நாம் எப்போது களிப்புடன் இருப்போம்? எப்போது மகிழ்ச்சி அடைவோம்? இன்பம் நிறைந்திருக்கும் வழியில் செல்வதற்கு என்ன வழி? இவ்விணாக்களுக்கு என்ன விடை சொல்கின்றனர் நம் முன்னோர்? அவர்கள் இன்பத்தை பேரின்பம், சிற்றின்பம் என்று வகுத்தனர். இல்வாழ்க்கை சார்ந்த இன்பங்களை சிற்றின்பமாக சித்தரித்தனர். மற்றவருக்கு உதவுவது, அறச்செயல்களை செய்வது, துறவறம் பூண்டு ஞானச் சேவை செய்வது போன்ற செயல்களை அவர்கள் பேரின்பமாகப் பார்த்தனர்.
இல்வாழ்வில் இணையாளுடன் இணைந்து மற்ற இல்லம் சார்ந்த இன்பங்களில் வாழ்நாள் முழுதும் திளைத்து இருக்கும் மாந்தரின் நிலை எத்தகையது? வாய் பேச்சின் வலிமை இழந்துவிடுவர். கோல் ஊன்றி உடல் சோர்ந்து நடப்பர். பற்கள் அனைத்தும் விழுந்துவிடும். உடம்பாகிய பண்டம் பழிக்கப்படும்.இவ்வகை வாழ்வை மேற்கொண்டவருக்கு இன்பம் (பேரின்பம்) அடையும் வழி இயலாததாகும்.
இதனை விளக்கும் நாலடியார்ப் பாடலில் உட்பொருளாக கூறப்படுவது: நம் வாழ்வை சிற்றின்பச் செயல்களில் மட்டும் செலவழிக்காமல் பேரின்பச் செயல்களையும் செய்து வாழ்வை நிறைவாக்க வேண்டும்.
பாடல்:
சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப்
பல்கழன்று பண்டம் பழிகாறும் - இல்செறிந்து
காம நெறிபடருங் கண்ணினார்க் கில்லையே
ஏம நெறிபடரு மாறு.
அருஞ்சொற்பொருள்:
பண்டம் - இங்கு உடம்பைக் குறிக்கிறது
செறிந்து - புணர்ந்து
கண்ணினர் - சேர்ந்தவர் / பார்த்தவர்
ஏமம் - களிப்பு, இன்பம்
ஆறு - வழி, பாதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக