ஒரு நாலடியார் : பாடல் 17


பனி படர்ந்து அதனால் குளிர் காற்று வீசி, குளிர்ந்தது அந்த சோலை. கண்களைக் கவரும் மலர்களைக் கொண்டு பூத்துக் குலுங்கின அந்த மரங்கள். மலர்களைத் தொடர்ந்து அம்மரங்கள் காய்கள் மற்றும் கனிகளைத் தாங்கித் திகழ்ந்தன. பின்னர் இலையுதிர் காலம் வந்து, பூத்துக் குலுங்கிய மரங்களா இவை என்று வியக்க வைக்கும் அளவுக்கு காட்சி மாறியது.

மேற்கண்ட காட்சியை உவமையாக விளக்கிவிட்டு நம் நாலடியார்ப் புலவர் இன்னொரு காட்சியைப் பாடுகிறார். அவள் கண்களைக் கண்டால் மின்னல் பாய்ச்சுவது போல் இருக்கும். அதன் கூர்மையின் காரணமாக அவளை வேல் கண்ணள் என்று வர்ணித்திருக்கிறார். அவ்வாறு வேல் போன்ற கண்களை உடையவள் தனது ஊன்று கோலையும், பாதையையும் பார்த்துக் கொண்டு குனிந்து நடக்கும் நிலை அடைகின்றாள். வேல் கண்ணளாக இருந்தவள் கோல் கண்னளாக மாறிவிடுவாள். அதனால் நிலையற்ற இளமைப் பருவத்தில் இருக்கும் பெண்ணின் மீது ஆசைப் பட்டு அறச் செயல்களை தவர் விடாதீர்கள் என்று உணர்த்துகிறார் இந்த பாடலை எழுதிய புலவர்.

பாடல்:
பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம்
கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை - நனிபெரிதும்
வேல்கண்ணள் என்றிவளை வெ ஃகன்மின் மற்றிவளும்
கோல்கண்ண ளாகும் குனிந்து

அருஞ்சொற்பொருள்:

நனி - சிறந்த
வெ ஃகன்மின் - ஆசைப் படாதீர்கள்
கோல்கண்ணள் - ஊன்று கோலை பார்க்கும் கண்களை உடையவள்


நாளும் ஒரு நாலடியார் : பாடல் 16


அறிவுள்ள மாந்தரிடம் பல நல்ல பண்புகள் இருக்கும். பல நூல்கள் கற்று கல்வியறிவு மிகுந்து இருக்கும். பல செயல்கள் செய்து பட்டறிவும் மிகுந்திருக்கும். ஆனால் அவரிடம் இல்லாதன எது? பல தேவையற்ற விடயங்கள் இல்லாமல் இருக்கலாம். அதில் மிக முக்கியமானதாக நம் முன்னோர் கருதியது இளமைக் காலத்தில் அறியாமையால் நிலையில்லாத சிற்றின்பத்தை அடைய விரும்பாதது

இதனை விளக்குவதற்கு விவரிக்க பட்டகாட்சி:

வெப்பம் நிறைந்த இடம் அது. அங்கு ஒரு வெறியாட்டம் ஆடும் நபர். அவர் கையில் இலை மற்றும் மலர்கள் இணைத்துக் கட்டிய மாலையுடன் நின்று கொண்டிருக்கிறார். அருகில் அந்த மாலையைப் பெற்று பலியாகப்போகும் ஆடு நின்று கொண்டிருக்கிறது. தாம் தம் உயிரை இழக்கப்போகிறோம் என்று அறியாமல் அந்த ஆடு வெறியாட்டம் ஆடும் நபரின் கையில் இருந்த மாலையினை உணவாக உண்டு மகிழ்ச்சி அடைகிறது. இம்மகிழ்ச்சி போன்ற சிற்றின்பத்தை அறிவுள்ள சான்றோர் விரும்ப மாட்டார்கள் என்கின்றது இந்த நாலடியார்ப் பாடல்.

பாடல்

வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி
முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க
மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி
அறிவுடை யாளர்கண் இல்.

அருஞ்சொற்பொருள்:

வெறி அயர் - வெறியாட்டம் ஆடுகிற
வெங்களம் - வெப்பமான இடம்
பாணி - பல பொருட்கள் கொண்டது. இங்கு கை என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது.
முறி - தளிர்கள்
ஆர் - நிறைந்த
கண்ணி - மாலை ; நறுங்கண்ணி - வாசனையுள்ள மாலை
மறி - ஆடு
குளகு - உணவு
மன்னா - நிலையில்லா




நாளும் ஒரு நாலடியார் : பாடல் 15


அது ஒரு நிழற்சாலை. அங்கு ஒரு பெண் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி காலார நடந்து வந்தாள். அவளது சிந்தனை சமீபத்தில் காலமாகிய தன் தாயைப் பற்றி இருந்தது. சிறார் பருவம் இளமைப் பருவம் முதுமைப் பருவம் தாண்டி இறந்த தன் தாய் மீண்டும் ஒரு தாயின் வயிற்றில் பிறப்பதற்கு தாய் தேடிப்போனதாக எண்ணினாள். தன் தாயின் தாயும் அவ்வாறே மற்றொரு தாய் தேடிப் போனாள். இது இயற்கையாக இவ்வுலகில் நடப்பது.

உலகில் சுழற்சி தன்மை கொண்ட நிகழ்வுகள் பல. கார் காலம், கோடை காலம், வசந்த காலம் என்று காலங்கள் சுழன்று கொண்டிருக்கின்றன. நாள், இரவு என்பது பூமியின் சுழற்சியினால் உண்டாவது. இவ்வகை சுழற்சிகளை கண்டதால்தானோ நம் முன்னோர் உயிர் சுழற்சி, அதாவது மறு பிறப்பிலும் நம்பிக்கை வைத்தனர்?

என்றும் நாம் இளமையுடன் இருப்பது என்பது இயலாத ஒன்று. அதனால் நல்ல சுகத்துடனும் உடல் நலத்துடனும் இருக்கும் பொழுதே நாம் நற்செயல்கள் செய்யவேண்டும் என்பது இப்பாடலின் உட்கருத்து.

பாடல்:

எனக்குத்தாய் ஆகியாள் என்னைஈங் கிட்டுத்
தனக்குத்தாய் நாடியே சென்றாள் ;- தனக்குத்தாய்
ஆகி யவளும் அதுவானால் தாய்த்தாய்க்கொண்
டேகும் அளித்திவ் வுலகு.

அருஞ்சொற்பொருள்

ஏகும் அளித்து இவ்வுலகு - போகின்ற எளிமையையுடையது இந்த உலகம் என்க




நாளும் ஒரு நாலடியார்: பாடல் 14


வயதான ஒரு மூதாட்டி நடந்து வந்தார். அவர் கூன் விழுந்த முதுகுடன் குனிந்து நடந்து வந்தார். மிகவும் தளர்ச்சியுடன் திகழ்ந்த அவர் நடந்து வரும் பொழுது அவரை அறியாமலேயே அவர் தலை நடுங்கியது. மூன்றாம் காலாக அவரது ஊன்றுகோல் அவர் நடப்பதற்கு உதவியது. இவ்வாறு உடல் தளர்ந்து அவரது வாழ்நாள் குறைந்து இறக்கும் காலத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்.

இவ்வாறு இன்று இருக்கும் மூதாட்டி, இவரது தாயார் கோல் ஊன்றி உடல் தளர்ந்திருக்கும் பொழுது எப்படி இருந்தார்? இவரைக் கண்டவரைக் கவர்ந்து இவர் மேல் மோகத்தைக் கொண்ட மாந்தருக்கு வருத்தம் ஏற்படுத்தக் கூடிய அழகைக் கொண்டிருந்தார். அழகு சரி. அது என்ன வருத்தம் கொடுக்கக் கூடிய அழகு? உறுதியான அறிவு இல்லா மாந்தர், அழகில் மயங்கி அதனால் அறச்செயல்கள் செய்யத் தவறி, அதன் விளைவாக வருத்தம் ஏற்படுதலால், வருத்தம் உண்டாக்கக்கூடிய அழகு என்று வர்ணித்தார்.

இப்பாடலின் உட்பொருள்: கவரக்கூடிய அழகும் காலம் செல்லச் செல்ல மாறிவிடும். அதனால் இளமையில் மாறாத இன்பமளிக்கும் அறச்செயல்கள் செய்ய வேண்டும்.

பாடல்:

தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா
வீழா இறக்கும் இவள்மாட்டும் - காழ்இலா
மம்மர்கொள் மாந்தர்க் கணங்காகும் தன்கைக்கோல்
அம்மனைக்கோல் ஆகிய ஞான்று.

அருஞ்சொற்பொருள்:

தாழா - குனிந்து
வீழா - வீழ்ந்து
காழ்இலா - உறுதியான அறிவு இல்லாத
மம்மர்கொள் - காம மயக்கத்தைக் கொண்ட
அணங்கு - வருந்துதல்
அம்மனைக்கோல் - அவள் தாயின் கோல்
ஞான்று - நாள்


நாளும் ஒரு நாலடியார்: பாடல் 13


நாம் எப்போது களிப்புடன் இருப்போம்? எப்போது மகிழ்ச்சி அடைவோம்? இன்பம் நிறைந்திருக்கும் வழியில் செல்வதற்கு என்ன வழி? இவ்விணாக்களுக்கு என்ன விடை சொல்கின்றனர் நம் முன்னோர்? அவர்கள் இன்பத்தை பேரின்பம், சிற்றின்பம் என்று வகுத்தனர். இல்வாழ்க்கை சார்ந்த இன்பங்களை சிற்றின்பமாக சித்தரித்தனர். மற்றவருக்கு உதவுவது, அறச்செயல்களை செய்வது, துறவறம் பூண்டு ஞானச் சேவை செய்வது போன்ற செயல்களை அவர்கள் பேரின்பமாகப் பார்த்தனர்.

இல்வாழ்வில் இணையாளுடன் இணைந்து மற்ற இல்லம் சார்ந்த இன்பங்களில் வாழ்நாள் முழுதும் திளைத்து இருக்கும் மாந்தரின் நிலை எத்தகையது? வாய் பேச்சின் வலிமை இழந்துவிடுவர். கோல் ஊன்றி உடல் சோர்ந்து நடப்பர். பற்கள் அனைத்தும் விழுந்துவிடும். உடம்பாகிய பண்டம் பழிக்கப்படும்.இவ்வகை வாழ்வை மேற்கொண்டவருக்கு இன்பம் (பேரின்பம்) அடையும் வழி இயலாததாகும்.

இதனை விளக்கும் நாலடியார்ப் பாடலில் உட்பொருளாக கூறப்படுவது: நம் வாழ்வை சிற்றின்பச் செயல்களில் மட்டும் செலவழிக்காமல் பேரின்பச் செயல்களையும் செய்து வாழ்வை நிறைவாக்க வேண்டும்.

பாடல்:

சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப்
பல்கழன்று பண்டம் பழிகாறும் - இல்செறிந்து
காம நெறிபடருங் கண்ணினார்க் கில்லையே
ஏம நெறிபடரு மாறு.

அருஞ்சொற்பொருள்:

பண்டம் - இங்கு உடம்பைக் குறிக்கிறது
செறிந்து - புணர்ந்து
கண்ணினர் - சேர்ந்தவர் / பார்த்தவர்
ஏமம் - களிப்பு, இன்பம்
ஆறு - வழி, பாதை




நாளும் ஒரு நாலடியார்: பாடல் 12


இனிமையான காற்று. இதமான அலையோசை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தண்ணீர். ஆழம் அறிய போட்ட கல் அடிச் சேர அதிக நேரம் ஆனது. அவ்வகை ஆழம் மிகுந்த கடலில் மரக்கலம் ஒன்று மிதந்து வந்தது. சிறிது நேரத்துக்குள் அந்த எதிர்பாராத நிகழ்வு நடந்தது. அந்த மரக்கலம் ஆழ்கடலில் மூழ்கியது. 

இக்காட்சியைப்போல் நம் வாழ்விலும் நிகழ்வு ஏற்படலாம். எப்பொழுது? உள் மனத்திள் சிந்தனை செய்தால் நமக்குப் புரியும்.

நம் வாழ்வின் இனிமைக்கு முக்கியமானதாக மூன்று அம்சங்களைக் கூறலாம்; நட்பு, பெரியவர்களின் துணை மற்றும் பொதுமக்களின் அன்பு. நமக்குத் தேவை ஏதாவது வரும்பொழுது நாம் நாடுவது நம் நண்பர்களை. சாண்றோர்கள் அருகில் இருந்தால் அறிவுரை சொல்லி நம் செயல்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பொதுமக்களின் அன்பு இருந்தால் நம் வாழ்வு எந்நிலை அடைந்தாலும், நமக்கு பக்கபலமாக அந்த அன்பு அமையும். இவ்வாறான மூன்றும், நாம் நம் இளமையில் செய்யத்தக்க செயல்களை செய்யாமல் போனால், நம்மைவிட்டு விலகும். இதனைத்தான் ஆழ்கடலில் மூழ்கிய மரக்கலத்திற்கு ஒப்பிட்டனர் நம் முன்னோர்.

பாடல்:

நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார்
அற்புத் தளையும் அவிழ்ந்தன - உட்காணாய்;
வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம்? வந்ததே
ஆழ்கலத் தன்ன கலி.

அருஞ்சொற்பொருள்:

அற்றன - அற்றுப்போயின - முறிந்து போவது
அஃகினார் - அணுக்கங் குறைந்தனர்
- அணுக்கம் - நெருக்கம்
அற்பு - அன்பு
தளை - கட்டு
ஆழ்கலம் - ஆழ்கடலில் மூழ்கிய கலம்
கலி-துன்பம்




நாளும் ஒரு ‪‎நாலடியார்‬: பாடல் 11


இளமைக் காலம் என்பது ஓர் அரிய பருவம். அருமையான பருவம். இப்பருவத்தில் நம் சக்தி நிலை அதிகமாக இருக்கும். "இளங்கன்று பயமறியாது"என்று கூறுவது போல் இப்பருவத்தில் எதனைப்பற்றியும் கவலைப்படாமல் புது முயற்சிகளை, புது செயல்களை செய்யத் தயக்கம் இருக்காது. இதனை நன்கு உணர்ந்த நல் அறிவாற்றல் கொண்டவர்கள், இளமைப்பருவ இன்பங்களில் நேரத்தை செலவழிக்காமல் நல்ல செயல்களுக்கு நேரத்தை ஒதுக்குவர். அக்காலத்தில் பல நற்செயல்களுள் ஒன்றாக கருதப்பட்டது துறவறம் ஆகும்.
இதனை உணராத மக்கள் இளமைக் காலத்தில் இன்பம் எனக்கருதி அதற்கு நேரத்தை ஒதுக்கும் பொழுது அவர்கள் எதனையும் சாதிக்காமல் வாழ்வதால் ஒரு மனிதரின் பருவ நிலைகளைக் கடந்து வயதான காலத்தில் கோல் ஊன்றி நடப்பதைக் காட்டிலும் வேறு எதுவும் இவ்வாழ்க்கையில் நிகழ்த்தி இருக்கமாட்டார்கள்.
இங்கு உட்பொருளாக கூறப்பட்டது: இளமைக்காலம் அரிய பருவம். அது நிரந்தரம் அல்ல. அதனால் அப்பருவத்தில் நற்செயல் செய்வதாகும்.

பாடல்: 

நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
குழவி யிடத்தே துறந்தார் ; - புரைதீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல் ஊன்றி
இன்னாங் கெழுந்திருப் பார்.

அருஞ்சொற்பொருள்:
குழவி - குழந்தை. இங்கு இளமைக்காலத்தைக் குறிக்கிறது.
புரைதீரா - குற்றம் நீங்குதல் இல்லாத
மன்னா - நிலை இல்லாத
இன்னாங்கு-பட்டாங்கு என்ற சொல்லுக்கு இணையானது. இவ்வுலகில் என்று பொருள் கொள்ளலாம்


வியாழன், 5 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு ‪நாலடியார்‬ : பாடல் 10

மலை சார்ந்த பகுதி அது. வானளவு எட்டும் மலைகள் கொண்ட அந்நாட்டின் அரசனைப் பார்த்து, அவன் அரண்மனையில் பாடி, பரிசு பெற ஒரு புலவர் வந்தார். அவர் அரசனைப் பார்த்து ஒரு காட்சியை விவரித்தார். " அரசே, ஒவ்வொரு மலரிலும் மிக மிகச் சிறிய துளியாய் தேன் இருக்கின்றது. இச்சிறு துளிகளை எல்லாம் தேனீ சேகரித்து தன் கூட்டில் கொண்டு போய்ச் சேர்த்து வைக்கின்றது. அவ்வாறு பல தேனீக்கள் சேர்ந்து கூட்டில் தேனைப் பெருக்குகின்றன. சேர்த்த தேனை அந்த தேனீக்கள் அருந்தாமல் மற்ற மிருகமோ அல்லது மனிதரோ பயன் படுத்துகின்றனர்." பிறகு அவர் மன்னனை நோக்கி "இந்த காட்சியப் பார்க்கும் பொழுது உனக்கு மனிதரில் எவ்வகை மனிதர் நினைவுக்கு வருகின்றனர்?" என்று கேட்டார். புலவரை வெல்வது கடினம் என்று நினைத்த அரசன், "நீங்களே சொல்லிவிடுங்கள் புலவரே!" என்று கூற, புலவர் விளக்கத் துவங்கினார்:
"மன்னரே, நல்ல துணி மணிகளை தான் உடுத்தாமலும், நல்ல உணவை தான் உண்ணாமலும், தமது உடம்பை அதனால் வருத்தியும், என்றும் அழியாத நல்ல செயல்களை செய்யாமலும், வறியவர்க்கு வேண்டியவற்றைக் கொடுக்காமலும், செல்வத்தைச் சேர்த்துவைக்கும் கருமி என்று அழைக்கப்படும் மனிதர் நினைவுக்கு வருகின்றனர். ஏன் என்றால், தேனீ எவ்வாறு தேனை இழக்கின்றதோ அதேபோல் அக்கருமி தன் செல்வத்தை இழப்பார்"
இதனை விளக்கும் நாலடியார் பாடல்:
உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும்
கெடாஅத நல்லறமும் செய்யார் - கொடாஅது
வைத்தீட்டி னார்இழப்பர், வான்தோய் மலைநாட!
உய்த்தீட்டும் தேனீக் கரி
அருஞ்சொற்பொருள் :
உடாஅதும் - உடுத்தாமலும்
செற்றும் - வருத்தியும்
உய்த்து - கொண்டுவந்து
ஈட்டும் - சம்பாதிக்கிற, சேர்த்துவைக்கிற


நாளும் ஒரு ‪நாலடியார்‬: பாடல் 9

அது ஒரு பெரிய வீடு. அவ்வீட்டில் உள்ள பெரியவரை நிறைய பேர் பார்த்தது கிடயாது. அதனால் மனிதர்கள் பலர் அந்த வீட்டைக் கடந்து போனாலும் அவரிடம் பேசுவதோ அல்லது அவரைப் பற்றி பேசுவதோ பார்த்திராத ஒன்றாகும். திடீரென ஒரு நாள் அங்கு வந்த பெரியவர் ஒருவர் அருகில் இருந்தவர்களிடம் "ஐயோ, இவ்வீட்டில் வாழ்பவர் எல்லாவற்றையும் இழந்தவர். அவர் ஒரு வறியர் " என்று உரக்கக் கூறினார். அருகில் இருந்தவர்களோ "அவ்வீட்டில் வாழும் நபரைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே" என்று ஆச்சரியத்துடன் கேட்டனர்.
அதற்கு அந்தப் பெரியவர் " வீட்டின் உள்ளே இருப்பவர் ஒழுங்காக நல்ல உணவை அவர் உண்டதில்லை. மற்றவரிடம் நன் மதிப்பை பெற்றதில்லை. நல்ல செயல் செய்து புகழ் அடைந்ததும் இல்லை. தனக்கு நெருங்கிய, பெறுவதற்கு அரிய நண்பர்கள் மற்றும் உறவினர்களின் துன்பத்தை நீக்கியதும் இல்லை. இரந்து தன்னிடம் வந்து பிச்சை கேட்பவருக்கும் நிதி வழங்குவது இல்லை. இத்தனை வகை "இல்லாமை" கொண்டு அவர் செல்வம் மட்டும் இருந்தாலும், செல்வம் இல்லதவராகத்தானே கருதப் படுவார்?" என்று கூறியதும், அனைவரும் ஆமோதித்தனர்.
இக்கருத்தை விளக்கும் நாலடியார் பாடல்:
உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான்
துன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே
வழங்கான் பொருள்காத் திருப்பானேல், அ ஆ
இழந்தான்என் றெண்ணப் படம்
அருஞ்சொற்பொருள்
ஒளி - மதிப்பு
துன் அரும் - சேருதற்கு அரிய
கொன்னே - வீணாக ; கொண்ணே பொருள் காத்திருப்பானேல் என்று கூட்டுக.
அஆ - ஐயோ


நாளும் ஒரு ‪நாலடியார்‬: பாடல் 8


இருண்ட மாலைப் பொழுது அது. மாலைப் பொழுதின் இருளுடன் இணைந்தது கார்மேகத்தின் இருள். மேகங்கள் மறைத்ததினால் விண்மீன்கள் எதுவும் கண்ணுக்கு புலப்படவில்லை. கருமேகங்கள் நகரத்துவங்கின. இடி இடித்தன. அந்தக் கருமைப் போர்வையில் ஒரு கிழிசல். கண்ணைப் பறிக்கும் வெண்மை. ஒரு நொடியில் இவ்வுலகைக் காட்டி மறைந்தது அந்த மின்னல்.
அவ்வகை மின்னலுக்கு எது ஒப்பிடப் படுகிறது? செல்வம் பல பெற்ற செல்வந்தர் "தாம் செல்வந்தர், தம்முடைய செல்வம்" என்று எண்ணி, பின் விளைவுகளையோ அல்லது பலரால் நம்பப்பட்ட மறு உலகத்தை அல்லது பிறவியை நினைக்காமல் இறுமாப்பு அடையும் செல்வந்தரின் செல்வத்திற்கு ஒப்பிடப் படுகிறது அந்த மின்னல். அந்த செல்வந்தர் நினைக்கும் முன்னரே அச்செல்வம் அவரை விட்டு பிரியும் தன்மையைக் கொண்டது.
பாடல் 8:
செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத
புல்லறிவாளர் பெருஞ்செல்வம் - எல்லில்
கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுபோல் தோன்றி
மருங்கறக் கெட்டு விடும்.
அருஞ்சொற்பொருள்:
செல்வுழி - செல் உழி - செல்லும் இடம்
எல்லில் - இரவில்
கொண்மூ - மேகம்
மருங்கு - இடம்
அற - முழுமையாக

நாளும் ஒரு ‪‎நாலடியார்‬ : பாடல் 7


நாம் பிறந்த இந்த பிறப்பு எப்பொழுது பிறப்பாக கருதப்படும்? நாம் நல்ல முறையில் கல்வி கற்று உயரும் பொழுதா? அல்லது நல்ல தொழில் செய்து உயரும் பொழுதா? நாம் நம் திறமையினால் நன்றாக பேசியோ அல்லது எழுதியோ அல்லது நடித்தோ மற்றவர்களை மகிழ்ச்சிப் படுத்தும் பொழுதா? அல்லது கலை பல கற்று படைக்கும் பொழுதா?
நம் காலம் நகர்ந்து கொண்டிருக்கிறது. நம் காலம் நகர்வதற்கான அறிகுறிகளை நமக்குச் சொல்வது அன்றாடம் கிழக்கில் உதித்து மேற்கில் மறையும் பகலவன் தான். அதனால் தானோ நம் முன்னோர்கள் எமன் அளப்பதற்கு படியாக கதிரவன் அமைவதாகக் கருதினர்? நாம் காணும் கதிரவன் உதிக்கும் நாட்கள் கூடக் கூட நமக்கான காலம் குறைகின்றது. இதனை அன்றுமுதல் இன்றுவரை அனைவரும் அறிந்ததே. அதனால் அதிகமாக தருமத்தை நாம் செய்ய வேண்டும். பொருட்செல்வத்தை செலவழித்து அருட்செல்வத்தை சேர்க்கவேண்டும். அவ்வாறு அருளடையவர் ஆனால் தான் நம்முடைய இந்தப் பிறப்பு பிறப்பாகக் கருதப்படும். இல்லையெனில் நாம் பிறந்ததற்கும் பிறக்காமல் இருப்பதற்கும் வேறுபாடில்லை.
இக்கருத்தை விளக்கும் பாடல்:
தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்
கூற்றம் அளந்துநும் நாளுண்ணும்; - ஆற்ற
அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின்; யாரும்
பிறந்தும் பிறவாதா ரில்
அருஞ்சொற்பொருள்
தோற்றம்சால் - ஒளி மிகுந்த
நாழி - அளப்பதற்கு பயன்படும் படி
வைகலும் - நாள்தோறும்
கூற்றம் - எமன்


நாளும் ஒரு ‪நாலடியார்‬: பாடல் 6


நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் நடக்கும் பொழுது இசை இணைந்திருக்கும். குழந்தை பிறக்கும் முன்னரே பாடல் பாடும் நம் அன்னையர், பிறந்த பின் தாலாட்டு, சிறாராக விளையாடும் பொழுது விளையாட்டுப்பாடல், திருமண நிகழ்வின் போதும் இசை மற்றும் பாடல் என்று தொடரும். இசைக்கு கை கொடுப்பதோடு முரசு, முழவு மற்றும் பறைக் கருவிகள் நடக்கும் நிகழ்வினை ஊராருக்குத் தெரிவிக்கவும் பயன்பட்டது. இவ்வாறு பயன்படுத்தப் பட்டது தான் தண்ணம் என்னும் பறைக்கருவி. இக்கருவியினை ஒருவர் காலமான பின் அடித்து, காலமான செய்தியை தெரிவிப்பர். இதன் குறிப்பு நாம் இன்று பார்க்கும் நாலடியார் பாடலில் எடுத்தாளப் பட்டுள்ளது.
அமெரிக்க நாட்டில் ஒரு சொலவடை அதிகம் சொல்லுவர்: "நிலையற்ற இவ்வுலகில் நிலையானவை வரியும் மரணமும் தான்". உண்மை தான் எல்லாவற்றையும் நாம் சரி செய்துவிடலாம். அல்லது தப்பித்து விடலாம். ஆனால் வரிகளில் இருந்தும் நமக்கு நிகழப்போகும் மரணத்தில் இருந்தும் தப்பிக்க முடியாது. நமக்கான நேரம் முடியும்பொழுது கூற்றுவன் நம்மை அழைத்துச் சென்று விடுவான். அதனால் பெருமை தரக் கூடிய செல்வத்தை தம் தேவைக்கு அதிகமாக வைத்திருக்கும் செல்வந்தர்களே, உங்கள் மிகுதிச் செல்வத்தை மற்றவருக்கு காலம் தாழ்த்தாமல் இன்றே கொடுத்து உதவுங்கள்.
இக்கருத்தைத் தான் நாலடியார் பாடல் 6 நமக்குக் கூறுகிறது.
நாலடியார் ஒரு தொகுப்பு நூல் என்று கூறுவர். அதற்கு சிறு சான்றாக சென்ற பாடலும் இந்தப் பாடலும் அமைந்துள்ளது. சென்ற பாடலில் கூற்றுவனிடம் தப்பிபதற்கு மற்றவர்களுக்கு கொடுங்கள் என்று சொல்லப்பட்டது. இந்தப் பாடலில், "கூற்றுவனிடம் இருந்து தப்பிப்பது என்பது இயலாது. நம் தேவைக்கும் அதிகமாக நாம் திரட்டிய செல்வத்தை மற்றவருக்கு கொடுத்து உதவுங்கள்" என்று சொல்லப்பட்டுள்ளது. காரணம் என்னவென்றாலும் பரவாயில்லை.. நாம் செய்ய வேண்டிய காரியம் இது தான்: நமக்குள்ள சிறிய காலத்தில் நம்மால் ஆன உதவி மற்றும் நற்செயல்களை மற்றவருக்குச் செய்வோம்.

பாடல் 6:
இழைத்தநாள் எல்லை இகவா; பிழைதொரீஇக்
கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை; - ஆற்றப்
பெரும்பொருள் வைத்தீர் வழங்குமின், நாளைத்
தழீஇம்தழீஇம் தண்ணம் படும்.
அருஞ்சொற்பொருள் :
இழைத்த - உண்டாக்கிய
இகவா - கடக்க மாட்டாது
தழீஇம் - ஓசைக் குறிப்பு
தண்ணம் - காலமானவுடன் ஒலிக்கப் படும் பறை


நாளும் ஒரு ‪‎நாலடியார்‬: பாடல் 5


ஒரு இளைஞர். கல்லூரிப் படிப்பு முடிந்து தொழில் துவங்கி அந்தத் தொழிலும் நல்ல முறையில் வளர்ந்தது. அதனால் அவருக்கு பொருட்செல்வம் பெருகத் துவங்கியது. அவ்வாறு பெற்ற பொருளை என்ன செய்யலாம்? எவ்வாறு பயன் படுத்தலாம்? அச்செல்வத்தை பிறகு பயன்படுத்தலாம் என்று சேர்த்து வைக்கலாமா? அதனால் பயன் உண்டாகுமா?
பின்னொரு காலத்திற்கு என்று வைக்காமல் காலம் தாழ்த்தாமல் உடனே மற்றவருக்கு கொடுத்து உதவுதலும் ஒரு வழி தானே? அவ்வாறு உதவினால் என்ன நடக்கும் என்று நம் முன்னோர்நம்பினர்? உதவும் அன்பர்கள் ஒரு கொடிய வழியில் பயணிப்பதில் இருந்து தப்பிப்பார்கள் என்றனர். அது என்ன கொடிய வழி? அங்கு பயப்படும் அளவுக்கு என்ன பயணம்? பாலை நிலத்தில் இருக்கும் அவ்வழியில் ஏழை செல்வந்தர், இளையோர் மூத்தோர், ஆண் பெண் என்று எவ்வகை குழுவினருக்கும் பாரபட்சம் இல்லாமல் நடுவு நிலையுடன் திகழும் எமன் தனது கயிற்றில் கட்டி அழைத்துச் செல்வது தான் அப்பயணம். அப்பயணத்தின் கொடுமையில் இருந்து தப்பிக்க காலம் தாழ்த்தாமல் கிடைத்த செல்வத்தை மற்றவருக்கு கொடுத்து அறவழியில் செலவிடுக என்றனர்.
இதனை விளக்கும் பாடல் தான் நாலடியார் பாடல் 5:
என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்
பின்னாவ தென்று பிடித்திரா - முன்னே
கொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம்
தொடுத்தாறு செல்லும் சுரம்.
அருஞ்சொற்பொருள்:
என்னானும்: ஏதாவது
உற: சேர
உயப்போவர் : தப்பிப்போவர்
கோடில் : கோடு + இல் ; கோணுதல் இல்லாத ; நடுவு நிலைமை உள்ள
கூற்றம் : எமன்
ஆறு : பாதை, வழி
சுரம் - பாலை நிலம்


நாளும் ஒரு ‪நாலடியார்‬ : பாடல் 4


ஓடி ஆடி விளையாடுகிறது ஒரு சின்னக் குழந்தை. சிறிது காலம் கடக்கிறது. பள்ளிப் பருவம் முடிகிறது. பின்பு பதின்மப் பருவம், கல்லூரிப் பருவம் என்று ஒவ்வொரு பருவம் வந்து முடிகிறது. இவ்வாறாக நிற்காமல் ஆயுள் மற்றும் வாழ்நாள் ஓடிக்கொண்டிருக்கிறது. பின் சிறிது காலத்தில் சினத்துடன் வரும் எமன் வந்து உடலைச் சார்ந்திருந்த உயிர் பிரிகிறது.
காலமும் நம் ஆயுளும் நிற்காமல் தொடர்வது போல் நம்மிடம் நிலைத்திருக்கும் என்று நாம் நினைக்கும் பொருட்கள் நம்மிடமிருந்து பிரிவது இயல்பு. இதனைப் புரிந்து உணர்ந்துகொண்டு நமக்கு பொருத்தமான நற்செயல்களை விரைவாக செய்யத் துவங்கி, அவற்றை செய்து முடிக்கவேண்டும்.
இதனை ஓசை நயத்துடன் விளக்குகிறது நாலடியார் பாடல் 4.
பாடல்:
நின்றன நின்றன நில்லா எனவுணர்ந்
தொன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று.

அருஞ்சொற்பொருள்:
ஒன்றின: பொருந்திய
வல்லே: விரைவாக
செறுத்து: சினம், கோபம்
கூற்று: எமன்


நாளும் ஒரு ‪நாலடியார்‬ : பாடல் - 3



வீரம் மிகுந்த மன்னன் ஒருவன் இருந்தான். அவன் படைவீரர்களை நல்ல முறையில் நிர்வகித்து போர்கள் பலவற்றில் வென்றதானால் அவன் யானையின் பிடரில் அமர்ந்து வலம் வந்தான். அவன் யானையின் பிடரில் அமர்ந்ததனால் யானை பிடர் ஒளி விளங்கித் திகழ்ந்தது. அவன் அவ்வாறு வலம் வரும்பொழுது சேவகர்கள் அவனுக்கு குடை பிடித்து வருவர். இவ்வாறு அவன் படைக்கு நல்ல தலைவனாய்த் திகழ்ந்தான்.
அவ்வாறு இருந்த மன்னனுக்கு நல்வினை போய் தீவினை வந்தால் என்ன நடக்கும்? நிலை மாறு படும். அவனை விட வீரத்தில் சிறந்த மன்னன் அவனை வெல்வான். வென்ற பின் தோல்வியுற்ற மன்னனின் செல்வம் பறித்துக்கொள்ளப் படும். செல்வம் மட்டுமல்ல, தோற்ற மன்னனின் மனைவியையும் வென்ற மன்னன் கொண்டு போக நேரிடும். அனைத்தும் கொண்டிருந்த மன்னன் அனைத்தையும் இழப்பது என்பது நடக்கக் கூடிய ஒன்று தான். இதில் வியப்பில்லை.
நிலையாமையை இவ்வாறு விளக்கும் பாடல் உட் பொருளாக நமக்கு உணர்த்துவது: செல்வம் இருக்கும் பொழுது மற்றவர்களுக்கு பயனுள்ள செயல்களை செய்ய வேண்டும்.
பாடல்:
யானை யெருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை
வினைஉலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள
அருஞ்சொற்பொருள்:
எருத்தம்: பிடர், கழுத்தின் பின் புறம்
பொலிய : ஒளி விளங்க
உலப்ப - கெடுக்க ; இப்பாடலில் வினை என்பது தீவினையைக் குறிக்கிறது. அதனால் வினை உலப்ப என்று கூறப்பட்டது.


நாளும் ஒரு ‪நாலடியார்‬ : பாடல் 2

செல்வத்தின் தன்மை என்ன? செல்வத்தின் இயல்பு நடுவு நிலை என்றால் நம்ப முடிகிறதா?
சக்கரத்தில் உள்ள ஆரம் ஒரு நொடி மேலிடத்தில் இருக்கும். மறு நொடி கீழே இருக்கும். அது போல் இன்று ஒருவரிடம் இருக்கும் செல்வம் நாளை மற்றவரிடம் இருக்கும். இவ்வாறு ஒருவரிடம் இருந்து மற்றவரிடம் செல்வதால் செல்வத்தின் நிலையாமையை உணர்த்தி செல்வம் நடுவு நிலை கொண்டது என்றனர் நம் முன்னோர்.
ஒரு ஊரில் பெருஞ்செல்வர் வாழ்ந்து வந்தார். அவருக்கு பெரிய வயல் இருந்தது. அவ்வயலில் எருமைக் கடாக்கள் பல உழைத்து அதனால் அவருக்க நல்ல விளைச்சல். செல்வம் மற்றும் வளம் கொழிக்கும் அவர் என்ன செய்யலாம்? செல்வம் அவரிடம் அல்லது அவரது குடும்பத்தினரிடமே இருக்கும் என்று உத்தரவாதம் இருந்தால் அவர் என்ன செய்வார்? நாம் மேற் சொன்னது போல் இன்று செல்வம் உங்களுக்கு உண்டு, ஆனால் நாளை இருக்காது என்றால் என்ன செய்வார்? நம்மிடமிருந்து செல்வம் விலகாமல் இருக்கும் என்ற நம்பிக்கை தொடருமானால் செல்வத்தைப் பகிர்வது கடினமாகும். இன்று இருக்கும் நாளை இருக்காது என்றால் இருக்கும் போது பகிர்தல் எளிதாகும்.
இதனைத் தான் இரண்டாம் நாலடியார் பாடல் நமக்கு விளக்குகிறது. நல்ல விளைச்சலோடு செல்வம் கொழிக்க விளங்கும் செல்வந்தர் செல்வம் அவரிடம் இருக்கும்பொழுது பலரோடு சேர்ந்து தனது விளைச்சலைப் பகிர்ந்த உண்ண வேண்டும் என்று வேண்டுகிறது.
பாடல்:
துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க;
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.
அருஞ்சொற்பொருள்:
துகள்தீர் : குற்றமற்ற
பகடு: எருமைக் கடா
அகடு உற: நடுவு நிலைமை பொருந்த
சகடக்கால்: வண்டிச்சக்கரம்


நாளும் ஒரு ‪‎நாலடியார்‬: பாடல் 1

ஒரு செல்வந்தர் அமர்ந்திருக்கிறார். அவருக்கு அருகில் அவருடைய இணையாள் (மனையாள்) அமர்ந்து அறுசுவைகளான கசப்பு, உவர்ப்பு, இனிப்பு துவர்ப்பு, புளிப்பு, கார்ப்பு என்பவற்றைக் கொண்டு சமைக்கப்பட்ட உணவினை அன்பு மிகுதியால் வழங்குகிறார். செல்வ மிகுதியால் நன்கு உண்டு வாழும் அச்செல்வந்தர் ஒரு உருண்டை (கவளம்) உணவு போதும் மறு உருண்டை வேண்டாம் என்று கூறுகிறார். அவ்வாறு செழிப்புடன் வாழ்கிறார்.
திடீரென நிலை மாறுகிறது. தனது செல்வத்தை இழக்க நேரிடுகிறது. அவர் ஒரு சுவை கொண்ட கூழ் ஒரு கவளமாவது கிடைக்குமா என்று ஏங்குகிறார். மற்றவரிடம் பிச்சை கேட்கும் நிலை ஏற்படுகிறது. ஓர் இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு செல்வதால் செல்வம் என்றனரோ என்றெண்ணத் துவங்குகிறார். இவ்வாறு நிலை மாறுவதால் செல்வம் நிலையானது அல்ல என்பது அவருக்குப் புலப்படுகிறது.
இதனைத் தான் நமக்கு நாலடியார் முதல் பாடல் நமக்கு விளக்குகின்றது.
பாடல்:
அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின் செல்வம்ஒன்
றுண்டாக வைக்கற்பாற் றன்று.