கார்த்திகைத் திங்கள் இறுதி வாரக் காலை அது. மரங்களும் செடி கொடிகளும், பனிக் காலத்திற்கு, தங்களை ஆயத்தம் செய்துகொண்டிருந்தன. பசுமையுடன் திகழ்ந்த அந்த புல் வெளியில், புற்களின் நுனிமேல் இருந்த சிறு சிறு பனித் துளிகள், நம் கண்களைக் கவர்ந்து, பார்ப்பதற்கு இனிதாய், நம் மனதை வருடும் காட்சியாய் அமைந்தது. சிறிது நேரம் கழித்து கதிரவன் உதித்து, கதிர்க்கரங்கள் நீட்ட, புல் நுனிமேல் இருந்த பனித்துளிகள் அவ்வொளியை பிரதிபலிக்க, அவை இன்னும் நம் கண்களைக் கவர்ந்தன. பிறகு அக்கதிர்க்ககரங்கள் அளித்த வெப்பத்தின் காரணமாக அந்த பனித்துளிகள் நீராவியாகி மறைந்தன.
அந்த பதித்துளிகளின் சிறிய வாழ்நாள் போல் நம் வாழ்வும் நிலையற்றது என்பதை உணர்ந்து, காலம் தாழ்த்தாது நாம் இன்றே நல்ல செயல்களையும், அறச் செயல்களையும் செய்ய வேண்டும். தற்போது தான் நன்றாக இருந்தான், நம்மிடம் நன்றாக பேசினான், திடீரென காலமகிவிட்டானென்று அவனுடய நண்பர்களும் உறவினர்களும் வருத்தப்பட்டு அழ, ஒருவனின் வாழ்க்கை முடியும் என்பதால், காலம் தாழ்த்தாது நல்ல செயல்கள் செய்வோமாக.
பாடல்:
புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை ; - இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்
சென்றான் எனப்படுத லால்.
பொருளறிந்து படிக்க சொல் பிரித்த பாடல்:
'புல் நுனிமேல் நீர்போல் நிலையாமை' என்று எண்ணி,
இன்னினியே செய்க அறவினை-'இன்னினியே
நின்றான், இருந்தான், கிடந்தான், தன் கேள் அலறச்
சென்றான்' எனப்படுதலால்!
அருஞ்சொற்பொருள்:
இன்னினியே - இப்பொழுதே
தன் கேள் - தன் நண்பர்கள், உறவினர்கள்
பழந்தமிழ்ப்பாடலை எடுத்துச் சீர்பிரித்துப் பொருள் விளக்கிய விதம் அருமை.
பதிலளிநீக்குஇந்த நாலடியாரை நோக்க,
“நீரில் குமிழி இளமை நிறைசெல்வம்
நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் - நீரில்
எழுத்தாகும் யாக்கை நமரங்காள் என்னே
வழுத்தாத தெம்பிரான் மன்று“
எனும் குமரகுருபரனின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.
தங்களது சீரிய தமிழ்ப்பணி சிறக்கட்டும்.
தங்களைத் தொடர்கிறேன்.
நன்றி!
அன்பிற்கினிய நண்பரே,
பதிலளிநீக்குஉங்களது கனிவான வார்த்தைகளுக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.